'முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டபேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது தேவையற்றது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரியான கருத்து
இக்கருத்து சரிதான். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச பணிக்காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எவ்வித கால வரையறையும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தங்களது சம்பளம், படிகள் போன்றவற்றை விருப்பம்போல் உயர்த்திக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பது தேவையற்றது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அவசியமில்லை
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைவிட அதிக ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கே ஓய்வூதியம் தரப்படுதில் பல நிபந்தனைகள் விதிக்கப்படும்போது இவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கு சேவைக் காலத்தின்போது சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எனவே பணிக்காலம் முடிந்தபின் ஓய்வூதியம் தேவையற்றது.
துரை. ஏ. இரமணன், துறையூர்.

சரியல்ல
இக்கருத்து சரியல்ல. ஒருவர் நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை உறுப்பினராவதென்பது அவ்வளவு எளிதல்ல. பொது நிகழ்வுகளிலெல்லாம் தன்னை இணைத்துக் கொண்டால்தான் நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை உறுப்பினராக முடியும். இந்த நிலையில் பதவிக்காலம் முடிந்தபின் அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படாவிட்டால் அவர்களின் குடும்பம் வறுமையில் வாடக்கூடிய நிலை ஏற்படும்.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

அநியாயம்
அரசுப் பணியில் குறிப்பிட்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை அரசு தற்போது நிறுத்தியுள்ளது. ஆனால் வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டு பல்வேறு வழிகளில் ஊழல் செய்து பணம் சேர்த்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதென்பது மிகவும் அநியாயம்.
கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.

போதும்
நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ உறுப்பினராக இருந்த காலத்தில் அவர்கள் பெற்ற ஊதியமும், அனுபவித்த சலுகைகளுமே போதுமானது. எந்தத் தொகுதியிலும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தன் அலுவலகத்திற்கு ஒழுங்காக வருவதில்லை; மக்களைச் சந்திப்பதுமில்லை. அடுத்த தேர்தலின்போதுதான் மக்களைச் சந்திக்கின்றார். அவர்களுக்கு ஏன் ஓய்வூதியம்?
அ. கருப்பையா, பொன்னமராவதி.

அவலநிலை
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களை சந்திப்பதே இல்லை என்கிற அவல
நிலைதான் எல்லாத் தொகுதிகளிகளிலும் உள்ளது. மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிகளுக்கு அரசு பணத்திலிருந்து ஓய்வூதியம் வழங்குவது ஏற்புடையது அல்ல. இன்றைய நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்தான்.
ஜீவபாரதி, பரமக்குடி.

சலுகையல்ல
முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஓய்வூதியம் என்பது ஒருவர் தமது பணிக்காலத்தில் ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுவதாகும். இது சலுகையல்ல. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பல்வேறு சிரமங்களுக்கிடையேதான் எவரும் பெற முடியும். எனவே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதே சரி.
பி.எஸ். கணேசன், சென்னை.

மாற்றம்
இக்கருத்து சரிதான். அக்காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எளிமையைக் கடைப்பிடித்தார்கள். இக்காலத்தில் அப்படி எவருமிருப்பதாகத் தெரியவில்லை. பதவிக்கு வரும் முன்பும் பதவிக் காலத்திற்குப் பின்பும் அவர்களின் பொருளாதார நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் வாழ்க்கை ஓய்வூதியத்தை நம்பி இல்லை. எனவே ஓய்வூதியம் அவர்களுக்குத் தேவையில்லை.
கவியழகன், சென்னை.

விற்பனை
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் எண்பது சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அவர்களில் பலர் மற்றவர் பெயரில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். வேறு சிலர் ஆற்று மணலை தோண்டி அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்பவர்கள். எனவே,இவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது தேவையற்றது.
கே. பாலகிருஷ்ணன், மயிலாடுதுறை.

சுகபோக வாழ்வு
இக்கருத்து சரியே. பணம் படைத்தவர்களுக்கே அவர்கள் சார்ந்துள்ள கட்சி, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கிறது. மேலும் அவர்கள் தங்களுடைய பதவி காலத்திலேயே அதிக ஊதியமும், பல சலுகைகளையும் பெறுகின்றனர். பதவி காலம் முடிந்தவுடனும் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். எனவே, அவர்களுக்கு ஓய்வூதியம் தேவையற்ற ஒன்றே.
மு. நடராஜன், திருப்பூர்.

பாதுகாப்பு
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராயிருந்த பலர் தங்களுடைய சொத்துகளையே நாட்டுக்காக இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், ஓய்வூதியம் இல்லையென்றால் முதுமையில் அவர்கள் நிலைமை என்னவாகும்? அவர்களின் வாரிசுகளை யார் பாதுகாப்பது? ஓய்வூதியம் இல்லை என்று கூறுவது 'பதவியில் இருக்கும்போதே சம்பாதித்துக் கொள்' என்று கூறுவதுபோல் உள்ளது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தேவையா?
தற்போது, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று அவையை நடக்கவிடாமல் முடக்குகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவிக்கின்றனர். ஒரு மனிதன் முறையாக வேலை செய்தால் சம்பளம் கிடைக்கும். ஆனால் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வேலையைக் கெடுப்பதற்கே சம்பளமும் சலுகைகளும். இதில் ஓய்வூதியம் தேவையா?
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

எதற்கு?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் மாதாந்திர ஊதியத்தை இஷ்டம்போல பல மடங்கு உயர்த்திக் கொள்வதும், ஓய்வூதியத்திற்கான தீர்மானத்தை அவர்களே பரிந்துரைப்பதும், மக்களில் ஒரு சதவீதத்தினரால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களே. அவர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

ஜனநாயகம்
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் பெறுவதற்கான உரிமை இருக்கும்போது, அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதுதான் நியாயமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகப் பணியாற்றியவர்களுக்கு அவர்கள் வாழ்நால் முழுவதும் ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டுமென்பதே ஜனநாயக நடைமுறை.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.

பற்றாக்குறை
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பணி சம்பளத்திற்காக செய்யக்கூடிய வேலையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள். முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர்கூட ஓய்வூதியம் கிடைத்தால்தான் வாழ முடியும் என்ற நிலையில் இல்லை. நிதி பற்றாக்குறையுடன் இயங்கிவரும் அரசு இந்தச் செலவையும் செய்வது தேவையற்றது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
முரண்பாடு
ஓர் அரசு ஊழியர், முழு ஓய்வூதியம் பெற 33 ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது. இதுவும் 2004-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்பவர்களுக்கு அளிக்கப்படமாட்டாது. ஆனால், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமுறை பணியாற்றிவிட்டால், ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகின்றனர். இது ஒரு முரண்பாடாகும். எனவே, ஓய்வூதியம் அளிப்பது தேவையற்றது.
வை. பாவாடை, புதுச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com