'திறமையாக செயல்படாத எம்.எல்.ஏ., எம்.பி.க்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேறினால் பயன் இருக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஜனநாயகம்
திறமையாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் மசோதா நிறைவேறினால் நிச்சயம் பயன் இருக்கும். ஐந்தாண்டுகள் நாம் வைத்ததுதான் சட்டம் என எண்ணும் அரசியல்வாதிகளின் ஆணவம் மறையும். மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்பு என்பதற்கேற்ப இச்சட்டம் ஆரோக்கியமான ஜனநாயகத்தை மலரச் செய்யும். அவசியம் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

தண்டனை
இம்மசோதா நிறைவேற்றப்பட்டால்தான், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு ஏதாவது உருப்படியாக நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். இது ஒருவகையில் சிறப்பாகப் பணியாற்றும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். வாக்காளர்களைப் பற்றி அக்கறையற்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது தண்டனையாக அமையும்.
தணிகை மணியன், சென்னை.

சாத்தியமற்றது
அரசியலைப் பொருத்தவரை திறமை என்பதற்கு அளவுகோல் கூழைக்கும்பிடு போடுதல், சொன்னதற்கெல்லாம் தலையாட்டுதல் போன்றவைதான். கட்சிக்கு கட்சி அளவு வேண்டுமானால் மாறலாம். எனவே அதற்கு பொதுவான வரைமுறையை கணக்கிட முடியாது. ஆகவே இது நடைமுறையில் சாத்தியமற்றது. அப்படியே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது.
மகிழ்நன், சென்னை.

வாய்ப்பு தேவை
நாம் தேர்தலில் நின்று மக்களால் ஒரு தடவை தேர்வு செய்யப்பட்டுவிட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு எந்த அராஜகத்தையும் செய்யலாம் என்ற மனோ நிலைக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்துவிட்டனர். ஜனநாயகம் என்பது மக்களுக்காக என்ற நிலை மாறிப்போய் தமக்காக என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். ஆகவே இவர்களைத் திரும்ப அழைக்கும் வாய்ப்பு மக்களுக்கு வேண்டும்.
நா. வெங்கடேசன், சென்னை.

நல்லது
ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதியில் என்ன குறை உள்ளது என்பதே தெரியாமல் ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட முடிகிறது. ஒரு எம்.பி. தனது தொகுதியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல் பதவிக்காலம் முழுக்க இருக்க முடிகிறது. இவர்களால் தொகுதி மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. எனவே இந்த மசோதா கொண்டு
வரப்படுவது மிகவும் நல்லது.
சோம. பொன்னுசாமி, சென்னை.

அச்சம்
தங்களின் தொகுதிக்கு எல்லா வசதிகளையும் செய்து தருவார் என்று நம்பி மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்கள் முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர். நாம் நல்ல முறையில் செயல்படாவிட்டால் மக்கள் நமது பதவியை திரும்பப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தால்தான் நல்லபடியாக செயல்படுவார்கள்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

எச்சரிக்கை
இதனால் பயன் இருக்காது. வாக்களித்தவர்கள் ஒன்றுகூடி, அணிதிரண்டு தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை வரவழைத்து, தக்க எச்சரிக்கைகளைத் தர வேண்டும். பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு அஞ்சல் அட்டையில் தங்கள் தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளைப்பற்றி புகார்களை எழுதி அனுப்ப வேண்டும். இதுதான் பயனளிக்கும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

கட்டாயம்
நிச்சயமாக இருக்கும். கடுமையான போட்டிக்கும், பெரும் பொருளாதார இழப்பிற்கும் பிறகு பதவியை கைப்பற்றியிருக்கும் அவர்கள் ஐந்தாண்டுகள் முழுமையாக பதவியை அனுபவிக்கவே விரும்புவர். இந்நிலையில், மசோதா நிறைவேறினால், சிரமப்பட்டு பெற்ற பதவி போய்விடுமே என அஞ்சுவர். அதனால், அவர்கள் திறமையாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

