'பட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் பட்டாசு வாங்க ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்று வற்புறுத்துவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் பட்டாசு வாங்க ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்று வற்புறுத்துவது சரியா?'

சமுதாய நன்மை
இந்த உத்தரவு சரியானதுதான். எரிவாயு உருளை, வங்கிக் கணக்கு, கைப்பேசி இணைப்பு என்று நமது அன்றாட செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதார் எண் அல்லது பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பட்டாசு போன்ற பொருள்களை வாங்கும் பொழுது ஆதார் எண்ணும், பான் எண்ணும் தேவை என்று வலியுறுத்துவதில் என்ன தவறு? இதுபோன்ற கட்டுப்பாடுகள் சமுதாயத்திற்கு நன்மையே தரும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

அர்த்தமற்றது
எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டையும் பான் கார்டும் அவசியம் என்று வற்புறுத்துவது தேவையற்றது. அவற்றைக் காட்டி வாங்கப்படும் பட்டாசுகளால் விபத்தே ஏற்படாது என்று உத்தரவாதம் தர முடியுமா? பட்டாசு வாங்குபவரின் முகவரியும் செல்பேசி எண்ணும் இருந்தாலே போதுமே! சொந்த வாகனங்களில், பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்க முடியாது. இந்தக் கட்டுப்பாடு அர்த்தமற்றதாகும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

தவறில்லை
பட்டாசுகளால் பெரும் விபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், அதை விற்பனை செய்தவர் சரியான நபருக்குத்தான் பட்டாசுகளை விற்றார் என்பதனைக் கண்டுபிடிப்பதற்கு ஆதார் எண், பான் கார்டு பெரிதும் உதவும். அதற்காகத்தான் அவை தேவை என்று கூறுகிறார்கள். எனவே, ஆதார் எண், பான் கார்டு வேண்டும் என்பதை வற்புறுத்துவதில் தவறில்லை.
என்.பி.எஸ். மணியன், 
மணவாளநகர்.

பண்டிகை
தீபாவளி நேரத்தின் பரபரப்பான விற்பனையில் இருக்கும்போது ஆதார் எண்ணையும், பான் கார்டையும் ஆராய்ந்து கொண்டு இருக்க முடியாது. இச்செயல் தீபாவளி என்கிற பாரம்பரிய பண்டிகையின் நோக்கத்தையே தகர்ப்பது போன்றது. இந்த உத்தரவு கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதனைப் பிடித்து விடலாம் என்று திட்டமிட்டதுபோல் உள்ளது. இது தேவையே இல்லை.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

என்ன சிரமம்?
ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை குடிமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. மாதச் சம்பளம் வாங்குகின்றவர்கள் அனைவரிடமும் பான் கார்டு உள்ளது. பட்டாசுத் தயாரிப்பாளரிடம் அதைக் காண்பித்து பட்டாசு வாங்குவதில் என்ன சிரமம்? மேலும் இந்திய மக்கள் அனைவரையும் ஆதார் கார்டு மூலம் இணைகின்ற மத்திய அரசின் பணிக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

கொண்டாட்டம்
பண்டிகை என்பது மனமகிழ்ச்சிக்கானது. பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவதுதான் நம் மக்களின் குணமாகும். பட்டாசுகளை தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் வாங்கி வியாபாரம் செய்ய ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்பதை வற்புறுத்தினால் வியாபாரமே வேண்டாமென்று ஒதுங்கும் நபர்களின் எண்ணிக்கைக் கூடிப்போகும். இதனால் பட்டாசுத் தொழில் நசியும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

வன்முறை
பட்டாசுத் தயாரிப்பிற்குத் தேவையான பொருள்களே, வெடிகுண்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சில தீவிரவாத இயக்கங்களும், மதவாத அமைப்புகளும் தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாகவே பட்டாசுகளைக் கொள்முதல் செய்து, அவற்றிலிருக்கும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வன்முறைகளை நிகழ்த்துகின்றன. பட்டாசு வாங்க ஆவணங்கள் தேவை என்று வற்புறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

வியாபாரம்
பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு ஆதார் எண், பான் கார்டு ஆகியவை அவசியம் என்று வற்புறுத்தினால் நியாயம் இருக்கிறது. தனிநபர் பட்டாசு வாங்க அவை அவசியம் என்று வற்புறுத்துவது தேவையற்றது. ஆதார் அட்டையோ, பான் அட்டையோ பொதுமக்கள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்தபாடில்லை. இது பட்டாசு வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் உத்தரவாகும்.
வலங்கொண்டான், சேலம்.

