"தொழிற்கல்வி படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதித்தேர்வு (நீட்) நடத்தமத்திய அரசு முடிவெடுத்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வாய்ப்பு
தொழிற்கல்வி படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது சரியே. தரமிழந்து தவிக்கும் கல்வியை உயர்த்திக்கொள்ள தமிழகத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. மாணவர்கள் தகுதித் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சியை அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரம் உயரவேண்டும் என்போர் இம்முடிவை வரவேற்க வேண்டும்.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

வேறுபாடு
இந்த முடிவு சரியே. நாடு முழுவதும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும். கல்வி முறையில் பல்வேறு விதமான பாடத்திட்டம் இருப்பதே குழப்பத்திற்கு முதற்காரணம். இந்தக்குறை உடனடியாகக் களையப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வு முறை சரியே. இதனால், குறுக்கு வழியில் அதிக மதிப்பெண் எடுக்க வழியில்லை.
வெ.சோ. இராமு, செம்பட்டி.

கேள்விக்குறி
மருத்துவக் கல்லூரிக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பிற தொழில் கல்வி படிப்புகளுக்கும் இது தேவையற்றது. இதனால், ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். தனியார் கல்லூரியின் தரமும் அரசுக் கல்லூரியின் தரமும் ஒன்றாக இல்லை.
என்.எஸ். முத்துகிருஷ்ண ராஜா,
ராஜபாளையம்.

கடிவாளம்
தொழிற்கல்வியின் தரம் மேம்பட வேண்டுமாயின் நீட் தேர்வு அவசியம்தான். வீண் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளை தொழிற்கல்வி படிக்க வைப்பவர்களால், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்நிலை இதன்மூலம் மாறும். சாமானியர்களுக்கும் தொழிற்கல்வி கிடைக்கும். தொழிற்கல்வி நிலையங்களை தொழிலாக செய்யும் நபர்களுக்கு கடிவாளமாகவும் இது அமையும்.
கே. கனகராஜ், கழுகுமலை.


நிதர்சனம்
இம்முடிவு சரியல்ல. தகுதித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை. நீட் தேர்வை எதிர்கொள்ள தற்போது பயிற்சி நிலையங்கள் முளைத்துவிட்டன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பின் மூலம் மட்டுமே, தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

மனோபாவம்
தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவுத் திறன் கூடுகிறது. அவர்களில் குறுகிய மனோபாவமும் மாறுகிறது. அத்துடன், பல மாநில மாணவர்களோடும் சேர்ந்து பழகுகின்ற வாய்ப்பும் உருவாவதால் பொது அறிவும் விரிவடைகிறது. இதனால், படிப்பை முடித்தவுடன் ஏதோ ஒரு மாநிலத்தில் வேலைவாய்ப்பு உறுதியாகிறது. எனவே, இது வரவேற்கத்தக்கதே.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பாதிப்பு
தேசிய அளவிலான எல்லாவித தகுதித் தேர்வுகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை சார்ந்தே பெரும்பாலான கேள்விகள் அமைகின்றன. அனைத்து மாநிலங்களிலும் பாடத்திட்டத்தை சமப்படுத்திய பின் தேசிய அளவில் தேர்வு நடத்துவதுதான் சரியாக இருக்கும். இல்லையெனில் தத்தமது மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர்.
இளங்குருகு, கோயமுத்தூர்.

திறனறி தேர்வு
பல மாணவர்கள் மேனிலை வகுப்பில் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி பயிற்சி பெற்று விடுகின்றனர். பின்னர் வேலை தேடும்போது திறனறி தேர்வில் வெற்றிபெற முடியாததால் அவர்கள் பணி வாய்ப்பை இழக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது சரிதான். அதைச் சந்திக்க மாணவர்கள் தயாராக வேண்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.


நியாயமல்ல
தொழிற்கல்வி பயில்வதற்கான அடிப்படைத் தகுதியை பிளஸ்டூ தேர்வில் வெற்றி பெறுவதன் மூலமே ஒரு மாணவன் பெற்றுவிடுகிறான். அவனை மீண்டும் தகுதித் தேர்வு என்ற பெயரில் நீட் தேர்வை எழுதவைத்து வடிகட்ட வேண்டுமென எண்ணுவது நியாயமல்ல. கல்வித் தரத்தை மேம்படுத்த விரும்பினால் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் பாடத்திட்டங்களை உருவாக்கலாம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

இலக்கு
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கெல்லாம் அடிப்படை தேர்ச்சி விகிதம் மட்டுமே போதுமானது. இதனால் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. இதிலிருந்து விடுபட நமக்கு இருக்கும் ஒரே வழி நீட் தேர்வுதான். இதனால் சிறநத கல்வி என்ற இலக்கை சாமானியனும் எட்ட இயலும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

கோளாறுகள்
தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளுக்கு ஒரே முறையிலான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய அளவில் பாடத்திட்டம் ஒன்றாக ஒரே மொழியில் நடத்தப்படுமானால் தேசிய தகுதித் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது எளிது. அடிப்படையில் நமது கல்விக் கொள்கையிலுள்ள கோளாறுகளை சரி செய்யாமல் தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்துவது என்பது அறிவுடைமையல்ல.
மகிழ்நன், சென்னை.

உண்மை
தொழிற்கல்வி படிப்புகளுக்கான இடங்கள் குறைவான அளவில் இருப்பதாலும் தேசிய அளவில் போட்டி அதிகமாக இருப்பதாலும் நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு மாநில பாடத்திட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. எனவே, இத்தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

பாடத்திட்டம்
இம்முடிவு சரியல்ல. எல்லா மாநில மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். கல்வி வியாபாரமாவதை கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும். பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்திறன், கற்பிக்கும் ஆற்றல் இவற்றை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே நீட் பற்றி சிந்திக்க வேண்டும்.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

தேசிய உணர்வு
மத்திய அரசின் முடிவு மிகவும் சரி. உயர் படிப்புகள் படிக்க வேண்டுமாயின் தேசிய அளவிலான தேர்வும், போட்டித் தேர்வுகளும் நிச்சயமாக வேண்டும். இது மாணவர்கள்
மத்தியில் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையும், தேசிய உணர்வையும் கண்டிப்பாக வளர்க்கும். இந்த நிலையில் சர்வ
தேச மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
மு. நாச்சியப்பன், காரைக்குடி.

சமமல்ல
தேசிய அளவிலான தகுதித்தேர்வு என்பது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானதாகும். பொருளாதாரத்தில் எப்படி அனைவரும் சரி
சமமாக இருக்க இயலாதோ, அதுபோல கல்வியிலும் இருக்க இயலாது. நகரத்தில் படிக்கும் மாணவனையும், கிராமத்தில் படிக்கும் மாணவனையும் சரிசமமாக ஏற்க இயலாது. எனவே, நீட் தேர்வு நிசசயமாகக் கூடாது.
பூ.சி. இளங்கோவன்,
அண்ணாமலைநகர்.

பணம்
பல மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வில் நிறைய முறைகேடுகள் செய்து அதிக மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். அண்மையில் பிகார் மாநிலத்தில் உள்ள ஒருவர் சரியாகப் படிக்காத தனது மகனை, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவராக ஆக்கினார். காரணம் பணம். பொது நுழைவுத் தேர்வு என்று ஒன்று இருந்தால்தான் இப்படிப்பட்டவர்களை வடிகட்ட முடியும்.
எஸ். மோகன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com