'அரசியல் கட்சிகள் ரூ.2,000 வரைதான் ரொக்கமாக நன்கொடை பெறலாம் என்கிற விதி நடைமுறை சாத்தியமல்ல என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'அரசியல் கட்சிகள் ரூ.2,000 வரைதான் ரொக்கமாக நன்கொடை பெறலாம் என்கிற விதி நடைமுறை சாத்தியமல்ல என்பது சரியா?'

கணக்கிட முடியாது
நன்கொடையை ரொக்கமாகப் பெறலாம் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துவிட்டாலே, அந்த ரொக்கப் பணத்தின் அளவை எவராலும் கணக்கிட முடியாது. எத்தனைக் கொடையாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதையோ, எத்தனைப் பேர் அந்தத் தொகையைப் பெறுகிறார்கள் என்பதையோ கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இந்த நடைமுறை சாத்தியமல்ல என்பது சரியே.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

நிதர்சனம்
அரசியல் கட்சிகள் ரூ.2,000 வரைதான் ரொக்கமாக நன்கொடை பெறலாம் என்று விதி ஏற்படுத்தப்பட்டாலும் பெருவணிக நிறுவனங்கள் கொடுக்கும் பெரிய அளவிலான தொகையைத் தடுக்கவே முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் இல்லாமல் நம் நாட்டில் அரசியல் கட்சி நடத்த முடியாது என்பது தெரிந்ததே. பெரும்பொருள் இல்லாத அரசியல் கட்சி, கட்சியே அல்ல என்பதே நிதர்சனம்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

வரவு - செலவு
இது சாத்தியம்தான். இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை நன்கொடையாகத் தருவோர் காசோலை மூலம் தர வேண்டும் என்று விதி இருப்பதனால் யார் யார் எவ்வளவு தொகையை கொடுத்தார்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் கட்சிகள் தங்கள் கட்சியின் வரவு - செலவுகளை வெளிப்படுத்த தேவையில்லை என்பது ஊழலுக்கே வழிவகுக்கும்.
எஸ்.பி. தசரதன், வேலூர்.

பொருந்தாது
எல்லா அரசியல் கட்சிகளும் பணம் படைத்தவை என்று சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் மக்கள் தொண்டுக்காக வாழ்பவர்கள். எனவே அப்படிப்பட்டவர்கள் நடத்தக்கூடிய, பொருள் வசதி குறைந்த கட்சிகளுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்களுடன் அரசு கலந்துபேசி ஒரு கணிசமான தொகையை ரொக்கமாக வழங்கலாம் என்று விதியை மாற்றுவதே சரி.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

பலன் தராது
தற்போது பண மதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் ரூ.2,000 என்பது மிகவும் சாதாரணமான தொகைதான். அந்தத் தொகைதான் ஒரு அரசியல் கட்சி ரொக்கமாக நன்கொடை பெறவேண்டிய அதிகபட்சத் தொகை என்று நிர்ணயம் செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு எந்த வகையிலும் அரசு எதிர்பார்க்கும் பலனைத் தராது. எனவே இது சாத்திமற்றது.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

மிகையல்ல
ஊழலின் ஊற்றுக்கண் அரசியல் கட்சிகளே என்று கூறினால் அது மிகையல்ல. நன்கொடை என்பது விரும்பிக் கொடுப்பது. அதற்கு எப்படி அளவு நிர்ணயிக்க முடியும்? எழுத்தில் இரண்டாயிரமும், எழுதாமல் இருபதாயிரமும் கொடுத்தால் எந்த அரசியல் கட்சி வேண்டாமென்று மறுத்துவிடும்? நன்கொடைக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது கூடாது.
எம். ஜோசப் லாரன்ஸ்,
சிக்கத்தம்பூர் பாளையம்.

அலட்சியம்
தேர்தல் ஆணையம், தற்போது இருக்கிற அதிகாரத்தையே முறையாக பயன்படுத்த பயந்து பாரபட்சத்துடன் நடந்து கொண்டிருக்கிறது. தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்று கூறிக் கொள்வதைத் தவிர்த்து நடைமுறைக்கு சாத்தியமான விதிகள் மூலம் அரசியல் கட்சிகளின் ஊழலைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கடைப்பிடிக்க இயலாத விதிகளை கட்சிகள் அலட்சியப்படுத்தும்.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

