"ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்கிற கருத்து சரியானதுதான். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் அனைவரும் அதனைப் பயன்படுத்துவதில்லை.

கேள்விக்குறி

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்கிற கருத்து சரியானதுதான். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் அனைவரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. நாட்டு மக்கள் எல்லாருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு தெரிந்தபின்பு ஆன்லைன் விற்பனையை அனுமதிக்கலாம். சிறு வியாபாரிகளின் எதிர்காலம் ஆன்லைன் வணிகத்தால் கேள்விக்குறியாகும்.

க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சாத்தியமல்ல

பெரும்பாலான முதியவர்கள் மாத்திரை மருந்துகளிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மருந்துகளை நாமே நேரில் மருந்து கடைக்குச் சென்று மருத்துவர் சீட்டைக் கொடுத்து வாங்குவதுதான் நல்லது. சில மருந்துகள் இல்லாவிட்டால் அதே தன்மையுள்ள வேறு மருந்துகளை அப்போதே மாற்றிப் பெறுவதும் எளிது. இது ஆன்லைன் மருந்தில் நிச்சயமாக சாத்தியமல்ல.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

அறிவியல் வளர்ச்சி

அனைத்துப் பொருள்களும் ஆன்லைனில் பெற வசதி இருக்கும்போது மருந்து வணிகத்தை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்? ஆன்லைன் வசதி இருந்தால் ஓரிடத்தில் கிடைக்காத மருந்தை உலகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் வாங்க வசதி கிடைக்கும். மேலும் ஆன்லைன் செல்வந்தர்கள் மட்டுமே மருந்துகளை ஆன்லைனின் வாங்குகின்றனர். அறிவியல் வளர்ச்சிக்கு தடை வேண்டாம்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஐயமில்லை

ஆன்லைன் விற்பனையால் போதை மருந்துகள், மயக்க மருந்துகள், கருக்கலைப்பு மருந்துகள் போன்றவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உருவாகும். போலி மருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் உயரிழப்புகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. கடையில் மருந்து வாங்கும் போதே தவறு நேர்ந்து விடுகிறது என்பதை உணர வேண்டும்.

என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, இராஜபாளையம்.


பரிசோதனை

வெவ்வேறு மருந்துகளை வெவ்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மருத்துவர்கள் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்து பொருத்தமான மருந்துகளை வழங்க முடியும். ஆன்லைனில் அதுபோல் செய்ய முடியாது. சில நிறுவனத்தின் மருந்து ஒரு சிலர் உடல் நிலைக்கு ஒத்துவராது. அதனால் ஆன்லைனின் வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது சரியே.

தொ. எழில்நிலவன், களமருதூர்.


வரப்பிரசாதம்

மருந்துகடைகளில் நாம் மருந்துகளை வாங்கும்பொழுது பல விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மருந்து வாங்குபவர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் மருந்து விலையில் தள்ளுபடி செய்து விற்பனை செய்கின்றனர். வயதானவர்களுக்கும், மருந்து கடைகளுக்கு நேரடியாக சென்று மருந்துகளை வாங்க முடியாதவர்களுக்கும் ஆன்லைன் மருந்து விற்பனை ஒரு வரப்பிரசாதம்.

தி.பெ. ராசேந்திரன், திருநாகேச்சுரம்.


குளறுபடிகள்

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பது சரியே. ஏனென்றால், மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகளை நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கும் போதே பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற தவறுகள் ஆன்லைனில் அதிகம் நிகழ வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் விஷயத்தில் அலட்சியம் கூடாது. ஆன்லைன் விற்பனைக்கு தடை தேவை.

சோம. பொன்னுசாமி, சென்னை.


நம்பகத்தன்மை
மருந்துகள் ஆன்லைனில் விற்கப்படுவது தவறல்ல. ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை மட்டும் மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது. நம் மக்கள் நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பவர்கள். எனவே அவர்கள் மருந்தகங்களில் மருந்து வாங்குவதையே விரும்புவார்கள். மேல்தட்டு மக்கள் மட்டுமே ஆன்லைன் விற்பனையை அணுகுவார்கள். இதனால் பெரிய பாதிப்பு வராது.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.


