"வழக்குரைஞர்கள் ஆலோசனை வழங்க கட்சிக்காரர்களிடம் பெறும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

"வழக்குரைஞர்கள் ஆலோசனை வழங்க கட்சிக்காரர்களிடம் பெறும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவது சரியா?'

சட்ட ஆலோசனை

வழக்குரைஞர்கள் ஆலோசனை வழங்க கட்சிக்காரர்களிடம் பெறும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவது சரியே. வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதைவிட சட்ட ஆலோசனைகள் வழங்குவதில்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்களிடம் சேவை வரி வசூலிப்பதில் தவறில்லை. அனைவரும் அவரவர் தொழிலுக்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்துவது நல்லது.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.


வருவாய்

இந்தக் கருத்து சரியே. வழக்குரைஞர்கள் பெறும் தொகையில் சேவை வரி செலுத்துவதுதான் முறையானது. வரி விதிப்பானது அரசின் வருவாயாக இருப்பதால், இது பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும். சேவை வரியிலிருந்து வழக்குரைஞர்களுக்கு விலக்கு அளிப்பதைவிட்டு வருமானத்தைப் பெருக்கும் வகையில் சேவை வரி விதிக்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும்.

தணிகை மணியன், சென்னை.


உதவி

இது சரியல்ல. வழக்குரைஞர்கள் வழக்கு சம்பந்தமாக வழங்கும் ஆலோசனைகளின் எண்ணிக்கை விவரங்களை கணக்கிட முடியுமா? இதை சேவை என்ற வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதில்லை. உதவி, வழிகாட்டுதல் என்று சொல்லலாம். சேவை வரியை விதித்து அந்தச் சுமையையும் கட்சிக்காரர்களின் தலையில் மறைமுகமாக ஏற்றிவிடக் கூடாது.

வெ.சோ. இராமு, செம்பட்டி.


வரி வருவாய்

வழக்குரைஞர்களுக்கு சேவை வரி விதிப்பது ஏற்புடையதே. உணவு விடுதி, தங்கும் விடுதி, செல்லிடைப்பேசி ரீசார்ஜ், வாகன உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் சேவை வரி குறிப்பிட்ட சதவீதம் விதிக்கப்படுகிறது. இதேபோன்று வழக்குரைஞர் ஆலோசனை வழங்குதலும் சேவைக்குள் அடங்கி விடுகிறது. எனவே அந்தச் சேவைக்கு சேவை வரி விதிப்பது என்பது சரியானதே.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.


ஏழைகளுக்கு விலக்கு

இது சரியான நடவடிக்கை. உணவு விடுதியில் உணவு சாப்பிடுவதற்கு சேவை வரி விதிக்கப்படும்போது, வழக்குரைஞர்களின் வருமானத்திற்கு மட்டும் ஏன் சேவை வரி விதிக்கக் கூடாது? அதேசமயம் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ வாதிட்டால், வழக்குரைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

க. சுல்தான் ஸலாஹுத்தீன், காயல்பட்டினம்.


தர்மம் இல்லை

வழக்குரைஞர்களுக்கு சேவை வரி விதிப்பது சரியன்று. வழக்குரைஞர்கள் ஆலோசனை வழங்க கட்சிக்காரர்களிடம் பெறும் தொகையே சேவைக்குதான். இதற்கு சேவை வரி விதிக்கப்படுவதில் தர்மம் இல்லை. மேலும் பொதுமக்கள்தான் அரசின் இந்த விவேகமற்ற நடவடிக்கையால் பெரும் பாதிப்பை எதிர்கொள்வர். எனவே வரி விதிக்கப்படுவது முறையல்ல.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

சட்ட உதவி

இந்தக் கருத்து ஏற்புடையதே. வழக்குரைஞர்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் பெரும் பணக்காரர்கள்தான். எனவே, இவர்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதில் தவறேதும் இல்லை. ஏழைகள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படமாட்டார்கள். ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் இலவச சட்ட உதவி மையத்தையே நாடுகிறார்கள். ஆகையால் இது சரியே.

ரா. ராஜதுரை, சீர்காழி.


மனிதாபிமானம்

சேவை வரி விதிக்கப்படுவது சரியல்ல. மருத்துவர்கள் இலவச ஆலோசனை வழங்குவதும், வழக்குரைஞர்கள் இலவச ஆலோசனை வழங்குவதும் மனிதாபிமான செயலாக உள்ளது. எனவே வழக்குரைஞர்கள் அவர்கள் கற்ற கல்விக்கு ஏற்ற காணிக்கையாக தொகை பெறுவது சரியே. இதற்கு சேவை வரி விதிக்க அரசு முடிவெடுத்திருப்பது முறையானதல்ல. இது தவிர்க்கப்பட வேண்டும்.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.


