கடந்த வாரம் கேட்கப்பட்ட "நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது நியாயமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. நாடாளுமன்ற நிகழ்வுகளுக்காக நிமிடத்திற்கு

கண்ணியத்தைச் சிதைக்கிறது
நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. நாடாளுமன்ற நிகழ்வுகளுக்காக நிமிடத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாவதால், நாடாளுமன்ற முடக்கங்கள் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. எதிர்க்கட்சிகள் என்றால் நாடாளுமன்றம் நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற தவறான முன்னுதாரணம், நாடாளுமன்ற கண்ணியத்தைச் சிதைக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தடைபடுகின்றன. போராட்ட குணம் மக்களிடையே பரவுகின்றது.
ச. சுப்புரெத்தினம்,
மயிலாடுதுறை.

உள்ளுணர்வு இருந்தால் ...
நியாயமில்லாததைத்தானே நமது அரசியல்வாதிகள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரம் அடைந்த பின்பு செய்து கொண்டிருக்கிறார்கள்? மக்களின் வரிப்பணத்தில்தான் நாடாளுமன்றம் இயங்குகிறது என்ற ஓர் உள்ளுணர்வு இருந்தால் போதுமே! நாடு வளம் காணுமே!
நாடாளுமன்றம் என்பது மக்களின் அன்றாடப் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றில் இருந்து அவர்கள் நிரந்தரமாக விடுபட என்னென்ன வழிகள் உள்ளன என்பதை ஆராய வேண்டிய ஆக்கப்பூர்வமான இடம் என்பதை அனைத்து உறுப்பினர்களும் நினைத்துக் கடமையாற்ற வேண்டும். தேவையற்ற கூச்சல், குழப்பம் உள்நோக்கம் உடையதே. தன்னலப் போக்கின் வெளிப்பாடே!
சீ. காந்திமதிநாதன்,
கோவில்பட்டி.

நியாயமற்றது...
நேரு - சாஸ்திரி முதலானோர் இருந்தபோது நாடாளுமன்றத்தில் அழகான மொழி நடையில் ஆரோக்கியமான விவாதங்கள் இருந்தன. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதே அதைச் செயல்படாமல் முடக்குவதற்காகத்தான் எனும் ரீதியில் நடந்துகொள்கின்றனர். இது நியாயமற்றது. இது அவர்களுக்கும் சரி; நாட்டுக்கும் சரி நல்லதல்ல.
கோ. ராஜேஷ் கோபால்,
அரவங்காடு.

செவியில் விழாமல் போனால்...
அறுதிப் பெரும்பான்மை உள்ளதால், தன்னிச்சையாகப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் பிற மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றும் ஆளும் கட்சிக்கு, எதிர்க்கட்சிகளின் கூக்குரல் செவியில் விழாமல் போனால், நாடாளுமன்றத்தை உறுப்பினர்கள் முடக்குவது நியாயமே!
கே. அசோகன், மேட்டுப்பாளையம்.

ஏற்கத்தக்கதல்ல
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மக்களின் குறைகளை எடுத்துரைக்கவே தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று உணர்ந்து பணியாற்ற வேண்டியது அவர்கள் கடமை. அதைவிடுத்து வீணாகக் கூச்சலிடுவதும், அறிக்கைகளைக் கிழித்தெறிவதும், அவைத் தலைவரைச் சூழ்ந்து கொள்வதும் ஏற்கத்தக்கதல்ல. நாகரிகமானதும் அல்ல.
இராம. கோவிந்தன், தென்னிலை.

சற்றும் நினைக்காமல்...
நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது நியாயமல்ல. மக்களின் வரிப்பணத்தில்தான் சகல சௌபாக்கியங்களோடு பாதுகாப்போடு வாழ்கிறோம் என்று சற்றும் நினைக்காத உறுப்பினர்கள்தான் நாடாளுமன்றத்தை முடக்குவர். இதில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி பேதமில்லை. நாடாளுமன்றம் என்பது அறிவாற்றலுடன் விவாதம் செய்ய வேண்டிய இடம். சட்டம் இயற்ற வேண்டிய இடம். விவாதம் புரியத் திராணியற்றவர்களே நாடாளுமன்ற முடக்கம் செய்கிறார்கள்.
கி. சந்தானம், மதுரை.

