'நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில..

'நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியா?'

சரியல்ல
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. முறையான ஆவணங்களின் அடிப்படையில் தானே அனுமதி வழங்கப்பட்டிருக்கும். நடைமுறையில் உள்ள உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? வேண்டுமானால் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதில் தவறில்லை.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தவறு
பல்கலைக்கழகம் என்ற பெயரைக் கட்டாயப் படுத்தக் கூடாது. பல்கலைக்கழகங்கள் தரச்சான்று, பன்முக ஆளுமைகள், மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையானது, பல சிக்கல்களும், முறைகேடுகளும் கொண்டது. இரண்டையும் ஒன்றாகக் கருதுவது தவறாகும்.
பைரவி, புதுச்சேரி.

செயல்பாடுகளே முக்கியம்
பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறல்ல. அத்தகைய பல்கலைக்கழகங்களின் குறிக்கோள் கல்வி, கலை சிறத்தோங்க வேண்டும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றன. பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே அந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் விளக்கமாகத் தெரியவருகின்றன. பெயர் மாற்றத்தைவிட செயல்பாடுகளே முக்கியத்துவம் பெற வேண்டும்.
வி.எஸ். கணேசன், சென்னை.

நியாயமில்லை
தனியாருக்குச் சொந்தமானது என்பதால் மட்டுமே நல்ல கட்டமைப்புகளோடும், பேராசிரியர்களோடும் ஆய்வுக்கான அடிப்படை வசதிகளான நூலகம், ஆய்வகம், அனைத்தையும் கொண்டு உள்ளுறை வசதிகளோடு வளர்ந்த நாடுகளின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வலைதளத்தோடும், தரமான உயர்கல்வி, ஆய்வுக்கல்வி வழங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை 'பல்கலைக்கழக'மென பயன்படுத்தக் கூடாதென்பதில் நியாயமில்லை.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

தவறான கருத்து
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், துணைவேந்தர்கள் உள்ளனர். அதோடு, பொறியியல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளையும் ஓரிடத்தில் வழங்கும் நிறுவனங்களையே பல்கலைக்கழகங்கள் என்கிறோம். இவற்றைத்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் செய்து வருகின்றன. பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அதன் அடையாளத்தையே முற்றிலுமாக சிதைத்துவிடும். அதனால், இந்தக் கருத்து தவறானது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பயன்படுத்தக்கூடாது
நாட்டில் திறன்சார்ந்த மாணவர்களை அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்விச் சேவை புரிய விரும்பிய செல்வந்தர்கள் திறம்பட பல துறைகளைக் கொண்ட சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியை வழங்கியது. பலர் கல்விச் சேவையை பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியதால், நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆகவே, பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

வரவேற்கக்கூடியது
இந்தக் கருத்து வரவேற்கக்கூடியதாகும். ஏனெனில், பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வணிக நோக்கில் நடத்தப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்களைத் தவிர, பெரும்பான்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சரியான தேர்வு முறைகளைப் பின்பற்றாமல், பண்டமாற்று முறையில் பட்டமளிக்கின்றன. எனவே, மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களோடு அவற்றை இணைக்க வேண்டும். வேண்டுமானால் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம்.
பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.

பாரம்பரியம் மிக்கவை
அரசியல்வாதிகள் பினாமி பெயரில் பல கல்லூரிகள் நடத்துகின்றனர். பின்னாளில் அந்தக் கல்லூரிகள் அவர்களின் செல்வாக்கால் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல பணம் சம்பாதிப்பதற்காகவே தொடங்கப்பட்டவை. பாரம்பரியம் மிக்க பல்கலைக்
கழகங்களுக்கு இணையாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம், 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

முற்றிலும் சரியே
பல்லாண்டுகளாகத் தரமான கல்வியை வழங்கி சமுதாயத்தில் சிறப்பான இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் மட்டும் அப்பெயரை பயன்படுத்த வேண்டும். மேலும், நிகர்நிலை என்ற சொல்லே நிகரான இடம் எனப் பொருள்படுவதால், முழுமையான பல்கலைக்கழகம் ஆகாது. எனவே, பண்டைய பல்கலைக்கழகங்களுடன் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்றாக முடியாது.
கே. சுவாமிநாதன், கடம்பத்தூர்.

எந்தத் தவறும் இல்லை
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் என்னும் பெயரைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை மீறினால், வரையறைக்குட்பட்டு அவை செயல்படுவது வரவேற்கத்தக்கது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் உயர்கல்வி ஓங்கி வளர்ந்திடத் துணைநிற்கும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

நல்ல தீர்ப்பு
இந்தக் கருத்து சரியே. பல்கலைக்கழகங்களுக்குரிய கட்டமைப்புகள், ஆய்வுக் கூடம், நூலகம், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எனப் பலவும் இல்லாமல் பெயரளவில் பல செயல்படுகின்றன. தன்னிச்சையாகச் செயல்படும் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தவே நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. நல்ல தீர்ப்பு.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

சரியான தீர்ப்பு 
பல்கலைக்கழகங்கள் முதலில் அரசிடம் போதிய அனுமதி பெற்று செயல்படும் பட்சத்தில் பல்கலைக்கழகம் என பெயர் வைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் கல்வி வியாபாரமாக மாறிய நிலையில் மக்களிடமிருந்து பணத்தைச் சுருட்டும் தனியார் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் இந்தப் பிரச்னை ஏற்படாது. உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு சரியே.
மு. முருகேசன், திண்டுக்கல்.

அரசே கூறட்டும்
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றால் அதை எப்படி அழைப்பது? மேலும், பள்ளிக்கூடங்களில் பல வகைப்பட்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆனால், எல்லாப் பள்ளிக்கூடங்களையும் பள்ளி என்றுதானே சொல்கிறோம். அதேபோன்று பல்கலைக்கழகம் என்பதை ஏதாவது ஒரு கூடுதல் பெயரைச் சேர்த்து சொல்வதில் தவறில்லையே. என்
றாலும், இந்த விஷயத்தில் அரசாங்கமே ஒரு முடிவைச் சொல்லலாம்.
ஜெ. கஜேந்திரன், மணிமங்கலம்.

குழப்பம் விளைவிக்கும்
இந்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல. கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து அதற்குரிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். கல்வித்துறையில் மாற்றங்கள் தேவைதான். அதற்காகப் பெரிய அளவில் புதிய மாற்றத்தை உடனே செய்வது என்பது மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாற்றம் செய்வதால் மட்டும் கல்வியின் தரம் உயர வாய்ப்பில்லை. ஆகவே, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற சொல்லாட்சி ஏற்புடையதுதான்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

பெயரில் ஒன்றுமில்லை
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்து அழைக்கப்படுவதால் மட்டும் அவை பெரிய பல்கலைக்கழகத்துக்கு இணையாக ஆகிவிடாது. பெயரில் ஒன்றுமில்லை. அதைத் தடுப்பதாலும் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுவதால் பெரிய பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படாது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com