வளர்ச்சி

இது சரிதான். இலவசமாக எந்த வழக்குரைஞர்களும் ஆலோசனை வழங்குவது இல்லை. பொருள்களுக்கு விற்பனை வரி விதிப்பது போலத்தான் சேவை வரியும். தனி நபர் தான் சம்பாதிக்கும் வருமானத்தை வரியாகச் செலுத்தினால்தான் அரசு இயங்க முடியும். நாட்டிற்கு வரி செலுத்துவதை ஒவ்வொரு குடிமகனும் பெருமையாக எண்ணினால்தான் பொருளாதாரத்தில் நாடு வளர்ச்சி அடைய முடியும்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.


ஏன் செலுத்த வேண்டும்?

இது தேவையற்றது. தனி நபர் இருவர் செய்து கொள்ளும் பரிமாற்றத்திற்கு ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? தனி ஒருவருக்கு செய்யும் சேவைக்கு வேண்டுமானால் அரசு வரி வசூலிக்கலாம். வரி வகைகளின் எண்ணிக்கையை குறைத்து, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் வரி விதிப்புகளை செம்மைப்படுத்தினாலே அரசுக்கு ஏராளமாக வரிகள் வந்து குவியும்.

வரதன், திருவாரூர்.

சாதாரண நிகழ்வு

வழக்குரைஞர்கள் தன் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்க பெறும் தொகை என்பது சொற்பமானதே. அதற்கு சேவை வரி விதிக்கப்படுவது சரி அல்ல. வழக்கு விஷயமாக ஆலோசனை கேட்க கட்சிக்காரர் வழக்குரைஞரை நாடுவது சாதாரண நிகழ்வே. ஆலோசனை வழங்க வழக்குரைஞர்கள் பணம் கேட்க மாட்டார்கள். எனவே இதற்கு சேவை வரி என்பது தேவையற்றது.

கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

சரியானதே

இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வகையான கொலை, கொள்ளை குற்ற வழக்குகளுக்கும், அவைகளின் மேல்முறையீட்டு வழக்குகளுக்கும் அவைகளுக்கு நிர்ணயிக்கப்படாத கட்டணங்கள் வழக்குரைஞர்களால் வசூலிக்கப்படுவதால், அவ்வாலோசனைகளுக்கு வழக்குரைஞர்கள் வாங்கியதாக காட்டப்படும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவது சரியானதே.

மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

முறையல்ல

நீதிமன்றத்தில் தான் வாதிடும் நேரத்தைக் கணக்கிட்டு தனது கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கும் பிரபலமான வழக்குரைஞர்களிடம் சேவை வரி வாங்க வேண்டியதுதான். ஆனால் நியாயத்தை பாதுகாக்க போராடும் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கும் நேர்மையான வழக்குரைஞர்கள், சட்ட வல்லுநர் போன்றோர்களுக்கு சேவை வரி விதிப்பது முறையல்ல.

மதியரசன், கிருஷ்ணாபுரம்.

சுமை

எல்லா வழக்குரைஞர்களும் ஒரே நேரத்திலோ, ஒரே மாதிரியான தொகையோ கட்சிக்காரர்களிடமிருந்து பெறுவதில்லை. சிலர் தவணையாகவும், சிலர் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகும் வசூலித்துக் கொள்கிறார்கள். ஆகவே, சேவை வரி என வந்துவிட்டால் வசூலிக்கப்படும் தொகையை உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்படும். அது கட்சிக்காரர்களின் தலையில் பெரும் சுமையாக விழும்.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.


நியாயமானதே

வரி வதிப்பது சரியான நடவடிக்கையே. வழக்குரைஞர்கள் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவதும், வழக்கு நடத்துவதும் வருவாய்க்குத் தகுந்தவாறுதான். அவர்கள் சேவை என்ற பெயரில் தொழில் செய்கிறார்கள், அவ்வளவே. எனவே வழக்குரைஞர்கள் கட்சிக்காரர்களிடம் பெறும் தொகைக்கு சேவை வரி விதிப்பது நியாயமானதே.

செ. டேவிட் கோவில்பிள்ளை, தென்காசி.

கட்டப் பஞ்சாயத்து

மருத்துவர்களாவது ஆலோசனைக் கட்டணம் வசூல் செய்கிறார்கள். வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் எதுவும் இன்றி, வழக்கை எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு சேவை வரி விதித்தால், கட்சிக்காரர்களிடமே இதை வசூல் செய்வர். தவிர இது வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து கட்டப் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கையையே அதிகரிக்கும்.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com