'மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக விலங்குகளைக் கொல்லலாம் என்கிறகேரள உயர்நீதிமன்றத்தின் கருத்து சரியா?' என்ற கேள்விக்குவாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரியானது
கேரள உயர்நீதிமன்ற கருத்து சரியானது. ஒரு மனிதனை நாய் கடித்துவிட்டால் அவன் நாய் போலவே குரைக்கின்ற நிலை ஏற்படுகிறது. சிலர் அதனால் இறந்துவிடக் கூடிய நிலையும் உள்ளது. அதேபோல் காட்டில் வாழும் விலங்குகள் ஊரில் நுழைந்து மனிதர்களை கடித்து குதறும் நிகழ்வுகளும் உள்ளது. அப்போது அவற்றைக் கொல்லத்தானே வேண்டும். எனவே இக்கருத்து சரியானது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

தவறில்லை
உயிர்களில் விலைமதிக்க முடியாதது மனித உயிர்களே. அந்த மனித உயிர்களுக்கு விலங்குகளால் ஆபத்து ஏற்படும்பொழுது அதைக் கொன்று மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறு கொல்லப்படும் உயிர்களில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளுமே அதிகம். எனவே மனிதர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விலங்குகளைக் கொல்வது சரியே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பயிரே உயிர்
சமணம், பௌத்தம், சைவம், வைணவம் முதலிய சமயங்கள் உயிர் வதையைக் கண்டிக்கின்றன. பயிரே உயிர் என்கிறார் வள்ளலார். விலங்குகளைக் கொல்லாமல் அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றிவிடும் நடவடிக்கை மேலானது. இறைவனின் படைப்பில் தாவரங்களும், விலங்குகளும் போற்றத்தக்கவை. தகுந்த ஜீவகாருண்ய முறையில் நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண்பதே நன்று.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தற்காப்பு
கருத்து சரிதான். விலங்கினத்திற்கு அறிவு கிடையாது. யானை தன்னை வளர்க்கும் பாகனையே சில நேரங்களில் தூக்கிப் போட்டு மிதித்து விடுகிறது. கொடிய மிருகங்களான சிங்கம், புலி, கரடி போன்றவை காட்டை விட்டு மனிதர் வாழ்விடங்களில் வந்து மனிதனை கொன்று விடுகின்றன. மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விலங்குகளைக் கொல்வதில் தவறில்லை.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

பாகுபாடு ஏன்?
ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த மனிதனை கொன்றால் சட்டம் சரியென சொல்லுமா? மனிதனுக்கு ஒரு சட்டம், விலங்குக்கு ஒரு சட்டமா? ஏன் இந்த பாகுபாடு? மனிதர்கள் தீங்கு இழைக்காமலிருந்தால் எந்த விலங்கும் மனிதனைச் சீண்டிப் பார்ப்பதில்லை. வாயில்லா ஜீவன் என்பதற்காக விலங்குகளின் உயிர்வாழும் உரிமை மறுக்கப்படலாமா?
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

கனத்த இதயம்
மனிதர்கள் காட்டுக்குள் சென்று விலங்குகளை வேட்டையாடிக் கொள்வதுதான் குற்றம். மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்துவிட்ட, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விலங்குகளை உயிருடன் பிடிக்க முடியாத பட்சத்தில் அந்த விலங்குகளைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லைதான். கனத்த இதயத்துடன் மனித சமூகம் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
சோ. இராமு, திண்டுக்கல்.

ஏற்கத்தக்கதல்ல
பூமியில் விலங்கினம், மற்ற உயிரினம் இவையெல்லாம் இல்லாமல் மனித இனம் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிற மனிதரையும் கொல்லலாம் என தீர்ப்பு வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர்களின் சர்வாதிகாரம் மற்ற உயிரினங்கள் மீது கருணையின்றி நிலவும் சூழ்நிலையில் இக்கருத்து ஏற்கத்தக்கதல்ல.
ஏ. எழிலரசன், சென்னை.

கொடுமை
உயிர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி, மனிதனே உயர்ந்தவன், அவன் வாழ்வதற்காக விலங்குகளைக் கொல்லலாம் என்று எண்ணுகிற கொடுமை வேண்டாம். இப்படிப்பட்ட செயல் தன்னலமற்ற மனித அறநெறி வாழ்வுக்கு சிறிதும் பொருந்தாது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு மனிதன் பிற உயிர்களிடத்து அன்பு கொண்டு வாழ வேண்டும்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.

