'வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கருத்து சரியா?'

சங்கடங்கள்
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிற கருத்து சரியே. ஏனெனில் அசல் ஓட்டுநர் உரிமம் வெளியிடங்ளுக்குச் செல்லும்போது தவறிவிட வாய்ப்புண்டு. மீண்டும் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டமானால் பலவித சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
டி.கே. கங்காராம், கோயமுத்தூர்.

வேறுபாடு இல்லை
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. ஓட்டுநர் உரிமத்தைப் பொருத்தவரை ஆள்மாறாட்டத்திற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஓட்டுநர் உரிம அட்டையில் அதற்குரிய எண்ணும், ஓட்டுநரின் புகைப்படமும் இருப்பதால் இவ்வுரிமத்தில் அசல் - நகல் என்ற வேறுபாடு எதுவும் இல்லை.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

பயிற்சி
ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குகின்ற நிலை பல இடங்களில் காண முடிகிறது. இது போன்றவர்களால்தான் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகின்றன. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் முறையாக பயிற்சி பெற்றவர்கள்தான் வாகனங்கள் இயக்க வேண்டும். எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது தவறு.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

அர்த்தமற்றது
அசல் ஓட்டுநர் உரிமம் போலவே போலியான உரிமம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இப்போது வந்துவிட்டதால், அசல் உரிமம் கட்டாயம் என்கிற உத்தரவு அர்த்தமற்றது. அசல் உரிமம் தொலைந்துபோய் விட்டாலோ, காவல்துறையினர் பறித்து வைத்துக்கொண்டு விட்டாலோ அவதிப்படப்போவது சாதாரண மக்களே. மேலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதால் விபத்துகள் ஒரு சதவீதம்கூடக் குறையப்போவதில்லை.
கி. சந்தானம், மதுரை.

மன உளைச்சல்
அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பது சாத்தியமற்றது. நகல் உரிமத்தில் நம்பிக்கை இல்லையென்றால் அசல் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காண்பித்து தன் உரிமம் உண்மையானதுதான் என்பதை நிரூபிக்கலாம். இதுபோன்ற தேவையற்ற உத்தரவுகள் பொதுமக்களின் நேரத்தை விரயமாக்குவதோடு அவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். இதனால் நன்மை எதுவும் கிடைத்துவிடாது.
இராம. கோவிந்தன், தென்னிலை.

நியாயமல்ல
அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடிவதில்லை. நகலை வைத்திருப்போர் தேவைப்படும்போது அதனைக் காண்பிக்கவும், பயமின்றிச் சென்று வரவும் இந்த உத்தரவு தடையாகத்தான் இருக்கும். நகல் உரிமத்தைக் காண்பிக்க வேண்டும் என்கிற நடைமுறையே போதுமானது. சாலைப் பாதுகாப்பு என்கிற பெயரில் தனி மனித உரிமைக்குத் தடை போடுவது நியாயமல்ல.
அ. கருப்பையா, பொன்னமரவதி.

விபத்துகள்
இலகுரக வாகன உரிமம் பெற்றிருக்கும் சிலர் கனரக வாகனங்களை இயக்குகின்றனர். சில நேரங்களில் காவல்துறை அதிகாரிகளும் அப்படிப்பட்ட வாகன ஓட்டிகளை கண்டும் காணாமல் இருக்கின்றனர். ஓட்டுநர்கள் அசல் உரிமத்தை வைத்திருப்பது நாட்டில் சாலை விபத்துகள் குறையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கருத்து சரியல்ல.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

சாத்தியமல்ல
அசல் ஓட்டுநர் உரிமம் பெறுவதே கடினம். அதனைப் பெற்றபின் ஒருவேளை அது தொலைந்துவிட்டால் மீண்டும் விண்ணப்பித்து மற்றொன்றைப் பெறுவது மிக மிகக் கடினம். வாடகைக்கு வாகனத்தை ஓட்டும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னரே அவரை பணியில் அமர்த்தும் நிலை உள்ளதால் அசல் உரிமத்தை வைத்திருப்பது அவர்களுக்குச் சாத்தியமல்ல.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

