"விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும் என்கிற அறிவிப்பு சரியா?'

விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும் என்ற அறிவிப்பு முற்றிலும் தவறான ஒன்று.

தவறு

விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும் என்ற அறிவிப்பு முற்றிலும் தவறான ஒன்று. மாநிலங்களின் வருவாயை 70 சதவீதம் மத்திய அரசு பெற்றுக் கொள்ளும் நிலையில், இந்த அறிவிப்பு சரியானது அல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய விவசாய நாடு. கிராமங்களின் தொகுப்பு இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றால்தான் வல்லரசு என்ற நிலையை எட்ட முடியும். விவசாய கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமையை மத்திய - மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும்.

க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

பாலம்

வங்கி நிர்வாகத்தை வைத்திருப்பது மத்திய அரசு. வங்கிகளையும் மத்திய அரசையும் இணைக்கும் ஒரு பாலம்தான் மாநில அரசு. வங்கியின் செயல்முறைக் விதிமுறைகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்குக் கடன் தொகை வழங்கப்படுகிறது. விவசாயம் பொய்த்து விட்டதால் கடன் தள்ளுபடி கோரப்படுகிறது. மாநில அரசு மூலம் நிலைமையைக் கண்டறிந்து கடனை தள்ளுபடி செய்ய வேண்டியது வங்கியும் மத்திய அரசும்தான்.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

பொறுப்பு

விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குவது, நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பது, பயிர்க்கடன் வழங்குவது, கொள்முதல் செய்வது, விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற அனைத்தும் செய்யக் கடமைப்பட்டுள்ள மாநில அரசுதான். எனவே, சூழ்நிலை கருதி விவசாயிகளுக்கான கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் சம்பந்தப்பட்ட வரையில் மத்திய அரசு வழங்கும் மானியங்களை முறையாகப் பெற்று வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு எப்போதும் உண்டு.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

சரியல்ல

இயற்கை பொய்த்ததற்கு விவசாயி காரணமல்ல. மாநில அரசுகள் வரி வருமானத்தை மட்டுமே வருவாயாகக் கொண்டுள்ளன. தமிழகம் போன்ற மாநிலங்களில் மது விற்பனை மூலமும் வருமானம் வந்தது. தற்போது அது இல்லை. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தலால் மொத்த வரி வருவாயும் மத்திய அரசிற்கே செல்லும். வரி வருவாயும் இல்லை. மது விற்பனை வருவாயும் இல்லை. இந்நிலையில் விவசாயிகளின் அவலம் கண்டு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை மாநிலங்கள் தான் ஏற்க வேண்டுமென்கிற மத்திய அரசின் அறிவிப்பு சரியல்ல.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

விவேகமன்று

விளைச்சலுக்கு தேவையான நீர் ஆதாரத்தைப் பெருக்குதல், தடையில்லா மின்சாரம், காலத்தே விவசாய இடுபொருள் வழங்குதல், தானியங்களுக்கு நியாயமான விலை நிர்ணயித்தல் - இப்படியெல்லாம் விவசாயத்தை மேம்படுத்துவது மாநிலத்தின் தலையாய கடமை. விவசாயம் பொய்த்து, விவசாயக் கடன் தள்ளுபடி கேட்கும் நிலைமை ஏற்படும்போது, அதை அந்தந்த மாநிலங்கள்தான் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். அதுவே நியாயமான நடவடிக்கையாகும். மாறாக மத்திய அரசினை எதிர்பார்ப்பது விவேகமன்று.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

ஜெய் கிசான்

விவசாயத்துறை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 30 விழுக்காடு இதிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே நிதிச் சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும் என்பது சரியல்ல. "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற கோஷம் இந்தியா முழுமைக்கும் பொதுவானது. எந்தவொரு மாநிலத்திற்கு மட்டுமல்ல. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

உ. இராசமாணிக்கம், கடலூர்.

