'பிற மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பிற மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

கல்வித்தரம்
பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே. கிராமப்புறங்களில் தரமான கல்வியும் நவீன வசதியும் இல்லாத சூழலில் நவோதயா பள்ளிகள் அந்த நிலையை மாற்ற உதவும். மேலும் மாநிலக் கல்வித்தரம் இந்திய அளவிற்கு மாறும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கக்கூடிய நிதியுதவியை நாம் இழப்பது புத்திசாலித்தனமல்ல.
என்.எஸ். முத்துகிருஷ்ண ராஜா, 
இராஜபாளையம்.

இன்னொரு முகம்
நவோதயாப் பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதில் தவறில்லை. ஆனால், அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்கி சொல்லித் தரப்படும் என்பதை முதலில் உறுதிச் செய்ய வேண்டும். தமிழ் படிக்க விரும்புவோர் அதனை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அது இந்தித் திணிப்பின் இன்னொரு முகமே.
கு. தமிழரசன், விருத்தாசலம்.

உரிமை
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டாம். இருமொழிக் கொள்கை இங்கு செயல்பாட்டில் உள்ளது. நவோதயா பள்ளிகள் வந்தால் மும்மொழித் திட்டம் வந்துவிடும். தனிப்பட்ட முறையில் ஒருவர் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், விருப்பப்படாத மொழி திணிக்கப்படும்பொழுது அதனை எதிர்ப்பது நமது உரிமை.
பூ.சி. இளங்கோவன், 
அண்ணாமலைநகர்.

கட்டாயம்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்ட வேண்டியது அவசியம். தமிழக மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. கல்வியை வியாபாரமாக்குவதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் அரசியல்வாதிகள். மும்மொழிக் கொள்கை காலத்தின் கட்டாயம். நவோதயா பள்ளி, கிராமப்புற மாணவர்கள் முன்னுக்கு நல்ல வாய்ப்பு. எனவே நாமும் நவோதயா பள்ளிகள் திறப்பது அவசியம்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

அவசியம்
போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில் பன்மொழிப் புலமையும், பல்கலை அறிவும் ஒவ்வொரு மாணாக்கரும் பெற வேண்டியது அவசியம். மாநிலக் கல்வி, மத்திய கல்வி, உலகளாவிய கல்வி என தரவரிசையாக இருப்பதைவிட நவோதயா பள்ளிகள் மூலம் ஒரே சீரான கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும். ஆனால், அதே நேரத்தில், நவோதயா பள்ளிகள் கிராமப்புற மாணாக்கர் பயிலும் இடமாக இருத்தல் அவசியம். 
உ. இராசமாணிக்கம், கடலூர்.

வெற்றி
கல்வி அறிவு என்பது அகில இந்திய அளவிலும், ஏன் சர்வதேச அளவிலும், ஐ.ஐ.டி., பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும்படி அமைய வேண்டும். அவற்றிற்கென நடத்தப்படும் பொதுதேர்வில் வெற்றி பெற, பள்ளி பருவத்தில் இருந்தே படிப்பின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் என்பதால் நவோதயா 
பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

ஆங்கில மோகம்
இது நமது தாய்மொழியான தமிழைப் புறந்தள்ளும் முயற்சி. தமிழ் மொழியை பத்தாம் வகுப்புக்கு மேல் விருப்பப் பாடமாக வைப்பதால் தமிழன் தமிழைக் கற்ற இயலாத நிலை ஏற்படும். ஏற்கெனவே தமிழர்களின் ஆங்கில மோகத்தால் தமிழ் மொழி சிறுகச் சிறுக அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் நவோதயா பள்ளிகள் அதனை முற்றாக அழித்துவிடும்.
பொன் நடேசன், 
சின்ன அய்யம்பாளையம்.