வீண் அலைச்சல்
அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் வைத்திருந்தால் அது காணாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படிக் காணாமல் போனால் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதற்கு காவல் துறையினரின் சான்றிதழைப் பெற வேண்டும். புதிதாக ஒரு உரிமம் வேண்டுமென விண்ணப்பிக்க வேண்டும். அது கிடைப்பதற்குப் பலநாள் வீணாக அலைய வேண்டியிருக்கும். ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

எளிதல்ல
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென்பது மிகவும் மோசமான உத்தரவு. அது தொலைந்து போகுமானால், அதற்கு மாற்றாக ஓர் உரிமம் பெறுவது என்பது அத்தனை எளிதல்ல. மாற்று உரிமம் பெறுகின்ற வரையில், அவர் வாகனம் ஓட்ட முடியாது. இத்தகைய சூழ்நிலையில் நகல் ஓட்டுநர் உரிமம் மட்டும் பயணங்களின்போது இருந்தாலே போதுமானது.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

சமூக நலன்
வாகன ஓட்டிகளுக்குப் பொறுப்புணர்வு தேவை. அதற்காகவாவது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஒருவர் பயணம் செய்வதற்கு தயாராகும்போது பையில் பணம் எடுத்து வைப்பதுபோல் அசல் உரிமத்தையும் எடுத்து வைப்பதில் எவ்வித சிரமமும் இல்லை. இதனால் வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புண்டு. இது ஒரு சமூக நலன் சார்ந்த உத்தரவு.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

எளிய விதிகள்
வாகன ஓட்டிகள் அவசரமாகக் கிளம்பும்போது தங்களின் நகல் சான்றிதழ்களையே எடுத்துவர மறந்துவிடுகிறார்கள். வண்டிப் பெட்டியில் வைக்கும் பணமே பறிபோகும்போது, சான்றிதழ்களை எங்கே வைப்பது? நகல் உரிமத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டால் அசலைக் கொண்டு வந்து காண்பிக்கச் சொல்லலாம். அசல் உரிமம் தொலைய நேரிடின் மீண்டும் பெறுவதற்கான விதிகள் எளிதாக்கப்பட வேண்டும்.
வளவ. துரையன், கூத்தப்பாக்கம்.

கையூட்டு
அவசரமாக வெளியில் செல்ல நேரும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்துவிடலாம். சில நேரங்களில் பயணத்தின்போது அசல் உரிமம் காணாமல் போகவும் வாய்ப்புண்டு. தவிர இந்த உத்தரவைப் பயன்படுத்தி கையூட்டு பெறுவதும் அதிகமாக நடக்கும். எனவே அசல் ஓட்டுநர் உரிமத்திற்குப் பதில் நகலை வைத்துக்கொள்ள அனுமதித்து இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

பாதுகாப்பு
இம்முறை முற்றிலும் தவறானது ஆகும். வாகன ஓட்டிகள் தங்களுடைய அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகனங்களை ஓட்டும்போது கையில் வைத்திருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். இது அரசு நிர்வாகத்திற்கும் வாகன ஓட்டிகளுக்கும் நன்மை பயக்கும் உத்தரவு ஆகும். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் சுயமரியாதையை இந்த ஆணை காப்பாற்றும். 
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

சிக்கல்கள்
இதனால் ஏற்படக்கூடிய பலவித சிக்கல்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை. அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிடும் பட்சத்தில் அதற்கு பதிலாக புதிய உரிமம் பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளாக நேரிடும். மேலும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகும். ஆகையால் இந்த அரசாணையைத் திரும்ப பெறுவதுதான் நன்மை பயக்கும்.
ப. சுவாமிநாதன், சென்னை.

நகைப்புக்குரியது
மத்திய அரசு அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. ஸ்மார்ட் போனில் அசல் ஆவணங்களை சேமித்து வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் அசல் ஓட்டுநர் உரிமத்தை சேமித்து வைத்து, காவல்துறையினர் கேட்கும்போது காண்பிக்க முடியும். இதல் எந்த சிரமமும் இல்லை. எனவே, இந்த தொழில்நுட்ப யுகத்திலும் அசல் ஓட்டுநர் உரிமம்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நகைப்புக்குரியது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com