'காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமானால் அரசியலை விலக்கிவிட்டு அணுக வேண்டும் என்ற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமானால் அரசியலை விலக்கிவிட்டு அணுக வேண்டும் என்ற கருத்து சரியா?

நல்ல முடிவு கிடைக்க...
காவிரி நீர் தொடர்பாக நல்ல தீர்வு கிடைக்க மனிதநேயத்துடன் அறவழியில் செயலாற்றும் நல்ல உள்ளம் கொண்ட இரு மாநில ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீர்வளத்துறை , பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் அனுபவம் மிக்க விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு அமைத்து செயல்பட வேண்டும். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. காவிரித் தாயை வழிபடுவோமாக!
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை

அரசியல் நுழைந்தால்...
காவிரி நீர் விவகாரத்தில்அரசியல் தலையீடு இன்றி தீர்வு காண முற்பட வேண்டும் என்ற கருத்து சரிதான். ஆனால் நடைமுறை சாத்தியமற்றது. ஆலை வாயில் நுழைந்த கரும்பு முழுதாக வெளிவராது. அதுபோல் காவிரி பிரச்னையில் ருசி கண்டு வாக்கு வங்கியை வளர்த்த அரசியல்வாதிகள் ஒதுங்கி நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்காத காரியம். இமயம் முதல் குமரி வரை எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்துவிட்டது. அரசியல் நுழைந்தால் என்றுமே நல்லது நடக்காது என்பதுதான் உண்மை.
நா. முத்துக்கருப்பன், காரைக்குடி

பரஸ்பர குற்றச்சாட்டு
காவிரி நீர் பிரச்னை என்பது அனைவருக்குமே வாழ்வாதாரப் பிரச்னை. அரசியல் ரீதியாகப் பேசும்போது, ஆளும் அரசு, முந்தைய அரசு தவறிழைத்துவிட்டது என்றும், எதிர்க்கட்சியினர் ஆளும் அரசு தவறிழைத்துவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி, தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அக்கறை செலுத்துவார்களே அல்லாமல், தீர்வு காண வழி செய்ய மாட்டார்கள்.
மா. பெ. குருசாமி, ஸ்ரீவில்லிபுதூர்

விட்டுக் கொடுத்து...
தமிழக, கர்நாடக விவசாயிகள் மற்றும் நடுநிலையாளர்கள், நீர்வளம் தொடர்பான பொறியாளர்கள் அனைவரும் அமர்ந்து சுமுகமாகப் பேசி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடத்தும் பேச்சுவார்த்தையிலேயே காவிரி பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். அதற்கு உதவியாக சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி லோண்மை வாரியம் அமைக்கும் முயற்சி ஆகியவை இருக்கலாம்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

அரசியல் கலவாது...
காவிரி விவகாரத்தில் அரசியல் கலவாது, மக்கள் துணையுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
த. ராஜராஜன், சென்னை

நீதிமன்றமே நம்பிக்கை!
காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமென்றால் அரசியலை விலக்கிவிட்டு அணுக வேண்டும் என்ற கருத்து சரியல்ல. அரசியல் அதிகாரம் என்ற போதை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அனைத்துப் பிரச்னைகளும் ஏற்படும். மனித நேயம், விட்டுக்கொடுக்கும் எண்ணம், இருப்பதைப் பகிர்வது எல்லாம் குறைந்து வரும் நிலையில், இக்கருத்து எடுபடாது. தற்பொழுது நீதிமன்றம் மட்டுமே ஒரே நம்பிக்கை.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்

மனசாட்சி இல்லை!
காவிரி விவகாரத்தில் தீர்வு காண மனசாட்சிக்குட்பட்டு யாரும் கருத்து தெரிவிப்பதில்லை. மாறாக, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள, எதைச் சொன்னால் மக்கள் மகிழ்வார்களோ, அதையே சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்நிலையில், குறுகிய கால லாபம், சுயலாபம் கருதாமல், கட்சி அரசியலைக் கடந்து, தமிழகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு பிரச்னையை அணுகினால் தீர்வு நிச்சயம்!
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி

விவசாயிகள் பேச வேண்டும்
காவிரி விவகாரத்தில் அரசியலை ஒதுக்கினால்தான் தீர்வு கிடைக்கும். அரசியல் கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளில் சிக்காமல், இரு மாநில விவசாயிகளின் பிரதிநிதிகள் அமர்ந்து பேசுவதன் மூலம் தீர்வு காண்பது எளிது. இந்திய- இலங்கை மீனவர்கள் விஷயத்திலும் இதுவே எளிய தீர்வாக அமையும். அதுபோன்ற மீனவர் பேச்சுவார்த்தை முயற்சியும் முன்பு நடைபெற்றது. காவிரியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி நடப்பதால், தீர்வு என்பது எட்ட இயலாத ஒன்றாகிறது.
ஐ. சுரேஷ், பழைய காயல்

