'அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் இருக்கக்கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கல்வியறிவு
அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் இருக்கக் கூடாது என்கிற கருத்து சரியல்ல. நம் நாட்டில் சிந்தித்து தெளிவாக முடிவெடுக்கக்
கூடிய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கிராமங்களில் கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் தொடர்பில்லை என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் முழுமையான கல்வியறிவு பெறும்வரை நிரந்தர சின்னம் இருப்பது நல்லது.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சரியல்ல
ஒரு அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகிய இம்மூன்றில் கட்சியின் சின்னமே மக்களின் நினைவில் முதலில் பதிகிறது. ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, வேட்பாளரைப் பற்றிய அறிமுகமே இல்லாத நிலையில், குறிப்பிட்ட கட்சியின் சின்னமே அவருக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. எனவே அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் தேவையே.
சி. இராசேந்திரன், மணலி.

சமத்துவம்
இக்கருத்து சரியே. எல்லா கட்சியும் சமத்துவம் என்றால் ஒவ்வொரு முறையும் சின்னங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும். ஒரு தேர்தலில் ஒரு சின்னத்தைப் பெற்ற கட்சி நல்ல கொள்கையுடையதாக இருந்திருக்கும். ஆனால், அடுத்த தேர்தலில் அச்சூழல் இல்லாதபோது பழைய சின்னத்தையே வழங்குவது நியாயமல்ல.
என்.எஸ் முத்துகிருஷ்ண ராஜா,
இராஜபாளையம்.

அவசியம்
ஒரு அரசியல் கட்சி, அது தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ அதன் வாக்கு வங்கியின் அடிப்படையில் கட்சி அங்கீகாரம் இருக்கும்வரை நிரந்தரமான சின்னம் அவசியம்தான். மின்னல்போல் தோன்றி மறையும் கட்சிகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் நிரந்தர சின்னம் என்பது தேவையில்லை. ஆனால் வலிமையான கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் அவசியம்தான்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

குழப்பம்
தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை என்றாலும் தாங்கள் சார்ந்த கட்சியின் வேட்பாளரா என்பதைத்தான் வாக்காளர்கள் பார்க்கிறார்கள். வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா என்று சீர்தூக்கி பார்க்கும் மனோபாவம் மக்களிடையே இல்லை. வெற்றிக்கு வித்திடும் சின்னங்களை மாற்றுவது மக்களுக்கு குழப்பத்தை தரும்.
பொன் நடேசன்,
சின்ன அய்யம்பாளையம்.

அடையாளம்
அரசியல் தலைவர்கள் மறைந்தாலும் அவர்கள் அடையாளம் காட்டிய சின்னங்களை மக்கள் மறக்கவில்லை. தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சின்னங்களும் காரணம். நிரந்தர சின்னம் இல்லாமல், ஒவ்வொரு தேர்தலிலும் புதியச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், வேட்பாளர்களின் தகுதி குறித்து, வாக்காளர்கள் யோசிப்பதற்கு வாய்ப்பும் ஏற்படும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பாதிப்பு
அடிக்கடி சின்னத்தை மாற்றினால் மக்களிடையே ஏற்படும் குழப்பம் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களது சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதிலேயே கட்சிகளின் கவனம் செல்லுமே தவிர, மக்களின் வாழ்வாதார பிரச்னைகள், தங்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேச கால அவகாசம் கிடைக்காது. நிரந்தர சின்னம் தேவையே.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தேவையற்றது
கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் கூடாது என்பதே சரி. மக்களிடம் கல்வியறிவு குறைவாக இருந்த காலத்தில் கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக சின்னத்தை அறிமுகப்படுத்தப்படுத்தின. தற்காலம் அப்படியல்ல. கல்வியில் மிகவும் மேம்பட்டு எல்லாரும் எழுதப்படிக்க தெரிந்தவர்களாக இருக்கும் நிலையில் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் என்பது தேவையற்றது.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

இன்றியமையாதது
அரசின் கட்சிகளுக்குச் சின்னம் மிகவும் முக்கியமானது. கட்சிக்கு நாடு முழுவதும் ஒரே சின்னம் இருந்தால் இந்தச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்வது எளிது. மக்களும் கட்சிகளை எல்லாம் சின்னத்தை வைத்தே அடையாளம் காண்கின்றனர். எனவே நமது நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு சின்னம் என்பது இன்றியமையாதது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

