அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்தகருத்துகளில் சில...

அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்தகருத்துகளில் சில...

கடமை
அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பது சரியே. எல்லோரும் ஆதார் எண் பெற்றிருக்கிறார்கள். இல்லாதவர்கள் பெற்றுக்கொள்வதில் சிரமம் இல்லை. கால அவசாகமும் அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் நலத்திட்டங்களைப் பெற வேண்டியது நம் கடமையாகும்.
என்.எஸ். முத்துகிருஷ்ணன்,
இராஜபாளையம்.

தவறில்லை
ஏற்கெனவே வங்கிக் கணக்கு உள்பட அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் ஆதார் எண்ணைப் பெற்றிருக்கின்றனர். எனவே அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருப்பதில் தவறில்லை. இதனால், போலி பயனாளிகள் நீக்கப்பட்டு உண்மையான பயனாளிகளை இனம் காண இயலும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

இழப்பு
அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவது இன்னமும் முழுமையடையவில்லை. ஆதார் எண்ணை வங்கியோடு இணைப்பதும்கூட பல இடங்களில் முழுமையடையவில்லை. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் நலத்திட்டப் பலன்களைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தினால் ஆதார் எண் பெறாத பலர் இதுவரை உண்மையாகப் பெற்றுவந்த நலத்திட்டப் பலன்களை இழக்க நேரிடும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தண்டனை
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆதார் எண்ணை சரிபார்க்காமல் நலத்திட்டங்களை வழங்கினால் அரசையும் அரசு அதிகாரிகளையும் போலிப் பயனாளிகள் ஏமாற்றுவதற்கு வழி ஏற்படும். ஆதார் எண்ணைக் குறிப்பிட்ட பின்பும் ஏமாற்றினால் அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு சரியான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். இது மிகவும் சரியான முடிவு.
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

குடும்ப அட்டை
அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுபவர்கள் அதிகமும் அடித்தட்டு, ஏழை மக்களாகத்தான் இருப்பர். ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களைப் பெற வண்ண குடும்ப அட்டைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அதனை வைத்தே அரசின் பலன்களைப் பெறுகின்றனர். அப்படியிருக்க புதிதாக ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது தேவையற்றது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அவசியம்
இது வரவேற்புக்குரியது. அரசு மானியம் பெறும் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் கணக்கை அண்மையில் சரி பார்த்தபோது பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அப்படி நடக்காமல் தவிர்க்கப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு மிச்சமாயுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியானவர்களுக்குக் கிடைக்க ஆதார் எண்ணை இணைப்பது அவசியமே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஒரே வழி
ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டையை அடையாளமாகப் பயன்படுத்தலாம். ஒரே நபர் பல முகவரிகளில் இருப்பதுபோல் காட்டி ஒரு திட்டத்தின் பயனை பல மடங்கு அடைகிறார். இதைத் தவிர்க்க ஆதார் எண்ணை பயன்படுத்துவது ஒன்றுதான் வழி. இதனால் தவறானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உண்மையானவர்களுக்கு அரசின் நலத்திட்ட பலன் கிடைக்கும்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

அடையாளம்
இந்த அறிவிப்பு சரியானது அல்ல. இன்னும் பல கிராமங்களில் ஆதார் அட்டை வழங்கப்படவே இல்லை. ஆதார் அட்டையின் மூலம் தனிநபரின் அந்தரங்கங்கள், தனிமனித அடையாளங்கள் வெளிப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இப்படி எதற்கெடுத்தாலும் கட்டாயம் என்று அறிவிக்கப்படுவது அரசு ஏழை, எளியவர்களுக்கு எதிராக நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

சரிதான்
மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்ற நிலையில் யார் வைத்திருப்பது உண்மையான ஆவணம் யாருடையது போலி என்று கண்டு அறிய இயலாத நிலை உள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் விவகாரத்தில் பெரிய அளவிற்கு போலிகளோ மோசடிகளோ இதுவரை நடைபெற்றதாக செய்திகள் வரவில்லை. இந்த அறிவிப்பு சரிதான்.
கடல் நாகராஜன், கடலூர்.

மாற்று வழி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு எதையும் உடனே திணிக்க நினைத்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். எது குறித்தும் முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஆதார் குறித்த புரிதல் இன்னும் ஏற்படவில்லை. எனவே, அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆதார் ஒன்றுதான் வழி என்பதை விடுத்து மாற்று வழியையும் ஏற்படுத்த வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சாத்தியமல்ல
இந்தியக் குடிமகன் ஒவ்வொருக்குமான அதிகாரபூர்வமான அங்கீகாரம்தான் ஆதார்அட்டை எண். அதனை ஒன்றுக்கு மேற்பட்டோரோ, போலியாகவோ எவரும் பெறுவது என்பது சாத்தியமல்ல. அரசின் நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு முறையாகச் சென்றடையவும், போலிப் பயனாளிகளால் அரசுக்கு ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கவுமே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

தேவையா?
ஆதார் எண் அவசியமே. ஆனால் இதையே அடிப்படைத் தேவைக்கெல்லாம் வற்புறுத்துவது சரியில்லை. குடும்ப அட்டையே போதுமான அடையாளம் கொண்டுள்ளது. அதுவே போதும். கடவுளைத் தரிசிக்க ஆதார் தேவையா? விவசாயி உரம் வாங்க ஆதார் தேவையா? பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்க ஆதார் தேவையா? இப்படிக் கட்டாயப்படுத்துவது தவறு.
எஸ்.பி. தசரதன், செலமாநத்தம்.

கடிவாளம்
அரசின் நலத்திட்டங்கள் ஆதார் எண் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்கிற நிலைப்பாட்டினால் போலி நபர்கள் மோசடியில் ஈடுபடுவதைக் கட்டாயம் தடுக்க முடியும். அரசு அதிகாரிகளும்கூட ஊழல் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களைப்போய் சேரும். ஊழலையும் முறைகேடுகளையும் நிறுத்தக்கூடிய கடிவாளம் இந்த ஆதார் எண்.
இ. ராஜுநரசிம்மன், சென்னை.

மாற்று ஆவணம்
ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்கும் பலருக்கும் அட்டை வந்து சேரவில்லை. தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்றாலும் வேறு ஆவணங்களைப் பயன்படுத்தியும் வாக்களிக்கலாம் என்பது போல் ஆதார் அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வரை மாற்று ஆவணங்களைக் காட்டியும் அரசின் நலத்திட்டங்களைப் பெறலாம் என்ற நிலை வரவேண்டும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தனித்தன்மை
ஒரு நபர் இந்தியாவில் ஒரேயொரு ஆதார் அட்டை மட்டுமே பெற முடியும். ஆதார் அட்டையில் புகைப்படம் மட்டுமின்றி விழித்திரை மற்றும் கைவிரல் ரேகைகளும் எடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையானது. எவரோடும் ஒத்துப்போகாது. இதனால் ஒருவர் ஒரே ஒரு ஆதார் எண் மட்டுமே பெற முடியும். எனவேதான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
துரை.ஏ. இரமணன், துறையூர்.

ஏற்புடையதே
இக்கருத்து முற்றிலும் சரியே. எரிவாயு இணைப்புப் பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டவுடன் ஏராளமான மோசடிகள் அம்பலமாயின. ஒருவரே பல எரிவாயு இணைப்புகளைப் பெற்றுவந்தது தடுக்கப்பட்டது. அனைவருக்கும் ஆதார் அட்டை அடைப்படையிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது ஏற்புடையதே.
இராம. கோவிந்தன், தென்னிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com