'திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டியதில்லை என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டியதில்லை என்கிற கருத்து சரியா?'

அவசியம்
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தேசிய கீதத்திற்கும், தேசியக் கொடிக்கும் மரியாதை தந்து எழுந்து நிற்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கடமைகளாக, அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றல், தேசியக் கொடிக்கும், தேசிய கீதத்திற்கும் மரியாதை செலுத்துதல் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன. எனவே தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பதுதான் சரி.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

மரபு மீறல்
அரசு மற்றும் தனியார் விழாக்களில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டுமென்பது சட்டம். அனால், அதனை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை என்பது உண்மையே. அதற்காக ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மீறுவது தவறு. நாட்டு மக்களை நல்வழிப்படுத்த எது தேவையோ அதனைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

இடையூறு
அவசர அவசரமாக திரையரங்கினுள் நுழைந்து இருக்கைகளில் அமர்வதிலேயே மக்கள் ஆர்வம் கொண்டிருப்பர். அந்நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதையும் எழுந்து நிற்பதையும் மனம் ஏற்பதில்லை. ஒருவகையில் அது தங்களின் பேச்சுக்கு இடையூறு என்றுதான் அவர்கள் எண்ணுவர். எனவே திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்பொழுது எழுந்து நிற்க வேண்டியதில்லை.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

என்ன தவறு?
எங்கு பாடினால் என்ன? பாடப்படுவது தேசிய கீதமாயிற்றே! தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காமல், வேறு எதற்கு நாம் எழுந்து நிற்கப் போகின்றோம்? தாய் நாட்டை மதிப்பதும் துதிப்பதும் நம் வாழ்வை உயர்த்துமே தவிர தாழ்த்தாது. எல்லாவற்றையும் நேசிப்பவர்கள் எல்லாவற்றையும் மதிப்பார்கள். எதற்கெல்லாமோ எழுந்து நிற்கின்ற நாம், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதில் என்ன தவறு?
மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.

அவமதிப்பு
தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசத்திற்கு மரியாதை செலுத்துவது மரபு. திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் அது தேசத்தை அவமதிப்பதாகத்தானே ஆகும்? தேசிய கீதம் எங்கெங்கு இசைப்பினும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதே சரி. திரையரங்குகளில் மட்டும் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பது தவறு.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

விநோதம்
வீட்டிற்கு பெரியவர்கள் வரும்போது எழுந்து நின்று வரவேற்காவிட்டால், அது அவர்களை அவமதிப்பது போலாகும். அதுபோலவே தேசிய கீதம் ஒலிக்கும்போது அமர்ந்திருப்பதும் அவமரியாதைக்குரியதாகும். கட்டாயமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் தளர்த்துவதும், தனிமனித விஷயங்களைக் கட்டாயப்படுத்துவதும் விநோதமான நடைமுறையாகவே படுகிறது.
கே. அசோகன், மேட்டுப்பாளையம்.

வற்புறுத்தக் கூடாது
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டியதில்லை என்கிற கருத்து சரியே. ஏனெனில், உட்கார்ந்தே மரியாதையாக வணக்கம் செலுத்துவதும் நடைமுறையில் உள்ளதுதான். பொழுதுபோக்குக் கருதித் திரையரங்கிற்குப் பல தரப்பினர் வருகின்றனர். எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரியான செய்கையை எதிர்பார்க்க முடியாது. தேசபக்தியை வற்புறுத்தக் கூடாது. 
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

வியப்பு
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு அது தற்போது நடைமுறையில் நன்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று கருத்து கூறியிருப்பது வியப்பளிக்கிறது. அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பதே சரி. அரசு அலுவலகங்கள், வங்கிகள் என இதனை விரிவுபடுத்தலாம். 
கு.இரா. அறவாழி அரசன், சீர்காழி.

தயக்கம்
நம் நாட்டு தேசிய கீதம் 52 விநாடி நேரம் மட்டுமே இசைக்கப்படும். குடிமக்கள் தேசத்தின் மீது பற்றுக்கொள்ள தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அப்போது அனைவரும் எழுந்து நிற்பதுதான் சரியாகும். சான்றோரைக் கண்டால் எழுந்து வணங்குவதற்குத் தயங்காத நாம், தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பதற்கு என்ன தயக்கம்? இப்படிப்பட்ட வினா எழுந்திருக்கவே கூடாது.
சு. மாரிமுத்து, தென்னம்புலம்.

தேவையற்றது
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது தேவையற்றது. இரண்டு மணி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வோடு திரையரங்குக்குச் செல்வோரின் எண்ணம் முழுமையாக நிறைவேற வேண்டும். அங்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது அவர்கள் மகிழ்ச்சியைக் குறைக்கவே செய்யும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

கடமை
தேசிய கீதம் ஒலிக்கும்போது ஒவ்வொருவரும் எழுந்து நிற்க வேண்டும். இது நம் தாய் நாட்டின் தேசிய கீதம் என்பதை உணர்வுபூர்வமாக நினைத்தல் வேண்டும். மரியாதை என்பதைச் சட்டத்தின் மூலம் அமல்படுத்த முடியாது. தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் மரியாதை செலுத்துவது என்பது இந்தியர்களாகிய நமது கடமை என்பதை உணர வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சரியல்ல 
பொது நிகழ்ச்சிகளிலும் அரசு விழாக்களிலும் கூட, நிகழ்ச்சி முடியும்வரை இருப்பவர்கள், தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் எழுந்து செல்வதைப் பார்க்கின்றோம். இந்நிலையில் பொழுதுபோக்கு அம்சமான திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் செல்பவர்கள், தேசிய கீதம் முடியும் வரை எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல.
கே. வேலுச்சாமி, தாராபும்.

தர்மம்
இக்கருத்து சரியல்ல. இது நாட்டையும் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட நம் தலைவர்கள் செய்த தியாகத்தையும் அவமதிக்கும் செயலாகும். திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிப்பது அவசியம் என்ற முடிவு எடுக்கப்பட்ட பின், தேசிய கீதம் ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்றி மரியாதை செய்வதுதான் தர்மமாகும். விருப்பமில்லாதவர்கள் திரையரங்கை விட்டு வெளியேறலாம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

நியாயமல்ல
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டு தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவதுதான் மரபு. அது நாட்டிற்கு செய்யும் மரியாதை. இதில் திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டியது இல்லை என்று கூறுவது நியாயமல்ல. அது நம் தேசத்தையும், தேசிய கீதத்தையும் அவமதிப்பது போலாகும்.
இரா. சிவானந்தம், கோவில்பட்டி.

நிர்பந்தம் கூடாது
இக்கருத்து சரியானதல்ல. திரையரங்குக்கு வருவோர் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகவே வருவார்கள். அங்கே அவரவர் விரும்பியபடியே இருக்கத்தான் விரும்புவார்கள். திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது ஒருவர் எழுந்து நின்று அதன் மூலம்தான்தான் தனது தேசப்பற்றை நிருபிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது சரியல்ல. அது சரியான நடைமுறையாக இருக்காது.
மா. பழனி, கூத்தப்பாடி.

முடியாதா?
தேசிய கீதம் திரையரங்குகளில் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பது தவறு. ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கும்போது அதை மதிப்பது தான் சரி. நாட்டைக் காக்க நாட்டின் எல்லையில் ஊன் உறக்கமின்றி உயிரைப் பணயம் வைத்து, நாள் கணக்காக நம் ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கும்போது திரையரங்குகளில் சில நொடிகள் நிற்கக்கூட நம்மால் முடியாதா?
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com