'நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த காங்கிரஸுக்கு கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமையில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த காங்கிரஸுக்கு கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமையில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சரியா?

கரும்புள்ளி
ஜனநாயகத்தின் சிறப்பே கருத்து விவாதம்தான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் அரசியல் துறையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பெரும் பிழை - கரும்புள்ளி இருக்கத்தான் செய்கிறது. அது வரலாறு. காங்கிரஸுக்கு நெருக்கடி நிலை-மிசா என்றால், பாஜகவுக்கு பாபர் மசூதி இடிப்பு; மத நல்லிணக்கத்தைக் குலைத்தது. ஆக, நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல.
இ. ராஜு நரசிம்மன், சென்னை

சர்வாதிகார முத்திரை
பழி வாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சிறையில் அடைத்துத் துன்புறுத்தியது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை அடியோடு பறித்தது இவை இரண்டும் நெருக்கடி நிலை அறிவிப்பின் படுதோல்வி மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சிக்கே சர்வாதிகார முத்திரையைக் குத்திவிட்டது. அரசியல் கட்சிகள் எப்போதும் மாற்றுக் கட்சியினர் செய்த தவறைச் சுட்டிக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். இதைத் தவிர்க்க இயலாது. இந்த மனோபாவம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

அனைவருக்கும் உண்டு உரிமை
நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சரியல்ல. இந்தியா ஜனநாயக நாடு. எழுத்துரிமை-பேச்சுரிமை அனைவருக்கும் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தமது கருத்தைப் பதிவு செய்யலாம். காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு மாற்றாக உள்ள கட்சி. ஆளுவோர் குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் உரிமையும் காங்கிரஸுக்கு உண்டு.
என். சண்முகம், திருவண்ணாமலை

உரிமையுள்ளது
நெருக்கடி நிலை பிரகடனம் தவறு என்பதால்தான் அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தவறுகளைச் சுட்டிக் காட்ட அல்லது தங்கள் கருத்துகளைச் சொல்ல எல்லோருக்கும் உரிமையுள்ளது.
இரா. தீத்தாரப்பன், தென்காசி

இடித்துரைத்தல் தேவை
காலச்சூழலுக்கேற்ப அரசியலில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம்தானெனினும், நெருக்கடி நிலை போன்ற தவறான நடவடிக்கைகளை நியாயப்படுத்திவிட முடியாது. ஜனநாயக நெறிமுறைகளை ஸ்தம்பிக்கச் செய்த அன்றைய பிரதமரின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாததே. எனினும் எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு முழு உரிமையுண்டு. எதிர்க்கட்சியின் இடித்துரைத்தல் ஜனநாயகம் மேம்பட இன்றியமையாததாகும்.
என். கனகசபை, சென்னை

விதிவிலக்கல்ல
கருத்து சுதந்திரத்தைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கு உரிமையில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது தவறு. நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்த காங்கிரஸ் அதற்குரிய தண்டனையை அனுபவித்துவிட்டது. ஒருமுறை அவர்கள் செய்த தவறுக்காகப் பல ஆண்டுகள் கழித்து தங்கள் கருத்தைக் கூற உரிமையில்லை என்பதை எவ்வாறு ஏற்க இயலும். எந்த இயக்கமும், கட்சியும் தவறே செய்யாமல் இல்லை. பாஜகவும் விதிவிலக்கல்ல.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்

அதையே காரணம் காட்டி...
நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து, தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், நியாயமான, நேர்மையான தலைவர்களைச் சிறையில் அடைத்து, கருத்து சுதந்திரம் பறி போவதற்குக் காரணமாக இருந்தது காங்கிரஸ் என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்காக அதையே காரணம் காட்டி, அரசியல் செய்வது நல்லதல்ல!
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

தெளிவான பதில் வேண்டும்
நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்கான தண்டனையை காங்கிரஸும் இந்திரா காந்தியும் அனுபவித்த பிறகு, அதைப் பற்றி தற்போது நிர்மலா சீதாராமன் பேசுவது காலம் கடந்ததாகும். தற்போதைய கருத்து சுதந்திரம் பற்றிய விமர்சனத்திற்கு நேரடியாகத் தன் விளக்கத்தைக் கூறுவதுதான் சரியானதாகும். கருத்து சுதந்திரம் இல்லை என்று பொதுவாக காங்கிரஸ் கூறுவது ஏற்புடையதாகாது. எந்தெந்த வகையில் எனத் தெளிவான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைக்க வேண்டும். தெளிவான பதிலை பாஜகவும் தர வேண்டும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்