கண்கூடு
இந்த முடிவு சரியானதே. பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் நன்கொடை வாங்கிதான் கட்சியை நடத்த வேண்டிய நிலையிலோ, தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையிலோ இன்று எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பது கண்கூடு. அரசை ஏமாற்றி பொய்க் கணக்குக் காட்டவே பல தொழில் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதியளிக்கின்றன. இந்த முடிவில் மாற்றம் செய்தல் கூடாது.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

புதிதல்ல
இது நடைமுறை சாத்தியமற்றது. எத்தனை விதிகள் ஏற்படுத்தி அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்தினாலும், அவை அந்த விதிகளை மீறுவதற்கு புதுப்புது உத்திகளைக் கண்டுபிடித்துத தப்பிப்பது ஒன்றும் புதிதல்ல. தேசியக் கட்சிகள் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து பல கோடிகளை நன்கொடை யாகப் பெற்றது இப்படித்தானா? எனவே இது நடைமுறை சாத்தியமல்ல.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

புதிய விதி
பெருநிறுவனங்களிடமிருந்து அதிக தொகையை அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெறுகின்றன. அக்கட்சிகள் ஆட்சியமைத்தால் தங்களுக்கு நன்கொடையளித்த நிறுவனங்களின் விதிமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றன. அரசியல் கட்சிகள் நன்கொடையை காசோலை அல்லது பற்று அட்டை மூலமாகத்தான் பெற வேண்டும் என்ற புதிய விதி வர வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சட்டதிட்டங்கள்
நன்கொடை விஷயத்தில் அரசியல் கட்சிகள் அனைத்துமே விதிகளை மீறி செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனினும் எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை உள்ளதால் அரசியல் கட்சிகள் நன்கொடையாக பெருந்தொகையை ரொக்கமாக பெறுவதை தடுக்கும் வகையில்தான் இதுபோன்ற விதி இயற்றப்பட்டுள்ளது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் நடக்க வேண்டும்.
ஜெ. கஜேந்திரன், படப்பை.

புறக்கணிப்பு
ஒவ்வொரு அரசியல் கட்சியும் பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அரசியல் கட்சிகள் ரூபாய் 2,000 வரைதான் ரொக்கமாக நன்கொடை பெறலாம் என விதி இருக்க அந்தக் கட்சிகள் எப்படி கோடிக்கணக்கில் நன்கொடை பெற முடிந்தது? சட்டமும், விதியும் புறக்கணிக்கப்பட்டால் விதிகள் நடைமுறை சாத்தியமற்றுத்தான் போகும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கட்டாயம்
இது நடைமுறை சாத்தியமல்ல என்பது சரிதான். மக்களிடம் பெறும் நன்கொடைக்கு வருமான வரிவிலக்கு அளித்தல் கூடாது. அரசியல் கட்சிகளும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் பணபலத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரிவான சட்டம் இயற்றுதல் வேண்டும். நன்கொடைகளை வங்கிகள் மூலம் செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

போலிப் பெயர்கள்
அரசியல் கட்சிகள் நன்கொடை என்ற பெயரில் பெறும் லட்சக்கணக்கான ரூபாயை ஒவ்வொரு 2000 ரூபாய்க்கும் ஏதாவது போலிப் பெயரில் ரசீது எழுதி கணக்கில் காட்டி விடுவார்கள். மேலும் பொதுகூட்டங்களில் உண்டியல் வசூலில், சாதாரணமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போட்டுவிடுகிறார்கள். இதையெல்லாம் எப்படி தணிக்கை செய்து கண்டுபிடிக்க முடியும்?
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

யானைப்பசி
தேர்தல் என்றாலே பணம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணம் மக்களிடம் வேரூன்றிவிட்டது. எனவே தேர்தலைச் சந்திக்க பெரும் தொகையைக் கட்சிகள் செலவிட வேண்டியுள்ளது. ரூ.2000 நன்கொடை என்பது யானைப் பசிக்கு சோளப் பொரியாகவே இருக்கும். தேர்தல் ஆணையத்தின் இவ்வறிவிப்பு கட்சிகளிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.
இராம. கோவிந்தன், தென்னிலை.

தவறான வழி
சாதாரண அரசியல் கட்சிகூட தனது பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்ள, நன்கொடையையே பெரிதும் நம்பியிருக்கிறது. அப்படியிருக்கையில் ரொக்க நன்கொடைக்கு வரையறை நிர்ணயிப்பது பயனற்ற செயல். குறைந்த தொகை மட்டுமே ரொக்கமாகப் பெறலாம் என்பது கட்சிகள் தவறான கணக்குத்தர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி, தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.
எழில் சோம. பொன்னுசாமி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com