"பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இவற்றில் உள்ள "இந்து' மற்றும் "முஸ்லிம்' பெயர்களை நீக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

"பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இவற்றில் உள்ள "இந்து' மற்றும் "முஸ்லிம்' பெயர்களை நீக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

பிரிவினை

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இவற்றில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களை நீக்க வேண்டும் என்கிற கருத்து மிகச் சரியே. மாணவர்களிடையே மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்பட்டுவிடக் கூடாது. கல்வி நிலையத்தில் சாதி, மதம் நுழைவதை எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது. அனைத்து கல்வி நிலையங்களும் அது அமைந்திருக்கும் பகுதியின் பெயராலோ அழைக்கப்பட வேண்டும்.
ஐ. சுரேஷ், தூத்துக்குடி.


அரசியல்

கல்வி நிறுவனங்களின் தரம் எப்படி என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவற்றின் பெயர்களில் உள்ள மத அடையாளங்களைப் பார்க்கக் கூடாது. திடீரென பல்கலைக்கழகப் பெயர்களை மாற்றுதல் என்பது அரசியலாகிவிடும். அப்படி மாற்றினால் அதனை ஏற்காத மாணவர்களால் போராட்டம் ஏற்படக்கூடு; அதனால் கல்வி நிலையத்தில் அமைதி குலையும்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.


பாரம்பரியம்

இக்கருத்து சரியல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இந்திய நாடு ஒரு மதச்சார்பற்ற என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பனாரஸ் பல்கலைக்கழகமும், அலிகார் பல்கலைக்கழகமும் நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி புகட்டி வருகின்றன. அனைத்து சமூக மாணவர்களும் அங்கு கல்வி பயில்கின்றனர். எனவே அப்பல்கலைக்கழகங்களின் பாரம்பரியம் மிக்க பெயர்களே தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கலாம்.
இராம. கோவிந்தன், தென்னிலை.


புரிந்துணர்வு

இதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில், இப்பெயர்களுக்கும் அப்பல்கலைக்கழகங்களின் சேவைக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. இப்பெயர்கள், மாணவர்களின் நல்ல புரிந்துணர்வுக்கு வழிவகுக்கவுமில்லை. அதேசமயம், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு இடப்பட்டுள்ள மதம் அல்லது மதம் சார்ந்த பெயர்களை நீக்க இயலாது.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

கோரிக்கை

நம் நாட்டில் மதம் மற்றும் சாதியின் பெயரில் நிறைய கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ளன. இந்தபெயர் நீக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு மற்றக் கல்லூரிகளிலும் பெயர் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழ வாய்ப்புள்ளது. பனாரஸ் மற்றும் அலிகார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பம் முதலே இந்தப் பெயரில்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, பெயர் மாற்றம் தேவையற்றது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.


ஒற்றுமை

அன்று பல்கலைக்கழங்கள் குறிப்பிட்ட சிலரின் நன்கொடையால் தொடங்கப்பபட்டிருக்கக்கூடும். அதற்காக அப்பல்கலைக்கழகங்கள் இந்து மற்றும் முஸ்லிம் பெயர்கள் இணைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கும். அப்போது ஒற்றுமை இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் சாதியையோ, மதத்தையோ தாங்கி நிறுத்தி கல்வி நிலையங்கள் இருப்பது ஏற்புடையதன்று. இவற்றை நீக்குவது சரியே.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.


விருப்பம்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சர் சையது அகமதுகான் என்ற பேராசிரியரால் தொடங்கப்பட்டது. அவர் விருப்பப்படி முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. அதேபோல பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மதன்மோகன் மாளவியாவால் தொடங்கப்பட்டது. அவர் விருப்பப்படி இந்து பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. அவை நூறு ஆண்டுகளுக்கு மேலாக புகழ் பெற்றிருப்பதால் பெயர் மாற்றம் கூடாது.
எம். சம்பத் குமார், ஈரோடு.


குற்றச்சாட்டு

குறிப்பிட்ட மதத்தின் பெயரால் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற மத மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டும் குறிப்பபிட்ட மதத்தை மேம்படுத்தும் விதத்தில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது எனும் புகாரும் பலகாலமாக உள்ளன. இதுபோன்ற பிற மத வெறுப்பை மேலும் வளரவிடாதிருக்க, மதங்களின் பெயர்களை நீக்குதலே சரி.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.


