கோயில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கோயில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' 

வேறுபாடு கூடாது
கோயில் தரிசனத்தில் சிறப்புக்கட்டண தரிசன முறை - இலவச தரிசன முறை என்ற வேறுபாடு கூடாது. சிறப்புக் கட்டணக்காரர்களுக்கு தெய்வ தரிசனத்தில் முதல் முன்னுரிமை - இலவச தரிசனக்காரர்களுக்கு தாமதம் என்பது தெய்வத்தின் முன்பே பொருளாதார வேறுப்பாட்டை சுட்டிக் காட்டுவது போலாகும். கோயில் தரிசனத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு கூடாது. கட்டண தரிசன முறையை நீக்க வேண்டும் என்பது சரியே.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

எல்லோரும் சமம்
கடவுளை தரிசிக்க வருபவர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு கோயிலுக்கு வர வேண்டும். அவசரத்தில் வருபவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் சிறப்புக் கட்டண தரிசன முறையால் சாதாரண பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடவுள் முன் எல்லோரும் சமம் எனும்போது இந்த சிறப்பு கட்டண தரிசன முறை எதற்கு? கோயில்களில் இந்த கட்டண நடைமுறையை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பது சரியே.
ராஜசேகர், சென்னை.

தவிர்க்க முடியாதது
கோயில்களில் சிறப்புக்கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து முற்றிலும் தவறானதாகும். சிறப்புப் பேருந்து, சிறப்பு ரயில், சிறப்பு விருத்தினர் என்றெல்லாம் நடைமுறையில் இருந்து வருவது கண்கூடு. அவரவர்களின் நேரம், வேலைப்பளு இவற்றின் காரணமாக விரைவாக தரிசனம் செய்ய விரும்புவது தவிர்க்க முடியாத ஒன்று. இறைவன், நல்ல பக்தனின் உள்ளத்தில் இருக்கிறான். கட்டணத்தில் இல்லை என்பதை உணர வேண்டும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

ஒழுங்குமுறை தேவை
ஆண்டவன் முன்னர் அனைவரும் சமம்' எனும்போது எல்லோரும் வரிசையில் நின்று வழிபாடு செய்வதுதான் மக்களுக்கும் மகிழ்ச்சி; இறைவனுக்கும் மகிழ்ச்சி. அங்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு எதற்கு? நெருக்கடியைத் தவிர்க்கவும், எல்லோரும் குறித்த காலத்தில் வழிபாடு செய்யவும் சில ஒழுங்குமுறையை கோவில்களில் நடைமுறைப்படுத்தலாம். சிறப்புக் கட்டண வசூலில் வரும் தொகையில்தான் கோவில்களைப் பராமரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சிறப்புக் கட்டண முறை ரத்து செய்யப்பட வேண்டும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஒரே இடம்
கோயில்களில் சிறப்புக்கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கருத்து சரியல்ல. ஏனெனில், சிறப்புக்கட்டணம் பெறப்பட்டாலும் அனைவரும் ஒரே இடத்தில் நின்றே கடவுளை வணங்குகின்றனர். முதியோர், உடனடியாக ஊர் திரும்பியாக வேண்டிய கட்டாய நிலையிலுள்ளோர் என்போர்க்குச் சிறப்புக்கட்டண தரிசன முறை மிகுந்த பயனளிக்கும். சிறப்புக்கட்டண முறையால் கிடைக்கும் வருவாயின் பெரும் பகுதி கோயில் நிர்வாகத்திற்கும் பக்தர்களின் வசதிகளுக்காகவுமே செலவிடப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

ஏற்றத்தாழ்வு
கோயில்களில் சிறப்புக்கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது சரிதான். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் கோயில்களில் தரிசனம் செய்வதுதான் உண்மையிலேயே சிறந்த செயலாகும். அவ்வாறு இல்லாமல் சிறப்புக்கட்டணம் செலுத்துபவர்கள் தனியாகச் சென்று தரிசனம் செய்வது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். கடவுளும் ஏழை, பணக்காரன் என்று வேறுபடுத்தி அருளை வழங்குவதில்லை என்ற உணர்வு தோன்ற வேண்டும். ஆகவே சிறப்புக்கட்டண தரிசன முறை நீக்கப்பட வேண்டும்.
தே.க. விஜயலட்சுமி, சென்னை.

கோயிலுக்கு வருமானம்
பெரிய பதவிகளில் இருப்பவர்களால் கோயிலில் வரிசையில் நின்று நீண்ட நேரம் செலவிட இயலாது. பணம் கொடுத்து சிறப்புத் தரிசனம் செய்யும் வசதி இருப்பதால் தான் இவர்களால் இறைவனை வணங்க முடிகிறது. மேலும், இத்தகைய செல்வந்தர்கள் செலுத்தும் கட்டணம் கோயிலுக்கு வருமானமாகிறது. சிறப்புக்கட்டண தரிசன சேவையை நிறுத்திவிட்டால், பெரிய கோயில்களில் வரிசையில் நின்று இறைவனைப் பார்க்க வெகு நேரம் ஆகலாம். சிறப்புத் தரிசன சேவை இருப்
பதால் பொது தரிசன வரிசையில் கூட்டம் குறைகிறது.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
ஆன்மிக நெறியல்ல
கோயில்களில் சிறப்புக்கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆண்டி முதல் அரசன் வரை ஒரே மாதிரி அருள் பாலிக்கும் ஆண்டவன் சந்நிதியில் சிறப்புக்கட்டண தரிசன முறை என்று பாகுபாடு பார்ப்பது சரியல்ல சிறப்புக்கட்டணம் செலுத்தி விரைவில் கடவுளை தரிசனம் செய்யலாம் என்று எண்ணுவது ஆன்மிக நெறியாகாது.
எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை.

