'நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும்என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்குவாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இடையூறு

நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்கிற மத்திய அரசின் முடிவு சரியானது. பலரும் ஆடம்பரத்திற்காக ஒரே வீட்டில் பல வாகனங்களை வாங்குகிறார்கள். அவற்றை தெருவில் நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் வாகனத்தில் செல்வோருக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் அந்த இடையூறு நீங்கும்.
ஐ. சுரேஷ், பழையகாயல்.

வரவேற்பு
இது மிகவும் சரியான முடிவு. வாகனங்களை வாங்கியவர்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைப்பதால் பல இடங்களில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒருசில இடங்களில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நிறுத்துமிடம் இருந்தால்தான் வாகனப் பதிவு என்னும் முடிவால் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடையும். ஆகவே இதனை வரவேற்போம்.
சோம. பொன்னுசாமி, சென்னை.

நகைப்பிற்குரியது
வாகன நிறுத்த இடம் பற்றி பொதுமக்களை வற்புறுத்துவது நகைப்பிற்குரியது. அரசியல் நிகழ்வுகள் நடக்கும்போது வாகனங்களை சாலைகளில் தாறுமாறாக நிறுத்திவிட்டு போக்குவரத்திற்குப் பெரும் இடைஞ்சல் செய்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவா? அதையெல்லாம் விட்டுவிட்டு நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே வாகனப் பதிவு என்று கூறுவது மிகவும் தவறு.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

மாற்றம்
வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. அதுபோல் அவற்றை சாலைகளிலேயே நிறுத்திக் கொள்ளும் போக்கும் அதிகரிக்கின்றது. இதனால், போக்குவரத்து இடையூறும் தடைகளும் உண்டாகின்றன. தற்போது இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதால் தெருவில் வாகனத்தை நிறுத்துவோர் தாம் தண்டிக்கப்படுவோம் என்கிற அச்சம் காரணமாக பழக்கத்தை மாற்றிக் கொள்வர்.
சி. வையாபுரி, ஆறகளூர்.

முட்டுக்கட்டை
நகரங்களில் கார்களை நிறுத்துவதற்கு வசதி செய்து கொடுத்து, அதற்காக மாத வாடகை வாங்கும் நிலை பல இடங்களில் உள்ளது. ஆனால், கிராமங்களில் அதுபோன்ற பழக்கம் கிடையாது. அங்கு கார்களை தெருவில்தான் நிறுத்தியாக வேண்டும். எனவே மத்திய அரசின் இந்த முடிவு சரி அல்ல. இது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் கார் வாங்குவதற்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும்.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

இயல்பு
தங்கள் வாகனங்களுக்கு நிறுத்துமிடம் இல்லாதவர்கள் அரசு சட்டமியற்றிவிட்டால் எப்படியும் முயற்சி செய்து இடத்தை தேர்ந்தெடுத்து விடுவார்கள். இது மனித இயல்பு. சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அகற்றப்பட்டால் போக்குவரத்து எளிதாகும். இது யாரோ சிலருடைய பிரச்னை அல்ல; சமுதாயப் பிரச்னை.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
ராஜபாளையம்.

சாத்தியமாகாது
இன்று கார் வாங்குவது எளிதாக இருப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள்கூட கார் வைத்திருக்கின்றனர். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இன்றி அவர்கள் வாகனத்தை நிறுத்திக் கொள்வார்கள். இரவு நேரத்தில்தான் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கார்களுக்கு நிறுத்துமிடம் தேவை என்பது சரிதான். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகாது.
சோ. இராமு, செம்பட்டி.

பாதுகாப்பு
இப்போதெல்லாம் எளிய மாதத் தவணையில் வாகனங்கள் வாங்க முடிவதால் பெரும்பாலானோர் வாகனம் வாங்கிவிடுகின்றனர். அவற்றை வாங்கி போக்குவரத்துக்கு இடையூறாகத் தங்கள் வீட்டு முன் தெருவில் நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசின் முடிவு வாகன பெருக்கத்திற்கு ஒரு கடிவாளமாய் அமையும். நம் பொருளை நம் இடத்தில் வைப்பதே பாதுகாப்பானது.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.