வேதனை...
நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது முற்றிலும் தவறு. நியாயமற்றது. நாட்டின் பொருளாதாரத்தை வீணடிப்பது வேதனை. நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக மட்டுமாகச் செயல்படாது, நாடு சார்ந்த பிரச்னைகளை உணர்ந்து நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
எஸ். முருகானந்தம்,
தாழக்குடி.

கடமை
நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவும், பிரச்னைகளைச் சரிசெய்யவும், சட்டம் இயற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடும் இடமாகும். எதையும் விவாதத்திற்கு உட்படுத்துவதன் மூலமே தீர்வுகளை எட்ட முடியும். உறுப்பினர்கள் அனைவரும் விவாதக் களத்தில் பங்கேற்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வோர் உறுப்பினரின் கடமையுமாகும். பதவியில் இருப்பவர்களும், இல்லாதவர்களும் இவ்விதிக்கு உட்பட்டவரே ஆவர்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

இருவகை நியாயம்
120 கோடி மக்களின் வாழ்வாதாரம், நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியம் தராமல் அரசியல் மேடைகளில் பொறுப்பற்றுப் பேசும் பேச்சுக்கெல்லாம் முக்கியம் தந்து நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. ஆளும் கட்சியாக இருக்கும்போது அமைதி, எதிர்க்கட்சியானால் அமளி என்ற இருவகை நியாயத்தைக் கடைப்பிடிப்பது நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். எனவே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இருவரும் பொறுப்புடன் நடந்துகொண்டு, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வழிகோல வேண்டும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

சற்றும் நியாயமன்று
நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவதினால் மக்களின் வரிப்பணம் பாழாகும். சிலர் அதில் ஈடுபடுவதால், இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையினை ஆற்றுவதிலிருந்தும் தடுக்கப்படுகிறார்கள். எனவே, நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் உறுப்பினர்கள் முடக்குவது சற்றும் நியாயமன்று.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

மக்கள் நலனை முன்னிறுத்தி...
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனை முன்னிறுத்தியே இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபடுவது சகிக்க முடியாத செயல். இவர்களுக்கு நல்ல சம்பளம், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள், ஏழை மக்கள் தரும் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது. எனவே நாடாளுமன்ற முடக்கம் செய்வது எந்தக் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் மிகப்பெரிய குற்றமாகும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

முறையல்ல
ஜனநாயகத்தில் கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை, மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கப் பல விதிமுறைகள் உள்ளன. அதைவிடுத்து நாடாளுமன்றத்தை செயல்பட முடியாமல் கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவது முறையல்ல. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை உதாசீனப்படுத்துவது போன்றது.
டி.ஆர். ராசேந்திரன்,
திருநாகேஸ்வரம்.

வழக்கமாக உள்ளது...
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்கின்றபோது பாஜக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்பட விடாமல் முடக்குவதும், அதேபோல் பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடங்கச் செய்வதும் வழக்கமாக உள்ளது.
இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. மாறாக மக்களின் வரிப்பணம்தான் வீணாகப் போகிறது. எனவே நாடாளுமன்றத்தை முறையாக செயல்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும்.
கே. சிங்காரம்,
வெண்ணந்தூர்.

தவறான செயல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் தவறாமல் கலந்துகொண்டு தொகுதியின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்த வேண்டிய பொதுப் பணிகளான நீர் தேக்கங்கள், பாசனம், விவசாயம், சுகாதாரம், கல்வி, சாலைகள், சுரங்கம், இயற்கை வளம், வறுமைக்கோட்டிலுள்ள மக்கள் நலம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், பல நூறு கோடிகள் செலவு செய்து நடத்தப்படும் நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவது கண்ணியக்குறைவான, நியாயமற்ற, தவறான செயலே ஆகும்.
மு.அ.ஆ. செல்வராசு,
வல்லம்.

ஜனநாயக முறையில்...
நாடாளுமன்றம் முழுமையாகச் செயல்பட்டால்தான், மக்களின் பிரச்னைகளை விவாதிக்க முடியும். பொருளாதாரக் கொள்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை, தீவிரவாதம் மற்றும் ஏராளமான பிரச்னைகளை விவாதிக்க முடியும். ஜனநாயக முறையில், இந்த முறைகேட்டிற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
பி.கே. ஜீவன்,
கும்பகோணம்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com