காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' 

வரவேற்கத்தக்கது
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. காவல்துறையினர் எல்லா நாட்களிலும் பணிபுரிவதால் பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தாருடன் இருக்க முடிவதில்லை. காவல்துறையினர் மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் நம்மோடு வாழ்பவர்கள். அரசாங்கமும், மேலதிகாரிகளும் கலந்து பேசி காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விடலாம்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

சுழற்சி முறை
இந்தக் கருத்து சரியே! ஓய்வில்லாமல் உழைக்கும் காவலர்களுக்கு வார விடுமுறை அவசியமே! சுழற்சி முறையில் காவலர்களுக்கு வார விடுமுறை அளித்தால் காவல் பணி பாதிக்கப்படாது. அதே சமயம், காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மேலும், பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்.
எஸ்.வி.ராஜசேகர், சென்னை.

அவசியம்
காவல்துறை பணி என்பது மக்களிடம் நெருங்கிப் பழகும் பொறுப்பான பணியாகும். இதுபோன்று மக்கள் சேவை புரிபவர்களுக்கு வார விடுமுறை அளிப்பதுதான் நியாயமாகும். காவலர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்ப பணிகளை கவனிக்க ஓய்வு அவசியம் தேவை. விடுமுறையின்றி தொடர்ந்து பணி செய்வதால் மனதில் சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, காவலரின் தனிப்பட்ட நலனையும், குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, வார விடுமுறை அளிப்பது அவசியமாகும்.
தணிகை மணியன், சென்னை.

தவறானது
காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கருத்து முற்றிலும் தவறானதே. ராணுவத்தினருக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், எல்லையில் அந்நிய நாட்டினர் படையெடுக்க ஆரம்பித்து விடுவர். அதேபோல்தான் காவல்துறையும். தற்போது பல மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்நிலையில், வார விடுமுறை அளிக்கப்பட்டால், எப்படி சமாளிக்க முடியும்? காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை அரசு நிரப்பினால், காவலர்களின் மனச்சுமையைக் குறைக்க முடியும்.
என்.காளிதாஸ், சிதம்பரம்.

உரிமை உண்டு
காவலர்களும் மனிதர்களே. அரசுப் பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. வாரம் முழுவதும் பணிபுரிவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. குடும்பத்தை கவனிக்க நேரமில்லை. வார விடுமுறை வழங்கினால் ஒரு நாள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, கடமையை நன்கு செய்ய இயலும். அவசரம் ஏற்பட்டால் பணிபுரிய வரவேண்டுமென்ற நிபந்தனையுடன் வார விடுமுறை வழங்கலாம்.
டி.ஆர்.ராஜேந்திரன், திருநாகேஸ்வரம்.

குடும்பக் கடமைகள்
ஒவ்வொரு நாளும் திருடர்கள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் மத்தியில் பணியாற்றுபவர்கள் காவலர்கள். அவர்களுக்கும் குடும்பக் கடமை உண்டு. என்னதான் அத்தியாவசியப் பணியாக இருப்பினும், குடும்ப சுக துக்கங்களுக்குக் கூட விடுப்பு மறுக்கப்படுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை என்று இருந்தது, 8 மணி நேரமாகக் குறைக்கப்படவில்லையா? காவலர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற வார விடுமுறை அவசியம் தேவை.
கி.பாஷ்யம், சலுப்பை.

சாத்தியமற்றது
காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், சட்டம்-ஒழுங்கினை சீர்படுத்தும் முக்கியப் பணியினை மேற்கொண்டுள்ளனர். முக்கிய தலைவர்களின் வருகையின்போது போக்குவரத்தை மாற்றியமைத்து, அசம்பாவிதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவர்களது கடமையாகிறது. இத்தகைய பணியினை மேற்கொண்டுள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது சாத்தியமற்றதாகும்.
ச.கிருஷ்ணசாமி, மதுரை.

மக்களின் நண்பன்
இக்கருத்து சரியானதே. ஏனெனில், காவலர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பில் இருந்தால்தான், அவர்களின் நலத்தீங்குகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும். அக்கம்பக்கத்தில் நடப்பனவற்றை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை தம் பணிக்கும் பொருத்திப் பார்க்க வாய்ப்பாக இருக்கும். காவலர்கள் உண்மையில் மக்களின் நண்பனாக இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு வார விடுமுறை அவசியம்.
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

கடினமான பணி
காவலர் வேலையென்பது மற்ற வேலைகளைப் போன்றதல்ல. சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்களின் உடைமை, உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய கடினமான பணியாகும். எந்த நேரத்தில் என்ன கலவரம் அல்லது சட்ட ஒழுங்கு மீறல் பிரச்னை வரும் என்று சொல்ல முடியாத நிலையில் நாடு உள்ளது. எனவே, 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய துறை காவல்துறை. இதில் வார விடுமுறை என்பது நடைமுறை சாத்தியமற்றது.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சீரான மனநிலை
கருத்து சரியே. காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அன்று அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலை சீராக அமையும். காவலர்கள், விடுப்பு எடுக்காமல், அதற்கு ஊதியம் வாங்கலாம் என்று எண்ணக் கூடாது. கட்டாயமாக ஒருநாள் விடுப்பு எடுத்தால்தான் அவர்கள் அமைதியாகவும், ஆர்வமாகவும் தங்கள் பணிகளை கவனிப்பார்கள்.
என்.எஸ்.முத்துகிருஷ்ண ராஜா, 
ராஜபாளையம்.

பணிச்சுமை
காவலர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் ஓய்வும், உறக்கமும் அத்தியாவசியமானது. அல்லும் பகலும் அயராது உழைக்கும் காவலர்களுக்கு மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களை விட பணிச்சுமையும், மன உளைச்சலும் அதிகம். ஓய்வின்றி பணி செய்வதால் காவலர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலே பல விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. எனவே, காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது சரியே.
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

என்ன உத்தரவாதம்?
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் கடும் குளிரில் இரவும் பகலும் பணியாற்றுவதனை நாம் அறிவோம். காவலர்களின் விடுமுறை நாட்களில் சமூக விரோத, சட்ட விரோத செயல்கள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவலர்கள் தங்களது தனிப்பட்ட சுகங்களைத் துறந்தே ஆக வேண்டும். அரசுப் பணியாளர்களைப் போல் மக்கள் பணியாளர்கள் விடுமுறை கோருவது ஏற்புடையதன்று.
த.நாகராஜன், சிவகாசி.

கட்டாயம் தேவை
காவலர்களுக்கு மட்டும் விதிவிலக்கு எதற்காக? வெயிலோ மழையோ, பகலோ இரவோ, ஏன், பண்டிகைக் காலங்களில் கூட அவர்கள் பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. குடும்பத்தினருக்கு உதவி செய்யவும், கடுமையான பணிக்குப் பிறகு ஓய்வு எடுக்கவும், அவர்களது சொந்த வேலைகளுக்காகவும் வார விடுமுறை அவசியம். அது எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அ.காதர்பாட்சா, சென்னை.

அதிக ஊதியம்
இந்தக் கருத்து சரியல்ல. ராணுவம், காவல்துறை இரண்டுமே மக்கள் நலன், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. காவல்துறையினர் எப்போதும் விழிப்புடன் இயங்கிக் கொண்டிருந்தால் தான் நாட்டில் அமைதி நிலவும். அவர்களுக்கு விடுமுறை அளிக்காததால் ஊதியத்தை வேண்டுமானால் அதிகரிக்கலாம். மேலும், காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை முதலில் நிரப்ப வேண்டும்.
என்.சண்முகம், ருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com