நல்ல அரசியல் தேவை!
இங்கு அரசியல் சரியாக இல்லாது போனதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. உண்மை, உழைப்பு, தியாகம் என்ற மூன்றையும் உயிர் மூச்சாய் கொண்டது அன்றைய அரசியல். பணம், பதவி, அதிகாரம் என்ற மூன்றையும் கண்ணாய்ப் போற்றுவது இன்றைய அரசியல். காவேரி விவகாரத்தில் வெற்றி பெற நல்ல அரசியல் வேண்டும். காமராசரின் உண்மை அரசியலும், காந்திஜியின் அகிம்சை அரசியலும் இங்கு கைகோத்து நடந்தால், காவிரி தானாகவே ஓடிவரும். காவிரி போல நல்ல அரசியலும் இங்கு கானல் நீராகவே உள்ளது.
த. வேலவன், திருக்கோவலூர்

அரசியல் மூலமே தீர்வு
காவிரி விவகாரத்தில் தீர்வு காண அரசியல் வழி அணுகுமுறைகளே வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல் ரீதியான போராட்டங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்து, அவர்களையும் அப்போராட்டங்களில் பங்கு பெறச் செய்யும். பொதுமக்களும் விவசாயிகளும் அதில் இணையும்போது மாற்றம் வரும். 
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

சுயநலவாதிகளால் பிரச்னை
நைல் நதி பல நாடுகள் வழி பிரச்னையின்றிப் பாய்கிறது என்பர். பிரச்னை உடைய பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் பாயும் நதி உண்டு. ஒரே நாடு எனப் பீற்றிக் கொள்ளும் நம் நாட்டில் காவிரிப் பிரச்னை தீரவில்லை. இங்கு எல்லா நிலைகளிலும் நேர்மையானவர்கள் குறைவு. சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள் அதிகம். பிரச்னையைத் தீர்க்க விரும்பாத கூட்டமே மிகுதி.
சித்தாய்மூர் இரா. இராசேந்திரன், 
மேல ஓடுதுறை

சமரசம் காண்போம்
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்வு காண அரசியலை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தை இரு மாநிலங்களிலும் பிரபலமான ஒரு நடிகரும் தெரிவித்திருந்தார். பொதுநலக் கருத்து என்ற பெயரில் நடிகர்கள் முன்யோசனையின்றி முக்கியப் பிரச்னைகளில் முந்திக் கொண்டு கருத்து சொல்வதால்தான் உணர்வுகள் தூண்டிவிடப்படுகின்றன. அவர்கள் தங்கள் தொழிலில் மட்டும் ஈடுபட வேண்டும். இரு மாநில விவசாயிகள், நிபுணர்கள் பேச்சு நடத்தி சமரசம் காண முற்பட வேண்டும்.
கே.சித்ரா, பெங்களூரு

தவிர்க்க முடியாது
காலம் கடந்த கருத்து. அரசியலை விலக்கி அதிகாரிகள் கூடி முடிவு எடுக்க முடியுமா? அங்கேயும் தலையீட்டைத் தவிர்க்க முடியாது. பொறியாளர்கள், விவசாயிகள், நிபுணர்கள் கூடி முடிவெடுக்க இயலுமா? இயலாது. இங்கே அவர்கள் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டுவிடும்.
அ. சம்பத், திருவரங்கம்

தேச நலன் கருதி...
காவிரித் தாய்தான் கர்நாடக மாநில அரசியலின் மையப் பொருள். அரசியலை விலக்கி வைத்துவிட்டு இந்த விவகாரத்தை அணுக பிரதமர் மோடி தயாராக இல்லை என்பது அவரது மெளனத்தின் பொருளாகும். அரசியலை விலக்கி வைத்துவிட்டு காவிரிப் பிரச்னையை அணுக வேண்டும் என்ற கருத்து மிகச் சரியான, தேசிய நலனில் அக்கறையுள்ள கருத்தாகும்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்

அரசியலுக்கு அப்பால்...
காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமானால் தமிழக ஆட்சியாளர்களும் பிற அரசியல் கட்சியினரும் ஈகோ பார்க்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போதுதான், உண்மையான தீர்வு ஏற்படும்.
பி. துரை, கல்புதூர்

குழம்பிய குட்டை!
ஆட்சி, பதவி என்று வாக்கு அரசியலையே பிரதானமாகக் கொண்ட அரசியல்வாதிகள் காவிரி பிரச்னையை குழுப்பி, குழம்பிய குட்டையில் தூண்டில் போடுகிறார்கள். இரு மாநில விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் எம்.எஸ். ஸ்வாமிநாதன் போன்ற வேளாண் விஞ்ஞானிகளையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு நாட்டின் வேளாண் உற்பத்தியை நடுநிலையோடு கருத்தில் கொண்டு காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com