லஞ்சம் கொடுத்தல்
கோயில்களில் சிறப்புக்கட்டண தரிசன முறை ஒழிக்கப்பட வேண்டும். அது, நம் தேவைகளை நிறைவு செய்ய லஞ்சம் கொடுப்பதைப் போன்றது. தங்கள் மனக்குமுறல்கள், வேதனைகளை மனம் திறந்து வெளியிடுமிடம் கோயில்களே. ஆண்டவன் முன் அனைவரும் சமம். சிறப்புக்கட்டணச் சலுகையை அனுபவிக்கும் செல்வந்தர்களுக்கு தெய்வங்களும் கட்டுப்படுகிறதா என்ற வினா எளியோர் மத்தியில் எழுகிறது.
கி.பாஷ்யம், சலுப்பை.

மக்கள் பணி
இறைவனுக்கு முன்னர் யாவரும் சமமே. எனினும், அவர்கள் ஆற்றும் பணியினால் வேறுபடுகின்றனர். மக்கள் பணியே மகேசன் பணி என்பதை அனைவரும் அறிவோம். அந்த மகேசன் பணியினை ஆற்ற வேண்டிய முக்கியஸ்தர்கள் ஆண்டவனைத் தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் நின்றால் மக்கள் பணி பாதிக்கப்படும். எனவே, இத்தகையோரிடம் சிறப்புக்கட்டணம் பெற்று வரிசையில் முன்னுரிமை வழங்கலாம். சிறப்புக் கட்டணம் பெறுவதில் தவறில்லை.
கி.சத்தியசீலன், திருநெல்வேலி.

எந்த வகையில் சரி?
பள்ளிகளில் ஏழை, பணக்காரன் என்று ஆடையை வைத்துப் பகுத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காக தான் மாணவர்களுக்கு சீருடை முறை அறிமுகமானது. அதே கருத்து, கோயில்களுக்கும் பொருந்துமல்லவா? ஏழைகள் மணிக்கணக்கில் கால் கடுக்க இறைவனைப் பார்க்க நின்று கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பணக்காரர்கள் பணம் கொடுத்தால் உடனே எந்த இடையூறும் இன்றி கடவுளைப் பார்க்கலாம் என்பது எந்த வகையில் சரி? மக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் கூறும்போது கோயில்களில் பாகுபாடு ஏன்?
குரு.பழனிசாமி, கோயமுத்தூர்.

நேரம் மிச்சம்
கோயில்களில் சிறப்புக்கட்டண முறையை ரத்து செய்யக்கூடாது. வெளியூரிலிருந்து கோயில்களுக்கு வருபவர்கள் இந்த வழியைப் பயன்படுத்துவதால் அவர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. அதனால் அவர்கள் கூடுதலாக இன்னும் இரண்டு சுற்றுலாத் தலங்களைக் காண முடியும். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இம்முறை பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் வசூலாகும் தொகை கோயிலின் பராமரிப்புக்கே பயன்படுத்தப்படுகிறது.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

பாகுபாடு அற்றவர்
கடவுள் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். பாகுபாடு அற்றவர். இந்நிலையில், சிறப்புத் தரிசனம், இலவச தரிசனம் என்று பக்தர்களுக்கிடையே வேறுபாட்டை உருவாக்குவது சரியல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரியான தரிசனம் என்பதே சரியானதாகும். பிரசாதங்கள் விற்பனை போன்ற வேறு வழிகளில் கோயில் வருமானத்திற்கு வழிதேடிக் கொள்ளலாம்.
பி.ரவி, அறச்சலூர்.

திருவிழாக் காலம்
விழாக் காலங்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்ற நேரங்களில் சிறப்புக்கட்டணம் வசூலிக்கப்படுவது ஏற்கத்தக்கதுதான். விழாக்காலம் இல்லாத நாட்களில் சிறப்புக் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. தெய்வத்தின் முன்பு அனைவரும் சமம் என்றாலும் விழாக் காலங்களில் இம்முறை தவிர்க்க இயலாதது.
மகிழ்நன், சென்னை.

ஏற்க முடியாதது
பணமும், பதவியும் இருந்தால் உடனடியாக சாமி தரிசனம் கிடைக்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பணம் கொடுத்தால் கடவுளுக்கு அருகில் செல்லலாம்; பணம் கொடுக்கவில்லை என்றால் தூரத்தில் இருந்துதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்னும் சிறப்புத் தரிசன முறை ஒழிக்கப்பட வேண்டும்.
ஐ.சுரேஷ், தூத்துக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com