இந்தியாவில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதை அனுமதிக்க முடியாது என்று பா.ஜ.க.தேசிய தலைவர் அமித் ஷா கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இந்தியாவில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதை அனுமதிக்க முடியாது என்று பா.ஜ.க.தேசிய தலைவர் அமித் ஷா கூறியிருப்பது சரியா?' 

மிகவும் சரியே
வங்கதேச ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதை அனுமதிக்க முடியாது என்று அமித்ஷா கூறியிருப்பது மிகவும் சரியே. ஏனெனில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ள 40 லட்சம் பேரில் 35 லட்சம் பேர் ஊடுருவல்காரர்களே என்று ஊகிக்கப்படுகிறது. பத்தாண்டுகளில் அஸ்ஸாமின் மக்கள் தொகை 36% அதிகரித்துள்ளது. இது தேசிய மக்கள் தொகை அதிகரிப்பான 25% என்பதை விட அதிகம். இந்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் ஊடுருவல்காரர்கள் பெரும்பான்மையாகி, அஸ்ஸாமியர் சிறுபான்மையினராகும் அபாயம் ஏற்பட்டு விடும்.
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

போர் வேண்டாம்
முன்பு இதேபோல் அகதிகளாக வங்க தேச மக்கள் இந்தியாவிற்குள் வந்தபோது நாம் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம். பின்னர், அவர்களுக்கு ஆதரவாக இந்தியா போர் நடத்தியது. அதன்பின் அவர்களே இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதை பலரும் மறந்திருப்பார்கள். ஆனால், அரசு அதனை மனதில் கொண்டு இப்போது ஊடுருவியவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். ஏனெனில், இன்னொரு போர் மூளுவதை நம்மால் தாங்க இயலாது.
கோ.ராஜேஷ்கோபால், அரவக்காடு.

அடையாள அட்டை
ஊடுருவல்காரர்கள் யாராக இருந்தாலும் இந்தியா அதை அனுமதிக்கக் கூடாது. ஊடுருவல்காரர்கள் என்கிற போர்வையில் சமூக விரோதிகளும் உள்ளே நுழைந்து நம் நாட்டில் கலகம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். சாதாரண மக்களாக இருந்தாலும், சதிகாரர்களாக இருந்தாலும் ஊடுருவல்காரர்களை அனுமதிப்பது தவறு. எனவே, மத்திய அரசு ஏற்கெனவே கூறிக் கொண்டிருப்பதைப் போல தேசிய அடையாள அட்டையை அனைத்து இந்திய மக்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். அதுதான் ஊடுருவல்காரர்களைத் தடுக்க ஒரே வழி.
கலைநன்மணி மகிழ்நன், சென்னை.

இமாலயப் பணி
லட்சக்கணக்கான ஊடுருவல்காரர்களை வைத்துப் பராமரிப்பது என்பது எளிய பணியல்ல. அவர்களுக்கான இருப்பிடம், உணவு, தண்ணீர், ஆடைகள், பாதுகாப்பு முதலியன செய்து கொடுப்பது என்பது இமாலயப் பணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நம் நாட்டு மக்களுக்கே இன்னும் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேறாத நிலை காணப்படுகிறது. அதனால் ஊடுருவல்காரர்களை வெளியேற்ற நினைப்பதில் தவறில்லை.
குரு.பழனிசாமி, கோயம்புத்தூர்.

அடையாளம்
இந்தியாவில் மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் வெளிநாட்டினர் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அஸ்ஸாம் மாநில குடிமக்கள் தேசிய பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. எனவே, அஸ்ஸாம் மாநில மக்களையும், சட்ட விரோதமாகத் தங்கியுள்ள வங்க தேசம் போன்ற வெளிநாட்டினரையும் வேறுபடுத்தி அடையாளம் காண வேண்டியுள்ளது. ஆதலால் ஊடுருவல்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற கூற்று சரியே.
செ.சுவாமிநாதன்,
டால்மியாபுரம்.

அரசியல் கட்சிகள்
நம் நாட்டுத் தேர்தலின் வெற்றி-தோல்வியை வங்க தேசத்திலிருந்து வந்து இங்கு குடியேறியவர்களே தீர்மானிக்கும் நிலை உள்ளது. மேலும், சில ஆண்டுகளில் அஸ்ஸாமில் இவர்கள் பெரும்பான்மையாகிவிடும் அபாயம் உள்ளது. இந்த ஊடுருவல்காரர்களால் நமது கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை இவற்றில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். நம் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகளும் தங்கள் வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களை குடிமக்களாக மாற்ற முயலுகின்றன. இது தவறு.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