நல்லது
பெரிய நிறுவனங்கள் தீபாவளிக்காகத் தங்கள் ஊழியர்களுக்கு தருவதற்காக ஒரு தனிநபரின் மூலமே அதிக தொகைக்கு பட்டாசுகளை வாங்கும் வழக்கம் இருந்து வருகிறது. விபத்துகள் ஏற்பட்டாமல் இருக்கவும், அப்படியும் மீறி விபத்து நடைபெற்றுவிட்டால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருப்பதற்காகவும் வெடிபொருள்களை வாங்கும்போது, ஆதார் எண், பான் அட்டை கேட்கப்படுகிறது. அவற்றைக் காட்டி வாங்குவதே நல்லது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பொறுப்பு
இப்படி வற்புறுத்துவது சரியல்ல. ஆதார் எண்ணும் பான் கார்டும் எல்லோரிடமும் இருப்பதில்லை. எனவே அவர்களின் விலாசம் மற்றும் செல்போன் எண் பெற்று, அன்றைய தேதியிட்ட ரசீது வழங்குதலே போதுமானது. விபத்துகள் வராமல் இருப்பதற்கு எல்லோருமே பொறுப்பேற்கக் கடமைப்பட்டவர்கள். விபத்து நிகழ்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதே முறை.
வி.எஸ். கணேசன், சென்னை.

கண்டிப்பு
பட்டாசு தயாரிப்பாளர்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்ற விற்பனையாளர்கள், முகவர்கள் உரிய அரசு ஆவணங்களை சப்ளை ஆர்டர்களில் குறிப்பிட்ட பின்புதான் பட்டாசுகள் அனுப்பப் பெறுகின்றன. தனிநபர் பட்டாசுகளை பெறும்போதும், அரசு ஆவணங்களை அவசியம் தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும். கண்டிப்பு இருந்தால்தான் விதிமுறைகள் பின்பற்றப்படும். விபத்துகள் தவிர்க்கப்படும்.
தி. நாகராஜன், சிவகாசி.

அடையாளம்
எதற்காக ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும்? ஆதார் எண் ஒரு இந்தியக் குடிமகனின்அடையாளமே தவிர, அதுவே எல்லாம் அல்ல. பட்டாசு வாங்குவதற்கு ஆதார் எண்ணும் பான் அட்டையும் அவசியம் என்று வலியுறுத்துவது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும். அவசியமானவற்றிற்கு மட்டுமே ஆதார் எண் தேவை என்று கூறுவதுதான் சரி.
பா. தாணப்பன், தச்சநல்லூர்.

பாதுகாப்பு
பட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து பட்டாசு வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியமே. சிறிய அளவில் பட்டாசு வாங்குபவர்களிடம் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. ரூபாய் பத்தாயிரத்துக்கு மேல் வாங்குபவர்களிடம் ஆதாரங்கள் பெறுவது அவசியம். அதிகத் தொகைக்கு எதற்காக வாங்குகிறார்கள் என்கிற ஐயம் எழலாம். தங்கள் பாதுகாப்பில் பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவனமாக இருப்பதில் தவறில்லை.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

பாதிப்பு
மாதச் சம்பளம் வாங்குபவர்களும் நேர்மையாக வணிகம் செய்பவர்களும்தான் இந்தியாவில் மேலும் மேலும் துன்புறுத்தப்படுகிறார்கள். மாதாமாதம் சீட்டு கட்டி கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து பட்டாசு வாங்குபவர்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவார்கள். நடுத்தர குடும்பத்தினர், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களையும்கூட இந்த உத்தரவு நிச்சயம் பாதிக்கும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

வரவேற்பு
இந்த அரசு எல்லா இடத்திலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கிவிட்டது. நாமும் பல இடங்களில் அதனைப் பயன்படுத்துகிறோம். பட்டாசு வாங்க ஆதார் அட்டையைக் காட்டுவதில் மட்டும் என்ன பிரச்னை? அரசாங்கம் சொல்வதை கேட்டு நடப்பதுதானே குடிமக்களின் கடமை. ஆதார் என்ற ஒன்றை கண்டுபிடித்து அனைத்தையும் அதிலே அடக்கிவிட்டனர். மத்திய அரசின் உத்தரவை வரவேற்போம்.
ஜெ. கஜேந்திரன், புஷ்பகிரி.

மறு பரிசீலனை
ஆதார் எண், பான் அட்டை போன்ற தனி
நபர் அடையாளங்களை அரசு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சரி. ஆனால், பட்டாசு வாங்குவதற்கு அவை தேவை என்பது தவறு. அரசின் கட்டுப்பாடுகள் மக்க
ளுக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு மக்களுக்குத் துன்பமே தரும். இக்கட்டுப்பாட்டை அரசு மறுபரி
சீலனை செய்ய வேண்டும். 
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com