காலதாமதம்

ஆன்லைனில் நோயாளி குறிப்பிடுகிற மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை அனுப்பி வைத்தால் நோயுற்றவருக்கு அதனால் ஏதாவது
பலன் இருக்குமா? அவர் அந்த மருந்தை எப்படித் திரும்ப அனுப்ப முடியும்? அப்படியே அனுப்பினாலும் சரியான மருந்தைப் பெறுவதற்கு காலதாமதம் ஆகும். நமக்குத் தேவையான மருந்தை கடையில் கேட்டு வாங்கிப் பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.

அ. கருப்பையா, பொன்னமராவதி.


வரைமுறைகள்

ஆன்லைன் மருந்துகளை மருத்துவரின் சீட்டு இருந்தால்தான் வாங்க முடியும் என்ற நிலை ஏற்படவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதோடு அதற்குண்டான வரைமுறைகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். அறிவியல் வளர்ச்சி மிகவும் அதிகரித்துள்ள இந்தச் சூழலில் ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்து சரியல்ல.

என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.


தில்லுமுல்லு

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதால் பலவிதமான தில்லுமுல்லுகள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. போலி நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் உருவாகும். மருத்துவர் கொடுக்கும் சீட்டை கொண்டு நேரடியாய் கடையில் வாங்குவதுதான் நமது உடல்நலத்தைக் காப்பதற்கான வழி. ஆன்லைன் விற்பனையில் தவறு நிகழ்ந்தால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போவதும் எளிதல்ல.

ஆர். பைரவி, புதுச்சேரி.


பாதுகாப்பு
ஆன்லைன் மருந்து விற்பனையை முழுவதும் தடைசெய்ய வேண்டும் என்பது சரியாக வராது. சிலரால் வெளியே சென்று வாங்கமுடியாத நிலை இருக்கலாம். அவர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி நேரில் மருந்து கடைகளுக்குப் போய் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது; பாதுகாப்பானது.

ஜெயந்தி சேகர், சென்னை.


நன்மை

மருந்து என்பது மனிதர்களின் உயிர்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட மருந்துகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டியது அவசியம். அவரவர் உடல்நிலைக்கேற்ப மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மருந்துக் கடைகளில் வாங்குவதுதான் நன்மை பயக்கும்.

உ. இராசமாணிக்கம், கடலூர்.

ஏற்புடையதல்ல

நுகர்வோர் தன் விருப்பப்படி தனக்கு தேவையான பொருட்களை பணம் கொடுத்து வாங்குகிறார். விரும்பிய இடத்தில் வாங்குகிறார். அவரை ஆன்லைனில் வாங்காதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சில மருந்துக் கடைகள் மருந்துகளை கொள்ளை லாபம் வைத்து விற்கின்றனர். இது தடுக்கப்படுமா? அறிவியல் உலகில் ஆன்லைன் வியாபாரம் கூடாது என்பது ஏற்புடையதல்ல.

என். சண்முகம், திருவண்ணாமலை.


பாதிப்பு

இதனால் சில்லறை வியாபாரிகள் பாதிப்படைவர். உடனடி மருத்துவ சேவைக்கு இது ஒத்து வராது. அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு உதவிட முடியாது. போலி மருத்துவப் பயன்பாடு அதிகரிக்கும். அந்நிய நாட்டு மருத்துவ நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் நசிந்து போகும். எனவே ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும்.

கே. கோவிந்தராஜன், அல்லூர்.

தவறான போக்கு

ஆன்லைன் வர்த்தகத்தில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே யார் வேண்டுமானாலும் எந்த மருந்தையும் வாங்க முடிகிறது. போதை மருந்து, மயக்க மருந்து, தூக்க மருந்து, கருக்கலைப்பு மருந்து போன்ற எந்த மருந்தையும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க வழியுள்ளது. இது மிகவும் தவறான போக்கு. மேலும் சிறிய மருந்துக் கடைகள் இதனால் நிச்சயம் பாதிப்படையும்.

ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com