ஆபத்தானது
இந்தியாவில் வங்கதேச ஊடுவல்காரர்கள் தங்கியிருப்பதை அனுமதிக்க முடியாது. இதுபோல் நம் மக்கள் லட்சக்கணக்கில் வங்க தேசத்தில் ஊடுருவி தங்கி இருக்கிறார்களா? ஊடுருவல் எனத் தெரியும்போது எப்படி நம் மக்களோடு தங்கியிருக்க அனுமதிக்க முடியும்? வெளிநாட்டுக்காரர்கள் இங்கு ஊடுருவித் தங்குவது நம் நாட்டுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஆபத்துதான். அவர்களை நிச்சயம் வெளியேற்ற வேண்டும். இதை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியிருப்பது சரியே!
ராஜசேகர், சென்னை.

இரக்கமற்ற செயல்
பிழைப்புத் தேடி வருபவர்களை விரட்டியடிப்பது இரக்கமற்ற செயல். உழைப்பதற்கு ஆட்கள் இல்லை என்றால், இயற்கை வளங்கள் கூட வளத்தை இழந்துவிடும். பிழைக்க வந்தவர்களை விரட்டியடித்தால்தான் நம்மால் பிழைக்க முடியும் என்று பேசி, சிலரை விரட்டியடித்த நாடுகள் எல்லாம் பின்னாட்களில் பிழைப்பை இழந்திருக்கின்றன. இந்தியர்களை வெளியேற்றிய பின் பர்மா செழிக்கவில்லை. இலங்கையின் நிலையும் அப்படித்தான். உகாண்டாவின் நிலையும் அதேதான். யாரையும் விரட்டியடிக்க வேண்டாம். எல்லோரையும் சேர்த்துக்கொண்டு உழைப்போம்.
மு.சிதம்பர வில்வநாதன், 
கானாடுகாத்தான்.

பாதிப்பு
இந்தியாவில் நுழைந்துவிட்ட ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதே அரசின் கடமையாகும். அவர்கள் நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், திடீரென்று மக்கள் தொகையில் அதிகரிப்பு காணப்பட்டால், அரசு திட்டங்கள் முழுமையாக வெற்றியடையாமல் போகக்கூடும். நம் நாட்டினருக்கே போதுமான இருப்பிடம், இயற்கை வளம், வேலை வாய்ப்புகள் இல்லாத சூழலில் அவர்களையும் இணைத்துக் கொள்வது தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தும்.
பா.அருள்ஜோதி, மன்னார்குடி.

மனிதாபிமானம்
கடந்த எண்பது ஆண்டுகளுக்கு முன் வங்கதேச ஊடுருவல்காரர்கள் யார்? ஒன்றுபட்ட பாரதத்தில் நம்முடன் இருந்தவர்கள் தானே? ஐ.நா சபை மூலம் வங்க நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு ஒரு வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி தருவதுதான் நமது மனிதாபிமானத்திற்கான அடையாளமாகும். பஞ்சம் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் அங்கு வாழத்தக்க சூழ்நிலை இல்லாததால்தானே அவர்கள் புலம் பெயர்கிறார்கள். அதனை மனதில் கொண்டு அவர்களை வெளியேற்றாமல் இங்கே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

அச்சுறுத்தல்
ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டுமென்பது சரியான கருத்து. வங்க மொழி பேசுவதாலேயே அவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து, நம்முடைய நாட்டில் இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கக் கூடிய சலுகைகளையும் உரிமைகளையும் அவர்களும் அனுபவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது அவர்களை வாக்குவங்கியாகப் பார்த்தோமானால் பிற்காலத்தில் அவர்களால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். ஆகையால் அவர்களை இனம் கண்டு நாடு கடத்த வேண்டும். அதுதான் நம் நாட்டிற்கு நல்லது.
ப.சுவாமிநாதன், சென்னை.

எல்லைப் பாதுகாப்பு
இந்திய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும். அந்நிய நாட்டு மக்களை இங்கிருந்து அகற்ற வேண்டும். எனவே அவர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதுடன், மேலும் வேறு வழிகளில் நமது நாட்டுக்குள் அவர்கள் மீண்டும் வந்துவிடுவதைத் தடுக்க சரியான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

அரசின் கடமை
அஸ்ஸாமில் இந்தியக் குடிமக்கள் பதிவேட்டுப் பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை என்றும், அவர்கள் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அங்கிருப்பதை விட இங்கு பாதுகாப்பாக வாழலாம் என்றுதானே இங்கு வந்து தங்கியுள்ளனர். சில விதிமுறைகளை வகுத்து அதன்படி அவர்களும் நிம்மதியாக வாழ வழி செய்யவேண்டியது அரசின் கடமையாகும்!
அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com