தார்மிகக் கடமை

விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும் என்கிற அறிவிப்பு சரியல்ல. முற்றிலும் தவறானதாகும். மாநில அரசுகள் நடுவண் அரசுடன் இணைந்தே செயல்படுகின்றன. ஒரு மாநிலம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது மத்திய அரசு கை கொடுத்து உதவ வேண்டும். ஏக இந்தியா என்றும் ஒற்றுமை என்றும், தேசியம் என்றும் பேசுவதால் மட்டும் நன்மை விளையாது. தக்க தருணத்தில் மத்திய அரசு நிலைமையை நன்கு உணர்ந்து மாநில அரசுகளுக்கு உதவுவதுதான் தார்மிகக் கடமையாகும்.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

நல்ல முடிவு

இந்த அறிவிப்பு சரியே. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சிகள் விவசாயிகளின் கடன்கள் முழுதும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி மொழி கூறுகின்றன. ஆட்சியில் அமர்ந்ததும் நிதிப்பற்றாக்குறையால் அதனை செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை அணுகி கலந்துபேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இரு அரசுகளும் ஒன்றுபட்டு செயல்படுவதே சிறப்பு.

என். சண்முகம், திருவண்ணாமலை.

அவசியம்

விவசாயிகள் பாதிக்கப்படும்போது , அவர்கள் வங்கிகள் உள்பட பல நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்படுகிறது. எப்போதாவது நேரும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும்போது மாநில அரசிற்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்க மத்திய அரசும் உதவிட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். விவசாயிகளின் நலனில் மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்குமே பொறுப்பும், கடமையும் உண்டு.

வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

சுமை

இந்த முடிவு சரியானதே. திட்டமிடப்படாத செலவினங்களால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை கூடியுள்ளது. அள்ளிக்கொடுத்த இலவசங்களால் தமிழக அரசும் தள்ளாடுகிறது. வாக்குச் சீட்டை மட்டுமே நம்பி அரசுகள் சகட்டு மேனிக்கு மானியம் மற்றும் கடன் தொகைகளை அள்ளி வீசியுள்ளன. வருமானத்தின் அளவு பற்றித் தெரியாமல் செலவு செய்யும் குடும்பத் தலைமைதான் சுமையை ஏற்க வேண்டும். இது மாநிலங்களுக்கும் பொருந்தும்.

ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

வாக்கு வங்கி

விவசாய கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமே. நிரந்தர தீர்வு, அவர்களின் விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்வதே. பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடியை மாநிலங்கள் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டே செய்கிறது. விவசாயிகள் வளமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதில்லை. கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச் சுமையில் சிறு பகுதியை மத்திய அரசு ஏற்கலாம். பெரும்பகுதியை மாநில அரசுதான் ஏற்க வேண்டும்.

தி. ராஜேந்திரன், திருநாகேஸ்வரம்.

வரிப்பணம்

விவசாயிகளுக்கு வேண்டிய விதைகள், உர வகைகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கலாம். ஆனால் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதாகாது. இது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகளின் வளைந்து கொடுக்கும் நிலையாகும். அதிக விளைச்சல் ஏற்பட்டால், அவ்விளைச்சலின் ஒரு பகுதியை, அரசுக்குக் கொடுக்க விவசாயிகள் முன்வருவார்களா? விவசாயக் கடனை மாநில அரசோ அல்லது நடுவண் அரசோ தள்ளுபடி செய்கிறது என்றால் அது மக்களின் வரிப்பணந்தானே. நிதிச்சுமையை யார் ஏற்றால்தான் என்ன?

வை. பாவாடை, புதுச்சேரி.

கவனம்

விவசாயம் பொய்த்துப் போனால் கடனைத் திரும்பச்செலுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் கடனை ரத்து செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு யார் காரணம்? விவசாயம் செய்ய போதிய நீராதாரத்தைத் தருவது அரசின் கடமை. நீர் சேமிப்பில் மாநில அரசும், மத்திய அரசும் போதிய கவனம் செலுத்துவதில்லை. நீர் ஆதாரத்தைச் சேமித்துத் தந்தால் ஏன் விவசாயம் பொய்க்கிறது? ஆக அடிப்படைக் காரணம் அரசும், மலிவான அரசியலும்தான். அதனால் கடன் சுமையை மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்தே ஏற்க வேண்டும்.

கலைப்பித்தன், கடலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com