'தமிழக அரசியலில் வெற்றிடம் என மாயதோற்றம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தமிழக அரசியலில் வெற்றிடம் என மாயதோற்றம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது சரியா?

பல்லாண்டு காலமாக...
தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது தற்போது ஏற்பட்டதல்ல. உண்மை, நேர்மையுடன் தூய்மையான அரசியல் மற்றும் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல தகுதி பெற்ற, தரம் மிகுந்த தலைவர்களுக்கான வெற்றிடம் என்பது பல்லாண்டு காலமாகவே இங்கு நிலவி வருகிறது. தற்போது வெற்றிடம் எனக் கூறுவோரும், மாயத்தோற்றம் என்போரும் வீண் விவாதமே புரிகின்றனர்.
என். கனகசபை, சென்னை

ஸ்திரமான ஆட்சி!
தமிழகத்தில் பல நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஸ்திரமான ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையும் சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதோடன்றி, தீட்டிய திட்டங்கள் வழியே ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் தொடர்வதோடன்றி, எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யக் கூடிய நம்பிக்கையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது போன்று, தமிழக அரசியலில் வெற்றிடம் என மாயத் தோற்றம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பது சரிதான்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்

நடிகர்களால் நெருக்கடி!
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. ஆனால் திராவிட கட்சிகளுக்குத் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும், மீட்டுருவாக்கம் செய்யவும் உரிய நேரமிது. நடிகர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவே காட்டிக் கொள்ள விருப்பப்பட்ட திராவிடக் கட்சிகளுக்கு அத்தகைய நடிகர்களாலோலேயே ஏற்பட்ட அரசியல் நெருக்கடியிது. 
த. துரைராஜா, நெய்வாசல்

எப்போதும் இல்லை
இன்றைய தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி பங்களிப்பு இல்லாததை சிலர் வெற்றிடம் எனக் கூறுகின்றனர். வெற்றிடம் என்பது அரசியலில் எப்பொழுதும் இல்லை. பல திறமையான தலைவர்களுக்குப் பிறகு, அடுத்தவர்கள் அவ்விடத்துக்கு வருகின்றனர். விஞ்ஞான அடிப்படையில் வளி மண்டலத்தில் வெற்றிடம் இல்லை. அரசியலிலும் அவ்வாறே.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்

பச்சைக் கம்பளம்!
தமிழக அரசியல் இன்று வெற்றிடமே நிலவுகிறது என்பது உள்ளங்கலை நெல்லிக்கனி போல உள்ளது. இந்த வெற்றிடமே ரஜினியையும் கமலையும் தமிழக அரசியல் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இது மாயத் தோற்றம் அல்ல. நிஜத் தோற்றமே. ஸ்டாலின் கூறியிருப்பது சரியல்ல.
கே. கோவிந்தராஜன், அல்லூர்

புறந்தள்ள முடியாது
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது, ஸ்டெர்லைட் விவகாரம், நியூட்ரினோ போன்ற விவகாரங்களில் திணறிக் கொண்டிருக்கிறது தமிழகம். 
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

அடையாளம் காணப்படவில்லை
திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு காரணமாக முன்னைப்போல சுறுசுறுப்பாக இயங்க இயலவில்லை. இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் மரணம் அஇஅதிமுக கட்சியில் வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது. இரு பெரும் தலைமைகளுக்கு மாற்றாக இன்னமும் மக்களால் ஒரு புதிய தலைமை அடையாளம் காணப்படவில்லை. இதர கட்சிகளின் தலைமையும் சிறப்பானதாக, ஆளுமையுடையதாக, பரவலாக ஏற்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே தலைமைக்கான இடம் நிச்சயம் வெற்றிடமே. மாயத் தோற்றம் அல்ல.
ப. தாணப்பன், தச்சநல்லூர்

மக்கள் உணர்வார்கள்
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தமிழகத் தலைவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. அதுதான் தமிழக அரசியல் வெற்றிடம். அதை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள். இது ஸ்டாலினுக்கும் தெரியும்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை

நலிந்த நிலையில்...
ஐம்பாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அடிப்படைத் தேவையான தண்ணீர், சாலை வசதிகூட சரியாக இல்லை. விவசாயமும் ஆதரிக்கப்படவில்லை. மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். நலிந்த நிலையில் இரு பிரதான திராவிடக் கட்சிகளுமே சமமாகத்தான் இருக்கின்றன. மக்கள் நன்மை மற்றும் நாட்டு வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட, லஞ்ச ஊழலை ஒழிக்கக் கூடிய ஒரு தலைவன் தேவை என்பதை வெற்றிடமாகக் கொள்ளலாம்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

உண்மைதான்!
தமிழக அரசியலில் ஆளுமை மிக்க தலைமை வெற்றிடமாகவே காட்சி அளிப்பது உண்மைதான். எதிர்வரும் தேர்தல்களில் பொதுமக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறுபவர்கள் எவே, அவர்களே ஆளுமை மிக்க தலைவராக உருவெடுக்க முடியும். அவர்களே அடுத்த தலைமுறைக்கு நாட்டையும் வழிநடத்திச் செல்பவர்களாக இருக்க முடியும்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

நிதர்சனம்!
தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது மாயத் தோற்றம் அல்ல - நிதர்சனமான உண்மைதான். ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவிற்குப் பின், என்னதான் அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர்கள் அவரது அரசியலைப் பின்பற்றுவதாகக் கூறினாலும், அதை முழுமையாக ஏற்க முடியாது. தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது உண்மையே.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை

விடையைக் காலம் சொல்லும்!
ஆண்ட, ஆளும் கட்சிகளின் இரண்டு சிறந்த ஆளுமை மிக்கத் தலைவர்களின்மையால் வெற்றிடம் உண்டு. இன்று தமிழக அரசியலில் தேக்க நிலையும் வெற்றிடமும் மிகுதியாக உண்டு. நல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் உருவாகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது உண்மையே. இன்று ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் மாயத்தோற்றம் அல்ல என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இதற்கு சரியான விடையைக் காலம் சொல்லும். காத்திருப்போம்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி

கானல் நீர்!
ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களைப் போல், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இன்றைய தமிழக அரசியல் அரங்கில் எவரும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதைச் சொல்பவர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்பதும் கானல் நீர்தான். இன்று மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவர் என்றஉ கூற எவரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கே. வேலுச்சாமி, தாராபுரம்

தேர்தலுக்குப் பிறகு...
தமிழ்நாட்டின் தலையெழுத்து தேர்தல் வந்த பின்புதான் தெரியும். எந்தக் கட்சிக்கும் அதிகப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. ஒரே கட்சி ஆளும் சூழ்நிலை இல்லை.
கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி

செயலற்று...
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதைவிட, செயலற்றுக் கிடக்கின்றனர் என்பதுதான் சரி. அரசியலில் அனுபவம் மட்டும் இருந்துவிட்டால் போதாது; ஆளுமைத் திறன் வேண்டும். அந்த ஆளுமை யாரிடம் இருக்கிறது என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி!
ஜெ.கஜேந்திரன், மணிமங்கலம்

பொறாமையாளர்கள்!
தமிழக அரசியலில் வெற்றிடம் என மாயத் தோற்றம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் சரியான கருத்தாகும். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில், செயல் தலைவரும் பேரவையில் எதிர்க்கட்சித் தவைருமான ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். பொறாமையாளர்களை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com