'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்..

'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்..

நேர்மையற்றது
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களும் தங்கள் வாரிசுகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டுமானால் இவர்களது பிள்ளைகள் அங்கு படித்தால்தான் சாத்தியப்படும். அரசின் சலுகைகளைப் பெறும் இவர்கள், அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை இவற்றைப் புறந்தள்ளுவது நேர்மையற்றது.
கீர்த்தி மோகன், கீழவாசல்.

முன்னுதாரணம்
பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்களே தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதால், மற்றவர்கள் எப்படி அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்? இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை குறைந்து, படிப்படியாக அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது.
கு.ம. சங்கரநாராயணன், ஆழ்வார்குறிச்சி.

ஏன் விதிவிலக்கு?
இது தவறானது. எந்த ஒரு தனி மனிதனுக்கும் தனது குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை அரசாங்கம் பறிக்க விரும்பினால், அது ஜனநாயக நாடாகாது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? அரசை நடத்துபவர்களே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில்லையே?
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

வசதிகள்
கல்வித்துறை தனியாரிடம் இருப்பதால்தானே, தனியார் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான கேள்வி எழுகிறது. அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளில் தனியார் பள்ளிகளே கிடையாது. தமிழகத்திலும் 1965 வரை போர்டு ஸ்கூல், முனிசிபல் ஸ்கூல் என அரசே பள்ளிகளை நடத்தியது. ஆகவே, பள்ளிக்கல்விப் பொறுப்பை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதி
களையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

நா. திருமலை, மதுரை.
கல்விச் சேவை
இந்தக் கருத்து முற்றிலும் சரியே. தனியார் பள்ளிகளின் அரசாட்சி காலம் அரங்கேறுவதற்கு முன்பு சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக கல்விச் சேவையை செய்தது அரசுப் பள்ளிகளே. இன்று உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்தவர்களே. ஈன்ற அன்னையை பழிப்பது எப்படி இழிவோ, அதைப் போன்றதுதான் தன்னை ஆளாக்கிவிட்ட அரசுப் பள்ளிகளை அவமதித்து, புறக்கணிப்பது.
நூர்மணாளன், சித்தார்கோட்டை.

சுயநலம்
ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தங்கள் பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளியில் படித்து, பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்பது சுயநல எண்ணமே. மற்ற பிள்ளைகளைப் பற்றி அவர்கள் சிந்தனை செய்வது கிடையாது. சுயநலம், குறுகிய எண்ணத்தை விடுத்து தங்கள் பிள்ளைகளை தாமாகவே முன்வந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
கோ. மோகன மணி, குளித்தலை.

உரிமைச் சிதைவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் தவறான கருத்து. இது பொது தர்மம் ஆகாது. உரிமைச் சிதைவு ஆகும். தனியார் பள்ளிகள் என்றும் அரசுப் பள்ளிகள் என்றும் பிரித்துப் பார்ப்பது சரியல்ல. அவரவர்களின் சூழ்நிலை, மாணவரின் விருப்பம் குறித்த தீர்வு இது. எனவே இக்கருத்து ஏற்புடையதன்று.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மனநிலை
பொதுத் தேர்வுகளில் முதல்தர மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்லாமல், அங்குள்ள வசதிகளும் உகந்த சூழல்களும்தான் அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தூண்டுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்தாலும், மாவட்ட, மாநில அளவில் மதிப்பெண்கள் பெறுவதற்கு தனியார் பள்ளிகளே ஏற்ற இடம் என்று நினைக்கும் மனநிலையை முதற்கண் மாற்ற வேண்டும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

கானல் நீர்
தற்போது சுயநலம், பொருளாதார ஏற்றம் இவற்றின் காரணமாக தனியார் பள்ளிகளில் சேர்ப்பது என்ற கானல் நீரை நோக்கி பெற்றோர் ஓடுகின்றனர். அறிவுக் கூர்மையுள்ள பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியும், தனியார் பள்ளியும் ஒன்றே. இந்த மனநிலையை மாற்ற ஒரே வழி, அரசாணை மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதே.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

நல்லதல்ல
நல்ல சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மிகக் குறைவான சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் தம் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவது கல்வித் (அரசு) துறைக்கு நல்லதல்ல. ஒரு மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து முன்னுதாரணமாக விளங்கியதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆ. லியோன், மறைலைநகர்.

சான்றோன்
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் ஒப்பற்ற கல்விப் பணிக்காக. அவர்கள் சம்பாதித்த பணத்தின் மூலம் அவர்களுடைய பிள்ளைகளின் நலன் கருதி எங்கு வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம். சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன்.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

அவரவர் விருப்பம்
அவரவர் விரும்பிய பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது பெற்றோரின் விருப்பம். இது ஜனநாயக நாடு. சமீபகாலமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறிவைத்து வீசப்படுகின்ற வசவு வார்த்தைகள் சரியல்ல. முதலில் நாட்டில் இருக்கும் பல்வேறு கல்விமுறைகளை ஒன்றாக்கிக் காட்ட வேண்டும். அனைவருக்கும் ஒரேவிதமான கல்வி என்ற நிலை ஏற்படும்போது இதுபோன்ற விவாதங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லை.
மா. பழனி, பென்னாகரம்.

கட்டமைப்பு
ஆசிரியர் மட்டுமே அரசு ஊழியர் போன்று கூறப்படும் கருத்து ஆசிரியர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்கள் மட்டுமே நிறைவேற்ற முடியாது. எல்லோரும் விரும்புவது அரசு வேலை. அரசுப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற சட்டம் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த மாணவர்களையும் அரசுப் பள்ளியில் சேர்த்து விடுவார்களே.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இடஒதுக்கீடு
அனைத்து அரசு ஊழியரும் அரசுப் பள்ளியில் சேர்க்க எண்ணும் வகையில் கற்றல், கற்பித்தல் நிகழ்வை சரிசெய்ய வேண்டும். உயர்கல்வி நிறுவனமான அரசுக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்தும், தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவருக்கே முன்னுரிமை எனவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோ.லோகநாதன், திருப்பத்தூர்.

பட்டறிவு
மனிதர்கள் பட்டறிவு மூலம் ஒரு செயலைச் செய்யும்பொழுது அரசு அதற்குத் தடை போடுவது எதிர்மறையானது. மழையை கடலில் பெய்யக்கூடாது என்று தடை போட முடியுமா? பிள்ளைகளை வளர்ப்பதில் வழிகாட்டுதலில், கல்வியில் பெற்றோர்தான் முன்னின்று செயல்படுவார்கள். எனவே, பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற கருத்து சரியானது இல்லை.
உ. இராசாமணி, மானாமதுரை.

அனுபவக் கல்வி
கல்வியில் மாற்றம் ஏற்பட்டால்தான் விழிப்புணர்வு ஏற்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதனை முன்னெடுத்து நடத்தினால் சமூகமே மாற்றத்திற்கு வழிவகைச் செய்யும். கட்டணக் கொள்ளையிலிருந்து விடுபடவும் கல்வியாளர்களின் கருத்திற்கு உயிர்ப்புக் கொடுக்கவும், கற்றலில் சுதந்திரமான சூழலை அனுபவக் கல்வியுடனும் மாணவர் -  ஆசிரியர் புரிதலை அதிகரிப்பதற்கும், இக்கேள்வி இச்சூழலில் அவசியமாகிறது.
ச. ரேவதி, தாரமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com