பண்புகள்
ஆறறிவு உள்ள மனிதர்களிடம்கூட இல்லாத பல உயர் பண்புகள் விலங்குகளிடம் இருக்கிறது என்பதே உண்மை. கல்வியறிவு பெறாத கற்கால மனிதன்தான் விலங்குகளை அழித்தும், விலங்கின் தோலை ஆடையாக உடுத்தியும் வாழ்ந்தான். கல்வியிலும், நாகரிகத்திலும் மேம்பட்ட நாமும் ஆதிமனிதனின் பண்பாடற்ற செயலைச் செய்யலாமா?
பொன். நடேசன்,
சின்ன அய்யம்பாளையம்.

வரவேற்கத்தக்கது
எந்த காலத்திலும் மனிதர்களும், விலங்குகளும் ஒன்றாக வாழ்தல் என்பது இயலாது. ஒரு புலி ஒரு மனிதனைக் கொல்ல வரும்போது ஜீவகாருண்யம் என்ற போர்வையில் அம்மனிதன் அந்தப் புலியைக் கொல்லாமல் விடலாமா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதன் தன்னைக் காப்பாற்றி கொள்வதற்காக விலங்குகளைக் கொல்லலாம் என்பது சரியே. இக்கருத்து வரவேற்கத்தக்கது.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

பலனில்லை
மனிதனுக்கு உதவும் ஆடு மாடுகளை அன்றாடம் உணவுக்காக கொல்வதை நீதிமன்றங்கள் தடை செய்யவில்லை. தற்காப்புக்காக ஒரு உயிரைக் கொல்வது தவறில்லை என சட்டம் சொல்கிறது. பாம்பு மற்றும் மிருகங்கள் தாக்க வருகையில் அவற்றிடம் ஜீவகாருண்யம் காட்டிப் பலனில்லை. எனவே மனிதர்களைக் காக்க விலங்குகளைக் கொல்லலாம் எனும் கருத்து சரிதான்.
கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.

உத்தரவு
விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் அபகரித்துள்ளனர். இதன் காரணமாக விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை தேடி வரும்போது மனிதர்கள் விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். விலங்குகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க அரசுகளுக்கு நீதிமன்றங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் மனிதனும் வாழலாம். விலங்குகளும் வாழலாம்.
கே. வெங்கடேசன், நெய்வேலி.

வேறு வழியில்லை
கேரளாவில் மரங்கள் அதிகம். அதனால், விலங்குகளின் நடமாட்டம் இருப்பது இயல்பு. அதோடு, விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஊசிகள் பற்றாக்குறை காரணமாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முறையாகத் தரப்படுவதில்லை. இதனால் பலர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால், விலங்குகளைக் கொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

உரிமையில்லை
எவருமே தங்களுக்கு தீங்கு நேராத நிலையில் எந்த உயிரையும் கொல்லமாட்டார்கள். தெரு நாய்க்கும் உயிர் வாழும் உரிமை உண்டு என வேறோர் நீதிமன்றத்தில் கருத்து கூறப்பட்டது. ஆம் உயிர் வாழ மட்டும்தான் அவற்றிற்கு உரிமை உண்டே தவிர தெருவில் போவோரையும் வருவோரையும் கடிக்க உரிமை இல்லை. விலங்கு ஆர்வலர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வரதன், திருவாருர்.

அறமான செயலா?
கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதன்று. அகிலத்து உயிர்களை நேசிப்போர் இக்கருத்தை சரியென்று ஒப்பமாட்டார்கள், வாயில்லா ஜீவன்களை வதைப்பதோ, காட்சிப் பொருளாக்குவதோ தவறு எனும்போது அவற்றைக் கொல்வது மட்டும் அறமான செயலா? மனிதன், விலங்கு என்ற பாகுபாடு பாராமல் அனைத்து உயிர்களும் காக்கப்பட வேண்டும்.
ந. ஜெயசூர்யா, கண்ணமங்கலம்.

வரையறை
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. மனிதர்களாகப் பிறந்தோர் சிந்திக்கும் திறனால் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுகின்றனர். ஆறறிவு படைத்த அவர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்த விலங்கினங்களைக் கொல்வதில் தவறில்லை. ஆனால் எதைக் கொல்வது என்பதில் வரையறை தேவை. தனது உயிருக்கே உலை வைக்க நினைக்கும் விலங்கினங்களைக் கொல்வது சரியே.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com