’தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக்கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

’தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக்கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கடமை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக்கூடாது என்கிற கருத்து தவறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும்போது அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எதற்காக விதிவிலக்கு? வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுக் கையேந்தும் கட்சிகள், தங்களின் வரவு - செலவு கணக்குகளையும் வாக்காளர்களுக்கு அறிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர வேண்டும்.
வரதன், திருவாரூர்.

தேர்தல் நிதி
அரசியல் கட்சிகள் பெறும் கட்சி வளர்ச்சிக்கான நன்கொடை, தேர்தலுக்கான நிதி போன்றவை வெளிப்படையாக இருக்க வேண்டும். ஆனால், தற்சமயம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரக்கூடிய வருமானம் குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. எனவே, நிச்சயமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவர வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சாத்தியமல்ல
ஒரு கட்சிக்குள் ஏதேனும் பிரச்னை என்று வந்துவிட்டால், பிறகட்சிகள் அது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிடவோ, கருத்துக் கூறவோ விரும்பவில்லை என்று விலகிக்கொள்கின்றன. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வந்து உண்மைத் தகவல்களை வெளிக்கொணருவது என்பது நடைமுறை சாத்தியமல்ல.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

தேவையில்லை
இந்தக் கருத்து தவறு. நம் நாட்டில் தேர்தலில் போட்டியிடாத, எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடாத கட்சிகள் ஏராளமாக உள்ளன. இவை நன்கொடை என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தை நம் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மட்டுமே உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரையறைக்குக் கட்டுப்படாத எந்தவொரு கட்சியும் நாட்டிற்கு தேவையில்லை.
எம். அசோக், வீரநல்லூர்.


எப்படி?
அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினின்றும் விலக்கு அளிப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது. அப்படி அளிக்கப்பட்டால், அக்கட்சிகள் அயல்நாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும், தொண்டர்களிடமிருந்தும் அபரிமிதமான பணத்தைப் பெற்றாலோ, மக்கள் விரோதப் போக்கில் ஈடுபட்டாலோ, சதி வேலைகளில் ஈடுபட்டாலோ அவற்றைக் கண்டறிவது எப்படி?
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

மிகவும் சரி
அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிப்பது மிகவும் சரி. எல்லா கட்சிகளுக்கும் செயற்குழு, பொதுக்குழு இருக்கும்போது தொண்டர்கள் தங்களது சந்தேகங்களை அங்கேயே கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் முறை. தவிர வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையம் பெறும்போது அரசியல் கட்சிகளை இச்சட்டத்தில் கொண்டு வருவதால் பயன் எதுவும் விளையாது.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

கட்டாயம்
ஜனநாயகம் பற்றி பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டின் சட்ட திட்டங்கள் அனைவருக்கும் சமம் என்பதை உணர்ந்து தங்கள் கட்சியையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம். எனவே இச்சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர வேண்டியது கட்டாயமே.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

நேர்மை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக் கூடாது என்பதற்கு நியாயமான காரணம் ஒன்றுகூட இல்லை. மக்களைச் சார்ந்து அரசியல் கட்சிகள் இயங்கும்போது அக்கட்சிகளின் வரவு - செலவு நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? அப்போதுதானே அரசியல் கட்சிகளின் நேர்மையைப் பற்றி மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மு. நடராஜன், திருப்பூர்.


திறந்த புத்தகம்
நம் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அத்தகைய பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் ஒரு திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமல்லவா? அதற்கு அடிப்படையாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒன்றுதானே! எனவே அரசியல் கட்சிகளை இச்சட்டத்தின்கீழ் கொண்டுவருவது மிகவும் சரி.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

பொருத்தமற்றது
நாட்டு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்டதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். அரசியல் கட்சிகள் அந்த வளையத்திற்குள் வராது என்று கூறுவது லஞ்சமும், ஊழலும் அங்கிருந்துதான் உருவாகின்றன என்பதை ஒப்புக்கொள்வது போன்றதாகும். ஜனநாயக நாட்டில் ஒரு சட்டம் ஒரு சாராருக்குப் பொருந்தாது என்று கூறுவது சற்றும் பொருத்தமற்றது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

வரப்பிரசாதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதன்மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டே அரசின் செயல்திட்டங்களை பொதுமக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறே அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நிதியாதாரங்களை தெரிந்து கொள்ளவும் மக்களுக்கு உரிமை உண்டல்லவா? எனவே அரசியல் கட்சிகளை இச்சட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

முறைகேடு
நம் நாட்டு அரசியல் கட்சிகளைப் பற்றி நமக்குத் தெரியாதா? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத இந்த அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையா மதிக்கப் போகின்றன? அரசியல் கட்சிகளில் முறைகேடுகள் இருந்தால் அவற்றை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளட்டும். அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரக் கூடாது எனும் கருத்து சரியே.
கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.


அவசியம்
பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற உயர்பதவி வகிப்பவர்களையே இச்சட்டம் கட்டுப்படுத்தும்போது அரசியல் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டுமென்பது நியாயமற்றது. அரசியல் கட்சிகள் இச்சட்டத்திற்குள் வந்தால்தான் உண்மையில் ஒரு கட்சியின் நிதி நிலைமை பொதுமக்களுக்குத் தெரியவரும். எனவே, அரசியல் கட்சிகளையும் கொண்டு வர வேண்டியது அவசியம்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

அணுகுமுறை
இக்கருத்து சரியே. அரசியல் கட்சிகளின் வரவு - செலவு, தொண்டர்களின் எண்ணிக்கை, அவ்வப்போதைய செயல்பாடுகள், கொள்கை மாறுபாடுகள் யாவையும் ரகசியமாகவே அமைய வாய்ப்பை கொடுப்பதே சிறப்பான அணுகுமுறையாகும். அவற்றை அந்தக் கட்சிகளின் பொதுக்குழு போன்ற கூட்டங்களில் அறிந்து கொள்ள வாய்ப்பு தருவதே விரும்பத்தக்கதாகும்.
வி.எஸ். கணேசன், சென்னை.

தவறுகள்
இக்கருத்து சரியானதல்ல. ஜனநாயக நாடு என்பது எல்லாருக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டதுதான். எவருக்கும் விதிவிலக்கு கூடாது. அரசியல் கட்சிகள் கொள்கைகளை உருவாக்கலாம். ஆனால் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது. அதனை மக்கள் தெரிந்துகொள்ள இச்சட்டம் ஒன்றுதான் வழி.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
ராஜபாளையம்.

நம்பிக்கை
இக்கருத்து தவறே. அரசியல் கட்சிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டாமா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மக்கள் கேட்கும் தகவல்களை அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மன்றத்தில் இவர்கள்மீது நம்பிக்கை பிறக்கும். தகவல்களை மூடிமறைக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால் மக்களின் நம்பிக்கையை அக்கட்சிகள் இழக்கும்.
வெ.சோ. இராமு, செம்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com