'பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கக் கோருவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள் சில..

'பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கக் கோருவது சரியா?'

நியாயமானது
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கக் கோருவது நியாயமானதுதான். கிராமப்புற மக்கள் பலரிடம் இவ்வகையான நோட்டுகள் இன்றும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தங்கள் வீடுகளில் மறந்து சிலர் இவ்வகையான நோட்டுகளைப் பல இடங்களில் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கொடுப்பதில் தவறு இல்லை.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

கட்டாயம்
இக்கருத்து முற்றிலும் சரியே. இந்தியா இன்னும் முழுமையான கல்வி அறிவு பெறவில்லை. கூலிவேலை செய்து சம்பாதித்து அதை சிக்கனமாக செலவு செய்தபின் மீதியை சேமித்து 500 அல்லது 1000 வந்தபின் அதை ஒரு முழு நோட்டாக ஆக்கி வீட்டிலேயே சேமித்து வைக்கும் பழக்கம் இன்றும் உண்டு. ஆகவே மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டியது கட்டாயம்.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

குழப்பம்
செல்லாததாக்கிய பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பது என்பது ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாகும். பயந்து பயந்து நோட்டுகளை அப்புறப்படுத்தியும் அழித்தும் ஓய்ந்துவிட்டனர் ஊழல்வாதிகள். இந்த அறிவிப்பு பழைய நோட்டுகளை வைத்திருக்கும் ஊழல்வாதிகளுக்குத்தான் பயன் தரும். ஏழை மக்களுக்கு இது பயன் படாது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தவறில்லை
எந்த ஓர் அறிவிப்புக்கும் மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படுவது வழக்கம்தான். எனவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு தருவதில் தவறில்லை. இதனால் கோயில் உண்டியல்களில் சேர்ந்துள்ள பணம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள பழைய நோட்டுகள் அயல்நாட்டில் உள்ளவர்களிடம் இருக்கும் நோட்டுகள் ஆகியவற்றை மாற்றிக்கொள்ள முடியும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

சரியன்று
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவது தேவையற்ற விமர்சனத்திற்கும், பிரச்னைக்குமே வழிவகுக்கும். மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையை இந்த முடிவு நிச்சயம் பாதிக்கும். அரசாங்கம் எடுக்கும் முக்கிய முடிவுகளில் இதுபோன்று மீண்டும் மீண்டும் நீட்டிப்பு வழங்குவது சரியன்று.
அரிமதி இளம்பரிதி,
புதுச்சேரி.

அர்த்தமற்றது
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்திவிட்டதாக அரசு கூறிவிட்டது. எனவே இப்போது அவற்றை மாற்ற மேலும் ஒரு வாய்ப்பு வழங்கத் தேவையில்லை. இது பெரும் பணக்காரர்களுக்கும், கள்ளப் பணம் வைத்திருப்போருக்கு அரசு உதவி செய்வது போலாகும். அது செல்லாதெனஅறிவித்த நடவடிக்கையை அர்த்தமற்றதாக்கிவிடும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

அவகாசம்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. பலர் தங்கள் கைவசம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றவும் செய்தனர். பின்னர் இறுதியாக ஒரு கெடு நாளும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் பழைய நோட்டுகளை மாற்றாதவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

பண முதலைகள்
கிராமப்புறங்களில் எத்தனையோ பேர் பழைய நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருப்பர். இப்படிப்பட்டவர்களிடம் அதிக பணம் இருக்காது. சில ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கும். எனவே அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இப்படிப்பட்ட வாய்ப்பை பெரும் பணமுதலைகள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தரக்கூடாது
ஞானமகன், ஆரப்பள்ளம்.

முடிந்த கதை
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று இப்போது கூறுவோர் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். பழைய நோட்டுகளை மாற்றுவதற்குக் கொடுத்த காலக்கெடு முடிந்துவிட்டது. மீண்டும் அனுமதித்தால் கருப்புப் பணம் வெள்ளையாக்கப்படும். இது ஊழலுக்கு வழி வகுக்கும். பழைய நோட்டுகளை மாற்றுவது என்பது நடந்து முடிந்த கதை.
ஜா. இராமநாதன், மதுரை.

வாய்ப்பு
முன்னமே போதிய அவகாசம் தரப்பட்டுவிட்டது. முறைகேடாக சம்பாதித்த ஊழல் பணத்தையும், கருப்புப் பணத்தையும் மாற்றவே இது வாய்ப்பாக அமையும். அரசு மேலும் பலமுறை வாய்ப்புகளை வழங்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே இது ஏற்படுத்தும். பொதுமக்களிடையே நல்ல நெறிமுறைகளை ஏற்படுத்த அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

துரோகம்
ஏற்கெனவே கால அவகாசம் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தி நோட்டுகளை மாற்றாதவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக பணம் வைத்துள்ள கருப்புப் பண முதலைகளுக்கும் கொடுக்கப்படும் வாய்ப்பாகவே இது அமையும். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது முடிந்து போன விஷயம். அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அது பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

எச்சரிக்கை
முன்பே பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. பழைய நோட்டுகளை மாற்றாமல் வைத்திருப்பவர்கள், கள்ளப் பணம் வைத்திருப்பதாகக் கருதி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர். பலர் இந்த நோட்டுகளை தெருக்களில் வீசி எறிந்தும், தீயிட்டும் அழித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கக் கோருவதில் நியாயமே இல்லை.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

தவறான வழி
இந்தக் கருத்து சரியில்லை. முன்பு வழங்கிய காலக்கெடுவுக்குள் ஏறக்குறைய அனைவருமே பழைய நோட்டுகளைமாற்றிவிட்டனர். ஒரு சிலர் மறைத்து வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய்களை மாற்றுவதற்கு வாய்ப்பு கேட்கிறார்கள். அது தவறான வழியில் சம்பாதித்த பணமாகத்தான் இருக்க முடியும். ஆகவே பழைய நோட்டுகளை மாற்ற இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.
என். சண்முகம், திருவண்ணாமலை.

அவசியம்
தவறு செய்பவர்கள் திருந்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஒருமுறை வழங்கலாம். இரண்டு முறை வழங்கலாம். அப்படியும் திருந்தாதவர்களுக்குக் கடுமையான தண்டனையே சரியான தீர்வு. ஒருசிலரைத் தப்புவிக்க அரசு முயல்கிறது என்று பொதுமக்கள் நினைப்பர். சரியான திட்டமிடலும் அதனை நிறைவேற்றத் தேவையான உறுதியான நடவடிக்கையும் ஆட்சி தலைமைக்கு அவசியம்.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

சாத்தியமல்ல
இது நடைமுறை சாத்தியமல்ல. அரசின் சட்டத்திட்டங்களின்படி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்தை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் தெரிவிக்கப்படும் வாதம். இந்த வாய்ப்பு ஒருமுறை அளிக்கப்பட்டால், மறுமுறையும் கேட்கக்கூடிய நிலை உருவாகும். கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு மீண்டும் அவகாசம் வழங்கத் தேவையில்லை.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

போதுமானது
மீண்டும் ஒரு வாய்ப்பு தருவதால் கருப்புப் பணம்தான் வெள்ளையாகும். காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நலன் கருதி, சில இழப்புகளை குடிமக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். ஒரே இரவில் செல்லாது என அறிவித்தாலும் மாற்றிக் கொள்ள தரப்பட்ட நாட்கள் போதுமானதே. நீட்டித்தால் அரசின் நோக்கம் நிறைவேறாது.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com