கடிவாளம்
மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட பணத்தை மீட்பதிலும், தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்வதிலுமே கவனம் செலுத்துவர். தறிகெட்டு ஓடும் இத்தகைய குணம் படைத்தோரை கடிவாளமிட்டு அடக்கும் கவசம்தான் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை திரும்பப் பெறும் மசோதா. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜனநாயகம் தழைக்கும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கவனம்
பொதுமக்கள் தேர்தல் நடக்கும்போது வேட்பாளர்களில் யார் திறமையானவர் என்று சிந்தித்து ஓட்டு போடுவதில்லை. தேர்தலில் ஒருவர் ஜெயித்துவிட்டால், அவர் திறமை இல்லாதவரோ, ஊழல்வாதியோ, ஐந்து வருடத்துக்கும் அவர்தான் இருக்க வேண்டும். வாக்களிக்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா? கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளையை மாற்ற முடியுமா?
எஸ். மோகன், கோவில்பட்டி.

அராஜகம்
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தூங்குவதும், சட்டப்பேரவையில் ஒலிபெருக்கியை பிடுங்கி வீசுவதுமான அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும்பணம் சேர்க்கின்றனர். அவர்களை அகற்ற ஒரே வழி இந்த மசோதாவை நிறைவேற்றுவதுதான்.
மதியரசன், கிருஷ்ணாபுரம்.

மாற்றம் வராது
திறமையாக செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏ.க்களைத் திரும்பப் பெற்றாலும் மறுபடியும் அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்கள் சொன்னபடி கேட்கும் ஆட்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்துவார்கள். அவர்கள் மக்கள் பிரச்னையைவிட, தங்கள் சொந்தக் கட்சிப் பிரச்னையையில்தான் கவனம் செலுத்துவர். எனவே இந்த மசோதாவினால் பெரிய மாற்றம் நிச்சயம் ஏற்படப்போவதில்லை.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

நியாயம்
தேர்தலில் வென்று பதவிக்கு வந்த பிறகு, மக்களின் நம்பிக்கை இழப்பதால் அவர்களை திரும்பப் பெறும் உரிமையும், அதிகாரமும் மக்களுக்கு அனுமதிக்கப்படுவது நியாயமே. இதற்கான மசோதா நிறைவேற்றப்படுமானால், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்ச உணர்வால் திறமையுடன் பணியாற்றுவார்கள்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.

அளவுகோல்
இந்த மசோதா நிறைவேற்றப்படுவதால் நிச்சயம் பயன் இருக்காது. ஒருவர் திறமையாக செயல்படவில்லை என்று திரும்ப பெற்றுவிடலாம். ஆனால் அவருக்கு அடுத்ததாக வருபவரும் திறமையாக செயல்படவில்லை என்றால் என்ன செய்வது? மக்கள் கவனமாக தேர்ந்தெடுத்து அவரது பதவிக்காலம் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். மேலும் திறமைக்கு அளவுகோல் எது?
உ. இராசமாணிக்கம், கடலூர்.

புறக்கணிப்பு
பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்தபிறகு தங்களுடைய தொகுதி பக்கம் வருவதே இல்லை. இதனால் தொகுதி மக்கள் தங்கள் குறைகளத் தெரிவிக்க அவர் வசிக்கும் இடம் தேடி செல்லும் நிலை உள்ளது. பதவி கிடைத்ததும் மக்களை புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் திரும்ப பெறுவதே சிறந்தது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

அதிகாரம்
தற்போதைய சூழலில் அரசியல் களம் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. இதனால் நாடு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைக் களைய வேண்டுமானால் திறமையற்ற சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பப் பெறுவதே சரியாக இருக்கும். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அவர்களை திரும்பப் பெறும் அதிகாரமும் இருக்க வேண்டும்.
மணிகண்டன், ஊரப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com