'ராகுல் காந்தியின் தலைமையால் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'ராகுல் காந்தியின் தலைமையால் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறுமா?' 

புதிய சகாப்தம்
ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சி புதிய சகாப்தம் பெறும். ஆளும் கட்சிக்கு அறைகூவல் விடுவதிலிருந்து தெரியவில்லையா அவரின் அரசியல் அணுகுமுறை? தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இவர்களின் அரசியல் ஞானம் இவரிடம் இல்லாமலா போகும்! ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சி உறுதியாகப் புதுப் பொலிவு பெறும்!
கே. பழனிச்சாமி, செங்கோட்டை.

புதுப் பொலிவு பெறும்
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல் காந்தி, இளைஞர்களை ஈர்த்து தன்வயப்படுத்தும் வகையில் தொண்டர்களை உருவாக்கும் திறமை தனக்கு உண்டு என்பதை நிரூபிக்குமாறு அவரது கட்சி செயல்பாடுகள் நம்பிக்கைகுரியதாக அமைந்தால், அவரது இணக்கமான மாற்றங்கள் இருக்குமானால், அவரது தலைமையில், காங்கிரஸ் புதுப் பொலிவு பெறும். 
வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, 
வரட்டணப்பள்ளி.

வாய்ப்பு அதிகம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்திருக்கிறார். இப்போது அவருடைய வாரிசான ராகுல் காந்தி, தலைமைப் பதவிக்கு வருவதுதானே அந்தக் கட்சியின் வழக்கம். இளம் தலைவர் என்பதால் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும். அடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. ராஜீவ் காந்தி போலவே ராகுல் காந்தியும் துடிப்பாகச் செயல்படுவதால், காங்கிரஸ் உன்னத நிலையை அடையும். 
எஸ். மோகன், கோவில்பட்டி.

வெளிப்படைத் தன்மை
அரசியலில் மிகவும் சவால் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். பழைய காங்கிரஸ் நிலைப்பாடுகளை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செயல்திட்டம் தன்னிடம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக அவர் இப்போதே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ராகுல் காந்தியின் வேகம், செயல்பாடு இருந்தால்தான் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறும்.
ஆர். ராகவி, பட்டுக்கோட்டை.

புது வெளிச்சம்
சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கட்சிக்காரர்கள் பல காலம் வற்புறுத்தியும், அனுபவ முதிர்ச்சி அடையும் வரை காத்திருந்து, ஏற்பதென்பது பாராட்டுக்குரியது. இருண்டு கிடக்கும் தங்கள் எதிர்காலத்திற்கு இவரின் தலைமையானது புது வெளிச்சம் பாய்ச்சும் என எண்ணற்றோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீ. வீராங்கன், சென்னை.

பொலிவு பெறாது
நேரு குடும்பத்தின் வாரிசு என்ற ஒரே காரணத்தால் , ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருப்பது தவறு. இவர் நாட்டுக்கும் கட்சிக்கும் செய்த தொண்டும் தியாகமும் என்ன? காங்கிரஸ் கட்சியில் அனுபவமும், திறமையும், ஆளுமைப் பண்பும் உடைய மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, ராகுல் காந்தி தலைமை வகிக்க விரும்பினால் உள்கட்சியில் எதிர்ப்புகள் ஏற்பட்டு நிலைமை மோசமாகும். எனவே, காங்கிரஸ் கட்சி பொலிவு பெறாது.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

தலைமை சரியில்லை
மகாத்மா காந்தி உயிருடன் இருந்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தலைமை சரியில்லை. உட்பூசல்கள் இருந்தது என்பதற்காகத்தான், நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிறைவேற்றாததால் இன்றுவரை கட்சியின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ராகுலின் தலைமையில் எவ்விதப் புதுப்பொலிவும் ஏற்படப் போவதில்லை.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

கட்சி பொலிவுறும்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையும். நேருவின் மதச்சார்பின்மை கொள்கை இன்றைய இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. வாரிசு தலைமை என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் அவர் தலைமையில் கூற இயலாது. ராகுல் போன்ற ஓர் இளைஞரைத் தவிர, வேறு யார் தலைமையேற்றாலும், இன்றைய மதவாத சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாது. எனவே, ராகுல் தலைமை வரவேற்கக்கூடியதே.
பூ.சி.இளங்கோவன், அண்ணாமலை நகர்.

