'திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்யப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்யப்படுவது சரியா?'

ஊடக நக்கீரன்
திரைப்படங்களில் அரசு திட்டங்களை விமர்சிக்க முழு உரிமை உண்டு. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அனைவருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, ஊடக உரிமை உண்டு. இதனைத் தடுத்தால் அது சர்வாதிகாரமாகும். நம் நாட்டு கலாசாரம், பண்பாடு தேசிய ஒற்றுமை மத நல்லிணக்கம் முதலிய நல்ல சக்திகளைப் பிளவுபடுத்தாததாக விமர்சனம் இருக்க வேண்டும். திரைப்படமும், ஊடக நக்கீரனே.
பைரவி,புதுச்சேரி.

சரியே!
திராவிடக் கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தையும் திரைப்படத்தின் மூலம்தானே மக்களிடம் சொல்லி ஓட்டு வாங்கின. திரைப்படத்தின் மூலம்தான் பல மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம் ஏற்பட்டது. திரைப்பட நடிகர்கள் நாட்டை ஆளும்போது, திரைப்படங்கள் மூலம் அரசின் திட்டங்களை விமர்சனம் செய்வது ஒன்றும் தவறு இல்லை. எல்லாத் துறையினரும் திரைப்படத்தின் மூலம் விமர்சனம் செய்யப்பட்டவர்கள்தானே!
செ. இராசேந்திரன், பாடாலூர்.

முழு உரிமை
அரசின் திட்டங்கள் எல்லாமே மக்களுக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. திட்டங்கள் அக்கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப அறிவிக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது. அரசின் திட்டங்களில் காணும் குறைகளை விமர்சிக்க ஊடகங்களுக்கும், மற்ற கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் முழு உரிமை உண்டு. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தால்தான் அது உண்மையான ஜனநாயகம். ஆகவே, விமர்சிக்கப்படுவது என்பது எந்த வகையிலும் தவறல்ல.
இரா. வெங்கடேசன், கடலூர்.

தவிர்க்கலாம்
திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்யப்படுவது விரும்பத்தக்கதல்ல. அரசுத் திட்டங்களை விமர்சனம் செய்தல், விவாதித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது ஏற்பதற்குக் கருத்துகளை எதிராகக் கூற அரசியல் எதிர்க்கட்சிகள், மேலும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் எனப்பல ஊடகங்களும் உள்ளன. திரைப்பட விமர்சனம், படம் பார்ப்பவர்களை மட்டுமே அடையும். எனவே அரசின் திட்டங்களை திரைப்படங்களில் விமர்சித்தல் உரிய பயன் தராது. அதனைத் தவிர்க்கலாம்.
வி.எஸ். கணேசன், சென்னை.

கடிவாளம்
அரசின் செயல்பாடுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுட்டிக்காட்ட அந்நாளிலிருந்து இந்நாள் வரை, திரைப்படங்கள் இருந்து வருகின்றன. சென்ஸார் போர்டிலிருந்து தப்பித்துத் திரைப்படங்கள் விமர்சனத்துக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி மக்களை வெகுவாய் கவர்ந்து, அரசின் தவறுகள் தெளிவாய்ப் புரிய செய்து, வெற்றியும் பெற்று விடுகின்றன. திரைப்படம் என்ற கடிவாளம் ஒன்று இருந்தால்தான் அரசுகள் தன் தவறுகளை ஓரளவாவது திருத்திக் கொள்ளும்.
வி. சரவணன், சிவகங்கை.