ஏன்?
தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இந்தி பிரசார சபா மூலம் இந்தி படிப்பவர்களை எவராலும் தடுக்க முடிவதில்லை. அதுபோல, விருப்பமுள்ளவர்கள் நவோதயா பள்ளியில் சேர்வதை ஆதரிப்பது ஏமாளித்தனம் ஆகிவிடாது. மத்திய அரசால் அவற்றுக்குச் செலவிடப்போகும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயினை வீம்புக்காக நாம் ஏன் இழக்க வேண்டும்? 
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

நிலை மாறும்
கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி பணமின்றி எளிதாகக் கிடைப்பது இல்லை. அந்த நிலையை மாற்றிட நவோதயா பள்ளிகள் துணை நிற்கும். ஆனால், தற்பொழுது ஆங்கில வழிக் கல்வியில் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை ஒரு மாணவன் தமிழ் மொழியைக் கட்டாயம் கற்க வேண்டிய நிலை இல்லை. எனவே எந்த ஒரு மாணவனும் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயம் கற்றிட வழிவகை செய்திடல் வேண்டும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

வேண்டாம்
நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி குறைந்த செலவில் மாணவர்களுக்குக் கிடைப்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில் தமிழகத்திலுள்ள பிள்ளைகள் தமிழே பயிலாமல் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கும் பள்ளிகளாக நவோதயா பள்ளிகள் உள் நுழைக்கப்படும் எனில் அதை வரவிடக் கூடாது. தமிழைப் புறந்தள்ள முனையும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

ஐயமில்லை
நவோதயா பள்ளிகளில் குறைந்த கட்டணம், தரமான பாடத்திட்டம், சிறந்த கல்வி, தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றை எளிதில் கற்றுக்கொள்ள வாய்ப்பு, ஏழைகள் கல்வி கற்க ஏற்ற இடம் இவற்றை மறுப்பதற்கில்லை. அரசியல்வாதிகள் இது தேவையில்லை என்று கூறி தங்கள் போலி தமிழ் விசுவாசத்தைக் காட்டிக் கொள்வார்கள். மக்களுக்கு இது அவசியமான கல்வி என்பதில் ஐயமில்லை.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

உறுதி
நவோதயா பள்ளிகளில் உள்ள நடைமுறையை மாற்றி தமிழை கட்டாய மொழியாகவும் இந்தியை விருப்ப மொழியாகவும் கொண்டுவந்தால் நவோதயா பள்ளிகளை ஏற்றுக்கொள்ளலாம். அதுவரையில் இப்பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று ஏற்கெனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவில் இருந்து சற்றும் விலகாமல் உறுதியுடன் அரசு செயல்பட வேண்டும்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

வாக்கு வங்கி
இந்தியாவில் இந்தியை எதிர்த்த மாநிலம் தமிழ்நாடு. இந்தியை அரசியலாக்கி வாக்கு வங்கியை அதிகரித்து கொண்டன சில கட்சிகள். அதனால் பல மாணவர்களின் வாழ்வு வீணானது. எனவே நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியானது. தமிழக மாணவர்கள் இந்தி படித்து நாடு முழுவதும் பணியாற்ற வழிவகை செய்யப்
பட வேண்டும். அதற்கு ஒரே வழி நவோதயா பள்ளிகளே.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

வீண் பிரச்னை
வடமாநிலங்களில் மொழிப் பிரச்னை இல்லாததால் நவோதயா பள்ளிகளால் பிரச்னை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்தே நவோதயா பள்ளிகள் இந்தி மொழியை முதல் மொழியாகக் கொண்டுள்ளதால், ஏற்கப்படவில்லை. இந்தி முதன்மை மொழியாக இருக்கும் வரை நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது வீண் பிரச்னைக்கு வழி வகுக்கும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தவறில்லை
இக்கருத்து சரியே. நவோதயா பள்ளிகளைப் பொருத்தவரை மும்மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மையே. ஆயினும் இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஆபத்துமில்லை. இந்தி மொழியைப் படிப்பதில் தவறில்லை. பிற மாநிலங்களில் வேலை தேடிச் செல்லும் மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். 
இரா. துரைமுருகன், தியாகதுருகம்.

கடமை
பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் முதன்மைப் பாடமாகவும், 11, 12 வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளியின் பாடத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அப்பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளிப்பதே முறை. அப்பள்ளிகளுக்கு இணையான பாடத்திட்டத்தை மாநில அரசுப் பள்ளிகளில் கொண்டுவர வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com