பெருமை

குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அதிகம் பேர் கல்வி பயில வேண்டும் என்பதற்காகத்தான் அவை தொடங்கப்பட்டன. இன்று எல்லா மதத்தினரும் கற்கும் நிலை வந்துவிட்டாலும் அப்பல்கலைக்கழகங்களைப் பழைய பெயரில் அழைப்பதே பெருமைக்குரியதாகும். நம்முடைய நாட்டின் பெயராகிய "இந்து ராஜ்ஜியம்' என்பதும் சமயச்சார்பற்ற தேசத்திற்குப் பொருத்தமாகத்தான் உள்ளது. மற்ற சமயத்தினரும் மனமுவந்து ஏற்கிறார்களே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.


அடையாளம்

முன்பு மதப்பெயர்களில் கல்வி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அங்கெல்லாம் மாணவர் சேர்கையிலோ, ஆசிரியர் நியமனத்திலோ எந்தவித அடையாளமும் பார்க்கப்படவில்லை. இன்றோ அவை அனைத்தும் பார்க்கப்படுவதால் கல்வி நிலையங்கள் தனித்தனி தீவுகளாகக் காட்சி தருகின்றன. இனியாவது அடையாளமற்ற கல்விக் கூடங்களை உருவாக்குவோம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.


இணக்கம்

இக்கருத்து சரியல்ல. இந்து மற்றும் முஸ்லிம் என்ற பெயர்களைக் கொண்ட பல்கலைக்கழகங்கள், சகோதர உணர்வை போற்றும் வகையில் செயல்படுவதே நலம் பயக்கும். மத உணர்வுகள் மனிதர்களைபுண்படுத்துவதற்காக அமைந்தவை அல்ல. இணக்கமான சூழல் அமைந்து பண்படுத்தும் நிலை வளரவே அவை உதவுகின்றன. மாணவர் சேர்க்கை பல்கலைக்கழகங்களில் தகுதியின் அடிப்படையில் அமைதலே முக்கியம்.
வி.எஸ். கணேசன், சென்னை.


விஷச் செடிகள்

இக்கருத்து முற்றிலும் சரிதான். அறிவுக்கோயில்களில் மெல்ல மெல்ல வளர்ந்துவிட்ட இனம், மதம், சாதி போன்ற விஷச் செடிகள் களையப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இயற்கை சார்ந்த பெயர்களைச் சூட்டலாம். ஏதேனும் ஒரு பொதுப்பெயரைச் சூட்டலாம். ஆனால், மதம் சார்ந்த பெயர்கள் வைப்பது கூடாது. கல்வி நிலையங்கள் அனைத்தும் கலைக்கோயிலாகத் திகழ வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

அவமதிப்பு

பண்டிட் மதன்மோகன் மாளவியா நாடு முழுவதும் பயணம் செய்து நிதி திரட்டி விடாமுயற்சியுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதில் உள்ள "இந்து' சொல்லை நீக்குவது பண்டிட் மாளவியாவை அவமதிப்பதாகும். அதுபோன்றே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள "முஸ்லிம்' சொல்லை நீக்குவது, அப்பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்த இஸ்லாமிய சமூகத்தினரை அவமதிப்பதாகும்.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.


வெளிச்சம்

வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடு இந்தியா. நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் சாதி, மத, சமய வேற்றுமை உணர்வின்றி ஒற்றுமையோடு மாணவர்கள் அனைவரும் கல்வி பயின்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மதத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்ற வகையில் பல்கலைக்கழகங்களின் பெயர்களில் உள்ள "இந்து' மற்றும் "முஸ்லிம்' பெயர்களை நீக்க வேண்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.


கடமை

அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் தேசம். இதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இந்நிலையில், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் பெயர்களில் மதம் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு. இந்த மத அடையாளங்கள் மாணவர்களின் மனதில் பகைமை உணர்வை ஏற்படுத்தும். எனவே, பெயர்களை நீக்குவது சரியே.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.


குழப்பம்

இது வேண்டாத வேலை. காலங்காலமாக இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களுடன் பிரபலமாக இயங்கி வரும், பனாரஸ் பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள "இந்து' மற்றும் "முஸ்லிம்' பெயர்களை மாற்றுவதால் குழப்பமே ஏற்படும். பெயர்களில் இல்லை பேதங்கள். மனிதர்களின் மனங்களில்தான் இருக்கிறது. மனம் விசாலமானால், பேதம் மறைந்துவிடும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com