'பள்ளி மாணவர்களுக்கு சீருடை இருப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பள்ளி மாணவர்களுக்கு சீருடை இருப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கட்டாயம்
பள்ளி மாணவர்களுக்கு இருப்பதுபோல ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ,குறிப்பாக, பெண் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ள சீருடை நடைமுறையில் உள்ளது. அதுபோன்றே அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு சீருடையைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஐக்கியம் சி. வையாபுரி, ஆறகளூர்.

சிறப்பு
இக்கருத்து சரியே. மருத்துவர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு, பேருந்து ஓட்டுநர்களுக்கு, காவல்துறையினருக்கு என தனித்தனி சீருடைகள் இருக்கின்றன. சாலைகளைத் தூய்மைப்படுத்துப் பணியில் ஈடுபடுவோருக்கும்கூட தனியான உடைகள் தரப்பட்டுள்ளன. அந்த வகையில், கல்விச் சேவையை அளிக்கும் ஆசிரியர்களுக்கும் சீருடை இருப்பின் சிறப்பாகவே அமையும்.
வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

சந்தேகம்
மாணவர்கள் மனதில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு எண்ணம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவர்களை சீருடை அணியச் சொல்கிறோம். அதிகமாக ஊதியம் பெறும் ஆசிரியர்களின் நிலை அப்படிப்பட்டதல்ல. சீருடை அணிந்து வருவதால் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடிவிடும் என்பது சந்தேகமே. ஆசிரியர்களின் திறமை அவர்கள் கற்பிப்பதில்தான் இருக்கிறது.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

சரியல்ல
அநாகரிக உடைகளை மாணவர்கள் அணிந்து வந்தால் கண்டிக்கிறோம். மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் எவ்வுடை அணிந்து வந்தாலும் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது சரியல்ல. மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி ஆசிரியர்களை அறிந்திட சீருடை உதவும். மேலும் சில ஆசிரியர்கள் வேலை நேரங்களில் வெளியில் செல்வது முற்றிலும் இல்லாமல் ஆகும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அவசியமல்ல
இக்கருத்து ஏற்புடையதல்ல. ஆசிரியர்கள் மாணவர்களின் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நாகரிகமான முறையில் எந்த உடையை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் அணியலாமே. மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பது அவர்கள் பாடம் கற்பிக்கும் முறையை வைத்துத்தான். எனவே ஆசிரியர்களுக்கு கட்டாயச் சீருடை என்ற நிபந்தனை அவசியமல்ல.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

முன்மாதிரி
ஆசிரியர்களுக்கும் சீருடை இருப்பது நல்லதே. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உடையிலும் அதைக்கொண்டு வந்தால் மாணவர்கள் கற்றுக் கொள்வர். மாணவர்களை இவ்வாறுதான் உடுத்த வேண்டும் என்று வற்புறுத்துவதைக் காட்டிலும், தானே அவ்வாறு உடுத்தி எடுத்துக்காட்டுவதற்கு சீருடை உதவும். எனவே ஆசிரியர் சீருடை வரவேற்கத்தக்கதே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

விபரீதம்
ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் எனக் கருதுவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் மாணவர்களுடன் உள்ளத்தால் உணர்வால் உறவாடிக் கற்பித்தல் தொழிலைச் செய்வதால்தான். ஆசிரியர்கள் மாணவர்களைப் போன்று சீருடை அணிவதைக் கட்டாயமாக்கினால் அது ஆசிரியர்களை மாணவர்களிடமிருந்து அந்நியமாக்கும். எனவே வேண்டாம் இந்த விபரீத முயற்சி.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

அடையாளம்
ஆசிரியர்களும், ஆசிரியைகளும் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தால், அந்தந்த பள்ளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். சீருடை என்பது ஆசிரியருக்கு அங்கீகாரத்தை பெற்று தருவதோடல்லாமல், ஆசிரியர் - மாணவர் இடையே நல்ல பண்ûபுகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும் எனவே மாணவர்களைப் போல் சீருடை ஆசிரியர்களுக்கும் வேண்டும் என்ற கருத்து சரியே.
என்.பி. சீனிவாசன், சென்னை.