அர்த்தமில்லை
அரசியல்வாதிகள் கட்சிகளைத் தொடங்கும் நேரத்தில் உருவாக்கப்பட்ட சின்னங்களில் கொள்கைகள் பொதிந்திருக்கின்றன. அக்கட்சிகள் அனைத்தும் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு வெகுகாலம் ஆகிய பின்னரும் சின்னங்களை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சின்னங்களைப் பார்த்துதான் வாக்காளர்கள் வாக்களிப்பதாக எண்ணுவது தவறு.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தியாகங்கள்
சின்னங்கள் அந்தந்த கட்சிகளின் அடையாளமாகும். கட்சித் தலைவர்கள் மக்களின் மனதில் தங்கள் கட்சியின் சின்னத்தைப் பதிய வைப்பதற்கு பலப்பல தியாகங்களை செய்து இருப்பார்கள். வாக்காளர்களுக்கு, தாங்கள் சார்ந்த கட்சியின் சின்னம் இதுதான் என்பது மீண்டும் மீண்டும் வாக்கு அளிக்கும்போது மனதில் ஆழப் பதிந்துவிடும். சின்னங்களை மாற்றிக் கொண்டே இருப்பது தவறு.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

எத்தனைக் காலம்?
இக்கருத்து சரியே. தகுதியைப் பார்த்துதான் வேட்பாளருக்கோ, கட்சிகளுக்கோ வாக்களிக்கும் நிலை வரவேண்டும். எத்தனை காலம்தான் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பாமரத்தனத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது? வாக்களிப்பதற்காவது அடிப்படை கல்வி தேவை என்ற எண்ணம் மக்களிடையே வர வேண்டும். அரசுகளும் அதற்கேற்ற நல்ல சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்.
கி. சந்தானம், மதுரை.

கடினம்
கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் இருப்பதே நல்லது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் சின்னத்திற்கே வாக்களித்து பழகியவர்கள். அவர்கள் பழக்கத்தை மாற்றுவது கடினம். காங்கிரஸ் கட்சி, பல கட்சிகளாகி, பழைய சின்னங்கள் எல்லாம் மறைந்து புதிய சின்னம் வந்து, அது மக்களுக்குப் பழகிவிட்டது. தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு நிலை வரலாம். அதுவரை இந்நிலையே நீடிக்கலாம்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஞாபகம்
ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடும்போது மக்களை சந்தித்து ஆதரவு கேட்கும்போது மக்கள் மனதில் எளிதில் பதியவைக்கப்படுவது சின்னமே ஆகும். மக்கள் பொதுவாக வேட்பாளர் பெயரையோ கட்சியையோ ஞாபகத்தில் வைத்துக்கொள்வதைவிட அந்த கட்சியின் சின்னத்தை சரியாக ஞாபகத்தில் வைத்திருப்பார். இது மிக எளிமையான வழியும்கூட. எனவே சின்னம் தேவை.
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

ஆபத்து
வாக்காளர்கள் மனதில் இந்தக் கட்சிக்கு இந்தச் சின்னம் என்று ஆழமாகப் பதிந்துவிட்டதால் சின்னங்களை மாற்றுவது தேர்தல் நேரங்களில் குழப்பத்தையே ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, ஒரு கட்சிக்கு விழ வேண்டிய வாக்குகள் மற்றொரு கட்சிக்கு விழுந்துவிடக்கூடிய ஆபத்தும் அதிகம். எனவே, கட்சிளுக்கு நிரந்தர சின்னம் கூடாது என்னும் இக்கருத்து தவறானதே.
கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.

விபரீதம்
இக்கருத்து சரியில்லை. ஒரு கட்சிக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்பட்டு, அது நன்கு அறிமுகமான பிறகு அதை மாற்றினால் குழப்பம் ஏற்படும். மேலும் ஒரு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அந்த சின்னத்தை மாற்றினால் தோல்வியடைவோம் என்று பயப்படவும் கூடும். இதனால் நீதிமன்றம்வரைகூட சிலர் செல்லக்கூடும். எனவே நிரந்தர சின்னம் கூடாது என்கிற கருத்து விபரீதமானது.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com