சகிப்புத்தன்மை
வரவேற்போம். மிகவும் சகிப்புத்தன்மையோடு செயல்பட்டு வரும் காங்கிரஸ், தற்போது புதுபொலிவு பெற அழைப்பு விடுக்கிறது. ஓர் இளமைத் துடிப்புடன் தொடரவுள்ள தலைமை, எதிர்வரும், இலக்குகளைச் சந்திக்க வேண்டும். பேரிடராய் வரும் சமுதாய முன்னேற்றத்திற்கான வழிகளை சமன் செய்ய ராகுல் காந்தி சகிப்புத்தன்மையை மேற்கொண்டால் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறும்.
சி. ஸ்டீபன்ராஜ், தருமபுரி.

கட்சி பொலிவு பெறாது
ராகுல் காந்தியின் தலைமையால் அவர் வேண்டுமானால் புதுப்பொலிவு பெறுவார். ஆனால், காங்கிரஸ் புதுப்பொலிவு என்பது இனி 'அத்தைக்கு மீசை முளைத்தால்' என்பதுபோல்தான்.
கே.எஸ்.சுப்பிரமணியன், மதுரை.

ஜனாயக மீட்சி
ராகுலின் தலைமைப் பதவியால் விரிவானதொரு பொதுத்தலைமை புரட்சியே உருவாகும். குறிப்பாக இளைஞர் மத்தியிலே புதிய நம்பிக்கையும், பொதுமக்கள் மத்தியிலும் புதிய அரசியல் மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனநாயக மீட்சி ஏற்படுவது உறுதி.
ஆ. தங்கசாமி, மண்டைக்காடு.

நெம்புகோல்
காங்கிரஸ் புதுப்பொலிவு பெறும். 47 வயதான ராகுல் காந்தி, 13 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ள காங்கிரஸ் தலைவர். அவர் வழிகாட்டுதலின்படி ஜனநாயக உட்கட்சித் தேர்தலின் மூலம் கட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட இளைய இளைஞர்களின், ராகுலின் நெம்புகோல் மூலம் பாஜக என்கிற பெரிய மலையை மக்கள் செல்வாக்கு மூலமாகப் புரட்ட முடியும் .
எஸ். நாகராஜன், சென்னை.

பாரம்பரிய கட்டமைப்பு
ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறும். ராகுல் இளைஞராக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குப் பாரம்பரியமான கட்டமைப்பு உள்ளது. ஆலோசனைகள் கூற அனுபவமிக்க அரசியல் வல்லுநர்கள் அக்கட்சியில் இன்றும் இருக்கிறார்கள். அவருக்கு மக்கள் உறுதுணை உள்ளது. அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும்.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

இளைஞரே தேவை
ராகுல் காந்தி ஓர் இளைஞர். எதிர்கால இந்தியா ஓர் இளைஞர் ஆளுகையின்கீழ் வரவேண்டும். பாரத மண்ணுக்குப் பரம்பரையாக தியாகம் செய்த குடும்பத்தில் இருந்து வருபவர் ராகுல். இவர் தலைமையேற்றால் அரசியல்வாதிகளுக்கே உரித்தான அராஜகம், ஊழல், வெற்று ஆடம்பரம் போன்றவற்றில் ஈடுபட மாட்டார். தலைமைப் பதவி ஏற்றதன் மூலம் காங்கிரஸ் புதுப்பொலிவு பெறும்.
சி. குறளமுதன், தே.பவழங்குடி.

வெற்றி நிச்சயம்
தேசத்தொண்டில் ஒரு குடும்பமே தியாகம் செய்த வரலாற்றுச் சிறப்புக்கு உரிய பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைமையேற்கச் செய்துள்ள அரிய முயற்சி நிச்சயம் வெற்றிக் கனிகளை ஈட்டித் தரும். காங்கிரஸ் புதுப்பொலிவுடன் நாட்டை மீண்டும் வழிநடத்தும்.
அ.மு.கா. அன்வர்தீன், திட்டச்சேரி.

கனவு பலிக்காது!
சந்தேகம்தான். மீண்டும் காங்கிரஸ் புதுப்பொலிவு பெற்று எழுந்து நிற்கச் செய்வது, ராகுல் காந்தி என்ற அனுபவமற்றவரால் முடியாது. காங்கிரஸுக்குப் புதுப்பொலிவு என்பது சில மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், இந்தியா முழுமைக்கும் புதுப்பொலிவு என்பது கனவே!
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com