உண்மை நிலை
திரைப்படங்கள் மிகப்பெரும் சக்தி வாய்ந்த சாதனம் என அறிந்தே திராவிடக் கட்சிகள், தங்கள் கொள்கைகளையும் கட்சி சின்னங்களையும், திரைப்படங்கள் மூலம் பரப்பி ஆட்சியைப் பிடித்தனர் அன்றைய முதல்வர் ராஜாஜியின் திட்டங்களை, ஆச்சாரியாரின் விபீஷனவேலை எனத் திரைப்படங்கள் மூலம் விமர்சனம் செய்தனர். இதுதான் உண்மைநிலை. திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்வது சரிதான்.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

நிறையும் குறையும்
எந்த ஓர் அரசுத் திட்டமானாலும் அதில் எண்பது சதவீதம் நிறைகளும், இருபது சதவீத குறைகளும் இருக்கத்தான் செய்யும். இது உலக உண்மை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசின் திட்டங்களை திரைப்படங்களில் கேலியாக விமர்சித்து நடிக்கும், பிரபல முன்னணி நடிகர்களின் செயல்பாடு, கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிப்பதற்கே. இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து அனுமதித்தால், ஊடகங்களின் வாயிலாக அந்த விமர்சனங்கள் உலகெங்கும் பரவி நம் நாட்டின் மதிப்பு மரியாதையைக் குறைக்கும்.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

தவறில்லை
திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்வது என்பது இன்று, நேற்று நடப்பது அல்ல. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். ஆகியோர் காலத்திலிருந்தே உள்ளதுதான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் வசனம் மூலம், காங்கிரஸ் ஆட்சியைத் தாக்கி எழுதி உள்ளனர். 'நம் நாடு' படம் மூலம் ஆட்சியாளர்களின் அடாவடிச் செயல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அரசின் திட்டங்களை விமர்சனம் செய்து திரைப்படம் வருவதில் தவறில்லை.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.

உண்மைத் தன்மை
கருத்து சுதந்திரம் நம் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது. அவ்வாறே விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அரசின் திட்டங்கள் எவ்வாறு சென்றுள்ளது, அவற்றின் தாக்கங்கள் போன்றவை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் அரசின் சட்டத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படலாம். ஆனால், செய்யப்படும் விமர்சனங்கள் உண்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
ரா. நீலமேகம், திண்டுக்கல்.

நியாயமா?
திரைப்படங்களில் அரசின் திட்டங்கள் விமர்சனம் செய்யப்படுவது சரியில்லை. பொழுதுபோக்கு + சமூக நலன் காத்தல் = சினிமா என்ற அடிப்படையில் இயல், இசை, நாடகம், கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம் முதலியவற்றைப் பேணும் வகையில் குடும்ப வாழ்வியல், சமூகமேன்மை குறித்த அம்சங்களை திரைப்படத்தில் முழுக்க முழுக்க இடம்பெறச் செய்ய வேண்டும். அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தல் என்ற போர்வையில், அரசியல் உள்நோக்கத்தோடு நல்ல திட்டங்களையும் விமர்சிப்பது எப்படி நியாயமாகும்?
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

கட்டுப்பாடு ஏன்?
அரசின் திட்டங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. யாரும் விமர்சனம் செய்யலாம். இதில் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? பழைய திரைப்படங்களில் பத்திரிகைத் தொழில், வியாபாரம், கல்வி, பொற்கொல்லர் முதலியவை விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. லஞ்சத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் எடுத்தனர். அதனால் லஞ்சம் வாங்குவது ஒழிந்தா போய்விட்டது?
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

விமர்சனம் அவசியம்
தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட பிறகே திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் தணிக்கைக்குழு செயல்படுகிறது. ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமைகள்தான் சமூக வளர்ச்சியின் அஸ்திவாரம். அரசின் திட்டங்கள் விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும். குறைகளைக் களைய விமர்சனம்தான் வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

சரியல்ல
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சம் கொண்டவையாக மட்டும் இருக்க வேண்டும். அக்காலத் திரைப்படங்களில் அரசியல் நையாண்டி இருந்தது. ஆனால், இன்று அதெல்லாம் தாண்டி, ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசு செயல்படுத்தும் திட்டங்களை விமர்சிப்பதற்கு ஏற்ற திரைப்படங்களைத் தயாரிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இது சரியல்ல.
பி.ரவி, அறச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com