தவறான கருத்து
மாணவர்களின் விதவிதமான உடைகளினால் ஏழை, பணக்காரன் என்கிற எண்ணம் தோன்றி அது மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் என்ற உளவியல் காரணத்தால்தான் மாணவர்களுக்கு சீருடை கட்டாயமாக்கப்பட்டது. ஏழை என்று கூற முடியாதபடி அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்களின் நிலை அப்படியல்ல. எனவே ஆசிரியர்களுக்கு சீருடை கட்டாயம் என்பது தவறான கருத்தாகும்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

ஒழுங்குமுறை
பள்ளி மாணவர்களுக்கு சீருடை இருப்பதுபோல ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயமாக்கலாம். தற்பொழுது ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமாக ஆடை அணிந்து வருகின்றார்கள். எல்லா ஆசிரியர்களிடமும் ஒரேவிதமான ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆடைகளில் சில குறிப்பிட்ட நிறங்கள் கண்களை உறுத்தும் விதமாக இருக்கும். எனவே, இக்கருத்து சரி.
தி. ராசேந்திரன், திருநாகேச்சுரம்.

தொழிலகம்
ஆசிரியர்களின் நடை, உடை, பாவனை போன்றவைதான் அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து உயர்த்தி சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை ஏற்படுத்தித் தரும். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள எல்லோருமே சீருடையில்தான் இருப்பார்கள் என்றால், அந்தப்பள்ளி தொழிலகமாகத்தான் தோன்றுமேயன்றி கல்விக்கூடமாகத் திகழாது. எனவே ஆசிரியர்களுக்கு சீருடை தேவையில்லை.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

கண்ணியம்
ஆசிரியர்கள் உடையில் கண்ணியம் தேவை. அதோடு, நுகர்ச்சியுலகில் விலை உயர்ந்த ஆடைகளோடு வரும் ஆசிரியர்களைவிட்டு, மாணவர்கள் விலகியே நிற்பர். ஆனால் அதுவே சீருடையாக மாற்றப்பட்டால், இரு சாராருக்குமிடையில் இடைவெளி இருக்காது. தோழமை அதிகமாகி, மாணவர்கள் தயக்கமின்றி பாடங்களைக் கேட்டுப் பயின்று கல்வியில் சிறக்க வாய்ப்புண்டு!
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

சமம்
ஆசிரியர்களுக்கும் சீருடை கொடுக்கப்படுவதால் இரண்டு நன்மைகள் உள்ளன. முதலாவது, ஒரு ஆசிரியர் சக ஆசிரியர்களைப்போல அதிக விலையுள்ள ஆடைகள் வாங்கி சிரமப்பட வேண்டியதில்லை. இரண்டாவது, ஆசிரியர்களின் உடையைப் பார்த்து மாணவர்கள் மனதில் மதிப்பு ஏற்படாது. ஆடையைப் பொருத்தவரை மாணவர்களும், ஆசிரியர்களும் சமம் என்ற நிலை வரும்.
கலைப்பித்தன், கடலூர்.

பயனில்லை
தமிழ் ஆசிரியர்கள் வேட்டி அணிந்து வருவதைத்தான் விரும்புவார்கள். ஆங்கில பாடம் எடுப்பவர்களின் உடைகள் கண்டிப்பாக மாறுபாடாகத்தான் இருக்கும். ஆசிரியர்களுக்கும் சீருடையை கட்டாயமாக்குவதால் ஒரு பயனும் இல்லை. முப்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை இருந்தால் அது நிச்சயமாக சரிவராது.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

வேற்றுமை மறையும்
ஆசிரியர்களுக்கு சீருடை அவசியம்தான். தற்போது தனியார் பள்ளிகளில் இம்முறை உள்ளது. சீருடையால் ஆசிரியர்களுக்குள் இருக்கும் வேற்றுமை மறையும். ஆடம்பர உடை அணிவது தவிர்க்கப்படும். ஊட்டி போன்ற இடங்களில் இன்றும் இம்முறை வழக்கில் உள்ளது. ஆசிரியைகள் வண்ண வண்ண புடவைகளை அணிவதையே பெருமையாய் கருதும் மனநிலை மாற வேண்டும்.
பி. ரமேஷ், புதுச்சேரி.

கம்பீரம்
ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியே. சீருடையால் ஆசிரியர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கும் ஓர் அடையாளம் கிடைக்கிறது. சீருடை அணிந்தால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும். சாதாரண உடைகளைப் போலல்லாமல், சீருடை அணிந்தால் ஒரு கம்பீர தோற்றம் கிடைக்கும்.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
இராஜபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com