'உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது என்கிற கருத்து சரியா?' 

தேவையற்றது
பல வேளைகளில் மிகவும் இடையூறு தரக்கூடிய ஒரு பொருளாகவும், மன உளைச்சலைத் தூண்டக்கூடிய கண்காட்சிப் பொருளாகவும் மாறிவிடுகிறது. பலர் இதை ஒரு விளம்பரமாக எடுத்துக் கையாள்வது சுயநலத்தைக் காட்டுகிறது. கட்-அவுட், பேனர்களுக்காக பல பொதுஇடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அடாவடியில் இறங்குவது தேவையற்றது. சமூக நலன் கருதி தடை செய்துவிடலாம்.
சி. ஸ்டீபன்ராஜ், பொம்மிடி.

கட்டுப்பாடு அவசியம்
இது சரியல்ல. கட்-அவுட், பேனர் போன்றவை வைப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். நடைமுறை விதிகளை பின்பற்றச் சொல்லலாம். அதை விடுத்து பேனரே வைக்கக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. குறைந்த செலவில் விழா நிகழ்வுகளைத் தெரிவிக்க, விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க கட்-அவுட், பேனர்தான் சிறந்தது. குறைந்த செலவில் விளம்பரம் செய்ய இவை தேவை. ஆகவே, இது குறித்து மேலும் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
என். சண்முகம், திருவண்ணாமலை.

ஏழைக்கு உதவலாம்
சிறிய கிராமங்களில்கூட கடன்வாங்கி கட்-அவுட், பேனர் வைத்து வீண் செலவு செய்கிறார்கள். கட்-அவுட் செலவுகளின் பணத்தில் கஞ்சிக்கில்லாத ஏழைகளுக்கு உதவலாமே. அரசியல்வாதிகளின் ஆளுயர கட்-அவுட்களால், தொண்டர்கள் கவனிக்கப்படுகிறார்கள். ஆனால், கட்-அவுட், பேனர்களை கவனிக்கும் வாகன ஓட்டுநகர்களோ விபத்துக்குள்ளாகிறார்கள். எனவே கட்-அவுட், பேனர் கலாசாரம் களையப்பட வேண்டிய ஒன்றாகும்.
கே. அசோகன், மேட்டுப்பாளையம்.

கூடுதல் சிரமம்
இந்தக் கருத்து சரியல்ல. கட்-அவுட், பேனர் போன்றவை வைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளையே அமல்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதில் உயிருடன் இருப்பவர் படங்கள் கூடாது என்பது கூடுதல் சிரமத்தைத்தான் தரும். பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையினைப் பாதிக்காத வகையில் ஏற்கெனவே உள்ள உத்தரவின்படி, எண்ணிக்கை மற்றும் காலம் இவற்றைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, அமல்படுத்தினாலே போதும்.
வ. நவநீதகிருஷ்ணன், 
நெ.மேட்டுப்பட்டி.

தடைசெய்ய வேண்டும்
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட் தேவையில்லை. நாட்டிற்காக உழைத்த உத்தமர்களுக்கு மட்டுமே போதுமானது. கண்டவர்களுக்கு, கண்ட இடத்தில் வைப்பதால் சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து இடைஞ்சல், விபத்து, கவனத்தை திசை திருப்புதல் முதலியன உண்டாகும். சமூகப் பொறுப்புணர்வு இருந்தால்தான் இதுபோன்ற தீயசக்திகளை ஒடுக்க முடியும். ஆகவே, இது தடை செய்யப்பட வேண்டும்.
பைரவி, புதுச்சேரி.

வைக்கலாம்
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது என்கிற கருத்து சரியில்லை. உயிருடன் இருக்கும் திறமையானவர்கள், தீர்க்கதரிசிகள், சமூகநல ஆர்வலர்களுக்கு கட்-அவுட், பேனர் வைத்துப் பாராட்டினால்தான், அவர்கள் உற்சாகமாக, புதுத் தெம்புடன் பொதுநலவாதியாக செயல்படுவார்கள். இதுதான் மனித இயல்பு. உயிருடன் உள்ள சான்றோர்களை, தலைவர்களை வரவேற்று பேனர் வைக்கலாம். இறந்த பின் வரவேற்று பேனர் வைக்க முடியுமா? நிகழ்காலம் உன்னதமாக அமையாவிட்டால் எதிர்கால சரித்திரம் நன்றாக அமையாது.
என்.எஸ். முத்துகிருஷ்ண ராஜா, 
இராஜபாளையம்.

கூடவே கூடாது
நிச்சயமாக உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைக்கக் கூடாது. ஏனெனில், அந்தந்த பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள், தான் சார்ந்த கட்சியின் முதல்வர், மாவட்டச் செயலாளர் என அவர்களின் கட்-அவுட், பேனர்களைப் பெரிது பெரிதாக வைத்து, அதில் தனது படத்தையும் போட்டு உண்மைத் தொண்டன் எனக் கூறி கட்சித் தலைமையை காக்காய் பிடிக்கிறார்கள். அதனால், ஆதிக்க சக்தியே உருவாகிறது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.

