’நாட்டின் பிரதமரையும்மாநில முதல்வர்களையும் மக்கள் நேரடியாக வாக்களித்துதேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வரவேற்கத்தக்கது
பிரதமரையும் மாநில முதல்வர்களையும் மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை வரவேற்கத்தக்கது. இதனால் ஜனநாயகம் வலுவடையும். மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முதல்வரையோ பிரதமரையோ தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே பதவி ஏற்க முடியும்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.

ஜனநாயகம்
இக்கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இது வலிமையான மக்களாட்சிக்கு அடித்தளம் அமைத்துத் தருவதாக் அமையும். பிரதமராகவும் முதல்வராகவும் யார் வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதை இம்முறையின் மூலம் நன்கு அறியலாம். இதனை ஏற்பதுதான் உண்மையான ஜனநாயக நடைமுறை. இது தேர்தல் முடிவு வெளியானபின் ஏற்படும் குழப்பங்களை விலக்கும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சரியல்ல
இந்தக் கருத்து சரியல்ல. பதவியில் உள்ளபோது ஒரு பிரதமர் எதிர்பாராமல் இறந்துவிட்டால் என்ன ஆகும்? நாடு முழுவதும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். இந்திய போன்ற ஒரு நாட்டுக்கு அது ஏற்புடையதில்லை. எனவே, நாட்டின் பிரதமரையும் மாநில முதல்வர்களையும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டாம்.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

மாற்றம்
நாட்டின் பிரதமரையும் மாநில முதல்வர்களையும் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பது சிறந்த முறை. அதற்கு ஏற்ற வகையிலே வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேவையான மாற்றங்களைச் செய்திட வேண்டும். இதனால் சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவினைத் தேடி அலைந்து திரிவது தவிர்க்கப்படும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

விகிதாச்சாரம்
இது சர்வாதிகாரத்திற்குத்தான் வழிவகுக்கும். அவர்கள் தவறிழைக்கும்பொழுது அவர்களது பதவியைப் பறிக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்படுமெனில் இக்கருத்து சரியாக இருக்கும். அங்ஙனம் நடைபெற இயலாதெனில் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களித்து, வாக்கின் விகிதாச்சார அடிப்படையில் கட்சிகளே பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அவசியம்
தற்போது சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது போன்றே, நாட்டின் பிரதமரையும் மாநில முதல்வர்களையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை தாராளமாக கொண்டு வரலாம். அப்பொழுதுதான் பிரதமர் பதவியும், முதல்வர் பதவியும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும். இதற்காக சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம்.
ஏ. இரமணன், துறையூர்.

செம்மையான ஆட்சி
பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தால் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு கட்சியைச் சார்ந்தோராகவும், அதிக பலம் பெற்றவர்களாகவும் இருக்க, தலைமைப் பொறுப்பை ஏற்றுக்காள்ளக்கூடியவர் எதிர்த்தரப்பாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம். அந்த சூழலில் எல்லோரும் எப்படி ஒத்துழைப்பு நல்குவர்? அந்த ஆட்சி எப்படி செம்மையாகத் திகழும்?
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பொருத்தம்
இக்கருத்து நிச்சயம் வரவேற்கத்தக்கது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கைகளின் சதவீதத்தை அடிப்படையாக வைத்து பிரதமரையும் முதல்வர்களையும் தேர்ந்து எடுப்பது தவறான அணுகுமுறை. ஜனநாயகத்தில் சர்வ வல்லமை படைத்தவர்கள் பொதுமக்களே. அவர்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதே பொருத்தமானது.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

நல்ல ஆட்சி
நாட்டின் பிரதமரையும், மாநிலத்தின் முதலமைச்சர்களையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி வரும்போதுதான் நல்ல ஆட்சி அமைந்து நல்ல தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள். மக்களின் துன்பங்கள் நீக்க ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள். ஏதோ ஒரு தொகுதியில் வென்ற ஓர் உறுப்பினர் எப்படி ஒட்டுமொத்த மக்களின் மதிப்பை பெற்றவராக இருக்க முடியும்?
கு. உமாராணி, மேட்டுப்பாளையம்.

வேறு வேறு கட்சிகள்
இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரையோ பிரதமரையோ தேர்ந்தெடுக்கும்போது பெரும்பான்மை உள்ளவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்வார்கள். உறுப்பினர்கள் ஒரு கட்சியினராயும் முதல்வர் அல்லது பிரதமர் வேறு கட்சியைச் சார்ந்தவராகவும் இருந்துவிட்டால் ஆட்சி, அதிகாரம் முடங்கிப் போய்விடாதா?
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இழிசெயல்
இந்த கருத்து சரியே. சில அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டப்பேரவை உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி முதல்வர் மற்றும் பிரதமர் பதவியை அபகரித்துக் கொள்கின்றன. இந்த இழிசெயல் மாறுவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் ஆகியோரை பொதுமக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்துக்கொள்வது.
சு. இலக்குமணசுவாமி, மதுரை.

செயல்படா நிலை
இக்கருத்து சரியல்ல. ஏற்கெனவே மேயரை நேரடியாகத் தேர்வு செய்யும் நிலை இருந்தது. மேயர் பெரும்பான்மை கட்சினராக இல்லாத நிலையில் அவர் செயல்படாத நிலைதான் இருந்தது. அதே நிலைதான் இந்த முறையில் முதல்வர் மற்றும் பிரதமருக்கு ஏற்படும். அவர்கள் எந்தவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைத்தாலும் சுதந்திரமாக அதைச் செய்ய முடியாது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

பாடம்
நாட்டின் பிரதமரையும் மாநில முதல்வர்களையும் மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்து முற்றிலும் சரிதான். அரசியல்வாதிகள், பல்வேறு கட்சிகள், ஊழல் புரிவோர் இவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமானால் இந்த முடிவு ஏற்புடையதுதான். மக்களாட்சி முறையில் இப்படி ஒரு மாற்றத்தை ஒருமுறை முயற்சி செய்து பார்ப்பது நல்லது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

அதிகாரம்
மாநிலக் கட்சிகள் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்களின் நேரடி வாக்களிப்பில் பிரதமரும் மாநில முதல்வர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது தவறு. இதனால் தனிநபர் அதிகாரம்தான் கூடும். பல மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல வேட்பாளரைத் தோற்கடிக்கும் நிலை வரும். இப்போது உள்ள முறையையே நல்ல முறையில் பயன்படுத்த மத்திய அரசு முன்வர் வேண்டும்.
மு. நாச்சியப்பன், காரைக்குடி.

பாதிப்பு
பிரதமருக்கான அதிகாரம் என்னஎன்பதை மோடி ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய நிகழ்வின் மூலம் அறிவித்துவிட்டார். முதல்வர் பதவியும் அப்படியே. இவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாத் தரப்பு மக்களிடமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த இரு பதவிக்கு உரியவர்களை மக்கள் நேரிடையாக தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம் ஆகும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

வாக்கெடுப்பு
முக்கிய பொறுப்பும் அதிக அதிகாரமும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கே இருப்பதால், அவர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து சரிதான். அதற்கேற்றவாறு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்குமென்பதால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவைப் பொருத்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com