கட்டற்ற சுதந்திரம்
அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாபெரும் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அவற்றையெல்லாம் கண்ட அரசு ஊழியர்கள் அச்சத்தினால் அடங்கி ஒதுங்கிப் பணியாற்றினர். உழைப்பாளர் உரிமை என்று ஓயாமல் பேசும் இயக்கங்கள் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் போன்றவற்றில் யாரையும் ஈடுபடுத்த முடியவில்லை. இந்திரா காந்திக்கும் அரசுக்கும் எதிரான செய்திகள் வெளிவராமல் பத்திரிகைகள் மிரட்டப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் மீதே கைவைத்தது அன்றைய அரசு. இதெல்லாம் இப்போது நடக்கின்றனவா? சமூக வலைதளங்கள் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களால், முன்னெப்போதையும்விட அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள் சுதந்திரமாக, கட்டற்று வெளிவருவதே இன்றைய நிலை.
அ. கிருஷ்ணன், கும்பகோணம்

சிரமம் ஆனாலும்...
நாட்டில் நெருக்கடி நிலை அறிவித்து செயல்படுத்தியபோது, பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், நாளிதழ்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டும் சிரமத்துக்கு ஆளானதைக் காண முடிந்தது. அதே வேளையில் அரசுப் பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெற்றது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்

நியாயம் இல்லை
அரசு அலுவலகங்கள் காலத்தே தொடங்கி செயல்பட ஆரம்பித்ததும், அரசியல்வாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டதும், பத்திரிகை தர்மங்கள் காப்பாற்றப்பட்டதும் அதிசயமான நிகழ்வுகள். நெருக்கடி நிலை அறிவித்த காங்கிரஸுக்கு கருத்து சுதந்திரம் பற்றிப் பேச அருகதையில்லை என தடாலடியாக கூறுவதில் நியாயம் இல்லை.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்

பொறுப்பற்ற பேச்சு
கருத்து சுதந்திரத்தைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கு உரிமையில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுவது பொறுப்பான பேச்சன்று. ஆளுங்கட்சி தவறு செய்யும்போது சுட்டிக் காட்டுவதுதானே எதிர்க்கட்சிகளின் கடமை? 
அ. கருப்பையா, பொன்னமராவதி

நகைமுரண்
நெருக்கடி நிலை காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. பேச்சுரிமை முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. இந்திராவே இந்தியா, இந்தியாதான் இந்திரா என்ற சர்வாதிகார முழக்கம் ஒலித்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஜனநாயக தேவதை காணாமல் போய், சர்வாதிகார ஆட்சியில் அரங்கேறிய அவலங்கள் எத்தனையோ. இத்தனைக்கும் காரணமான காங்கிரஸ் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது நகைமுரணாகும்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

அமைச்சர் கருத்து சரியல்ல
இந்திரா காந்தி அம்மையார் நெருக்கடி நிலையை அறிவித்து ஜனநாயக மரபுகளையே முடக்கினார் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். அதற்காகத்தான் காங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்தது. ஆனால் இந்தக் காரணத்தை முன்னிறுத்தி, காங்கிரஸார் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசவே கூடாது என்பது சரியல்ல.
கே. வேலுச்சாமி, தாராபுரம்

அமைச்சர் கருத்து சரி
அமைச்சர் கூறியது மிக மிக சரி. இந்திரா காந்தி ஒரு ஜனநாயக சர்வாதிகாரி. தான் செய்த தவறுகளை மறைக்க, தவறுகளே செய்யாத ஒப்பற்ற தலைவர்களை சிறையில் அடைத்தார். இன்று அரசியல் ஜனநாயகம் என்றால் என்னவென்றே அறியாத காங்கிரஸ் தலைமை ஜனநாயகம் பற்றிப் பேசுகிறது.
முத்துக்கருப்பன், காரைக்குடி

நல்லரசுக்கு அழகு
மற்றவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டிக் கொண்டு தானும் அத்தவறைச் செய்வதென்பது ஏற்புடையதல்ல. கருத்துச் சுதந்திரத்துக்கு இந்த அரசின் மூலம் ஆபத்து வந்துள்ளது என்பது பரவலான குற்றச்சாட்டு. அரசு இதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கருத்தை அரசு செவிமடுத்துக் கேட்க வேண்டும். உண்மை இருக்குமாயின் திருத்திக் கொள்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. 
த. யாபேத்தாசன், பேய்க்குளம்

எதிர்க்கட்சிகள் கடமை
நிர்மலா சீதாராமன் கருத்து சரியல்ல. நெருக்கடி நிலை என்னும் எமர்ஜன்ஸி கால கொடுமைகளுக்குப் பல முறை மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்ட பிறகே இந்திரா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலத்துக்கு ஏற்ப, நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப, சமூக சூழல்களுக்கு ஏற்ப பொதுமக்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளை முன்வைப்பதும் அரசியல் கட்சிகளின் அடிப்படை செயல்பாடுகள். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. விமர்சனத்தில் உள்நோக்கம் இருப்பின் அதை அரசு வெளிப்படுத்த வேண்டும். விமர்சனங்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். 
வே. கல்பனா, கோவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com