சரியே
பொதுமக்கள் கட்-அவுட், பேனரில் உள்ள தலைவர்களின் பொலிவான தோற்றத்தைப் பார்த்தவுடன் அவரை எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றனர். கட்-அவுட், பேனர் அமைக்கப்படுவதால், அரசு சார்ந்த விழா அல்லது கட்சி சார்ந்த விழா நடக்க உள்ள இடம், காலம் ஆகியவற்றை விளம்பரப்படுத்தவும் முடிகிறது. எனவே, உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர்களை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வைப்பது சரியே.
க. பாலசுப்ரமணியன், 
மயிலாடுதுறை.

மக்களுக்கு எதிரானது
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் போன்றவை வைக்கக் கூடாது என்கிற கருத்து சரிதான். சுய விளம்பரத்துக்காக, தவறான வழியில் ஈட்டிய பொருளை இவ்வாறு செலவழிப்பது அநியாயம். பொதுமக்களை இவை பாதிக்கின்றன. நடைபாதை, பெருஞ்சாலை, தெருக்களை தோண்டி சேதப்படுத்துவது, மக்கள் விரோதச் செயலாகும். மறைந்தவர்களுக்குச் செய்யும் மரியாதையும் சேதாரமின்றிச் செய்ய வேண்டும். தியாகிகள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும்.
ச. கண்ணபிரான், 
திருநெல்வேலி.

தீர்ப்பு சரியா?
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைக்கக் கூடாது என்றால் திருமணம், காதுகுத்தல், பூப்புநீராட்டு, வெளிநாடு சென்று திரும்பி வருபவர், பிறந்த நாள் போன்றவற்றுக்கும் கட்-அவுட், பேனர் கூடாதா? இதை நீதிமன்றம் விளக்குமா? இந்தக் கட்டுப்பாடு அரசியல்வாதிக்கு மட்டுமா? இப்படி ஒரு தீர்ப்பு சரியா? 
கே.எஸ்.எஸ். மணியன், மதுரை.

சரியான சட்ட நடவடிக்கை
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைக்கக் கூடாது என்ற கருத்து சரியே. எல்லாவற்றுக்கும் கட்-அவுட், பேனர் வைத்து சாலை ஓரங்களிலும், சாலைகளிலும் குழி தோண்டியும், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுகின்றனர். கட்-அவுட், பேனர் கலாசாரத்துக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை சரியே.
மா. பழனி, கூத்தப்பாடி.

உந்து சக்தி
இந்தக் கருத்து சரியல்ல. கட்-அவுட், பேனர் போன்றவை ஒருவரது செயல்பாடுகளால் அவருக்குக் கிடைக்கும் மதிப்பு, மரியாதை, புகழ் ஆகியவற்றை நிலைத்தவையாக்கும். ஒருவர் உயிருடன் இருக்கும் போதே மதிப்பு, மரியாதை, புகழ் கிடைத்தால் அவருக்கு மனமகிழ்வும், மனநிறைவும் பெருகும் மேலும், மக்கள் விரும்புகிற நற்செயல்களைப் புரிய ஊக்கம், உத்வேகம் தந்து, ஓர் உந்து சக்தியாக அமையும்.
வி.எஸ். கணேசன், 
சென்னை.

அரசின் உறுதி அவசியம்
கட்-அவுட், பேனர்கள் கூடவே கூடாது. எந்த பேனர்களும் பொது இடத்தில் வைக்கக் கூடாது. அவரவர் சொந்த இடத்தில் எப்படியாவது வைத்துக் கொள்ளட்டும். மீறினால், பெருந்தொகையை அபராதமாகப் போடுவதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனையும் கொடுக்கலாம். இந்த விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஜெ. கஜேந்திரன், புஷ்பகிரி.

விதிமுறை ஏற்படுத்தலாம்
கட்-அவுட், பேனர் போன்ற கலாசாரம் மக்களை சீரழிவிற்குச் செல்ல வழிவகுக்கும். இதுபோன்ற கலாசாரம் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இவ்வளவு அதிகம் கிடையாது. இதனால் மக்கள் பல இடையூறுகளுக்கு ஆட்படுகிறார்கள். உயிருடன் இல்லாதவர்களுக்கும் எந்தவித கட்-அவுட், பேனர்களும் வைக்கக் கூடாது என்று சட்டமே இயற்ற வேண்டும். அப்படி உயிரோடு இல்லாதர்களுக்கு வைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட உயரம், அகலம், எண்ணிக்கை இவற்றில் கட்டுப்பாடுகளை வைத்து அரசு சில விதிமுறைகளை ஏற்படுத்தலாம்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com