ஏற்புடையதல்ல
கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய வீட்டைக் கட்டுவதென்பது, பெரும் செல்வந்தர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் எல்லாம் வீட்டின் முன்புறம், வெளியே சாலையில்தான் வண்டிகளை நிறுத்த முடியும். இரு சக்கர வாகனமான ஸ்கூட்டர், பைக் போன்றவற்றையே எல்லோரும் வீட்டுக்கு வெளியேதான் நிறுத்த வேண்டியிருக்கிறது. எனவே இதைக் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல.
எஸ். மோகன், கோவில்பட்டி.

ஆறுதல்
இன்றைய நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்போது போக்குவரத்து பெரிய பிரச்னையாக உள்ளது. காற்று மாசு, போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் என பல வகையிலும் வாகனங்கள் சிக்கித்திணறும் நிலையில் இந்த முடிவு ஆறுதலளிக்கிறது. இதனால் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கட்டுப்படுத்தப்படும்.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வேறு காரணங்கள்
பள்ளிகள், கல்லூரிகளில் பேருந்துகள், வேன்களை வாங்குகின்றனர். அவற்றை பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில்தான் நிறுத்துகின்றனர். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அதை நடைமுறைப்படுத்த இயலுமா என்பதை அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றிற்கு வேறு காரணங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிய வேண்டும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அவசியம்
குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனே வாகனங்களுக்கு சொந்தமான நிறுத்துமிடம் அவசியம் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாடகை இடத்திலாவது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டியது அவசியம். இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், போக்குவரத்திற்கு இடையூறாக கண்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது தவிர்க்கப்படும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

விநோதம்
மக்கள்தொகை அதிகரிப்பு, அதிக வாகன உற்பத்தி இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது விநோதமானது. ஒவ்வொரு நாளும் போக்குவரத்தை பாதிக்கும் அளவுக்கு வாகனப் பெருக்கம் அதிகமாகி விட்டது. வருடத்திற்கு இவ்வளவு புதிய வாகனங்கள்தான் பதிவு செய்யப்படும் என ஒரு வரைமுறையை அரசு கொண்டு வருவதுதான் சிறந்தது.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

விபத்துகள்
வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுவதுடன் வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. வாகனம் வைத்திருப்போருக்கு நிறுத்துமிடம் கட்டாயம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. வருங்காலங்களில் தூண்கள் மீது வீட்டை கட்டிக்கொண்டு தூண்களுக்கிடையேயான பகுதிகளை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்த வேண்டும்.
வரதன், திருவாரூர்.

வங்கிக்கடன்
வாகனங்கள் வாங்குவதற்கு எளிதில் வங்கிக்கடன் கிடைக்கிறது. எனவே நாம் இப்போது வாகனம் இல்லாத வீடே இல்லை என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். வாகன நிறுத்துமிடம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஏதோ ஓர் இடத்தைக் காட்டுவர். அதிகாரிகளால் எல்லாவற்றையும் கண்டறிய இயலாது. எனவே, கண்டிப்பாக நிறுத்துமிடம் தேவை என்று வற்புறுத்துவது சரியல்ல.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

கட்டாயம்
இன்று வாகனங்கள் இல்லாத வீடே இல்லை. இவற்றை நிறுத்த இடம்தான் இல்லை. சிறிய தெருக்களில் வசிப்போர் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி விடுகிறார்கள். வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப இடவசதி இல்லை. இந்நிலையில் நிறுத்தும் இடம் இருந்தால் மட்டுமே வாகனப் பதிவு என்பது கட்டாயம்.
இராம. முத்துக்குமரன்,
கடலூர் துறைமுகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com