'தமிழக வழிபாட்டுத் தலங்களில் அமைந்துள்ள அனைத்து வணிக இடங்களையும் அகற்ற வேண்டும் என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தமிழக வழிபாட்டுத் தலங்களில் அமைந்துள்ள அனைத்து வணிக இடங்களையும் அகற்ற வேண்டும் என்பது சரியா?' 

நிம்மதி நாடும் இடம்
மக்கள் மன நிம்மதி நாடிச் செல்லுமிடம்தான் கோயில்கள். அந்த இடம் அமைதியானதாக இருத்தல் அவசியம். பெரும்பாலான கோயில்களில் வழிபாட்டுப் பொருள்கள் மட்டுமன்றி, பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அமைதி கெடுவதுடன், சமீபத்திய பெருவிபத்துகள் போல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். எனவே அவற்றை வழிபாட்டுத்தலங்களிலிருந்து அகற்ற வேண்டியது அவசியம்.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

கூடாது
வெற்றிலைப் பாக்கு, பழங்கள், பூக்களைத் தவிர இதர வகையான பொருட்கள் உள்ள கடைகளுக்கு எங்கும் அனுமதி கொடுக்கக் கூடாது. மேலும் அவற்றையும் கோயில் வளாகத்திலிருந்து சில அடி தூரத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும்.
எஸ். ராஜசேகர், சென்னை.

கேள்விக்குரியதாக்கும்
வழிபாட்டுத் தலங்களில் பணம் ஈட்டுவது ஆன்மிகத்தையே கேள்விக்குரியதாக்கும். எனவே அனைத்து ஆலயங்களிலும் வணிக இடங்களை அகற்ற வேண்டும் என்ற கருத்து சரியே.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

வருவாய் யாருக்கு?
மிகுந்த முன்எச்சரிக்கையுடன் வழிபாட்டுத் தலங்களில் வணிக இடங்களை வைக்கலாம், வருவாய் வழிபாட்டுத் தலத்துக்கு வருவதாக இருந்தால்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

தீயணைக்க கருவிகள்
வணிக இடங்களை அகற்ற வேண்டியதில்லை. கடைகளின் வெளிப்புறத்தில் சிறிய ரக தீயணைப்புக் கருவிகள், கோயிலுக்குள் பெரிய ரக தீயணைப்புக் கருவிகள் வைக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எஸ். நாகராஜன், அஸ்தினாபுரம்.

முரண்பட்டது
வழிபாட்டுத் தலங்கள் இறைவனை வணங்குவதற்காகத் தொன்று தொட்டுள்ள புனிதமான இடமாகும். வணிக இடங்களாக இருப்பது முரண்பட்டதாகும். வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யட்டும்.
கே.கோவிந்தராஜன், அல்லூர்.

சிரமங்களைத் தவிர்க்க...
வணிக இடங்களில் பூஜைப் பொருட்களை மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதிப்பது நல்லது. அப்பொருட்களை வெளியிலிருந்து வாங்கி வரும்படியான சிரமங்களைத் தவிர்க்க இது உதவும். புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்குத் தடை செய்ய வேண்டும்.
அ. அமீர் பாட்சா, அறந்தாங்கி.

தயவு தாட்சண்யமின்றி...
வழிபாட்டுத் தலங்களுக்கு உள்புறம், ஒட்டியுள்ள வெளிப்புறம் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட வேண்டும். புனிதமும் தூய்மையுமே முதன்மை.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி. 

இடைஞ்சல்!
வழிபாட்டுத் தலங்களுக்குள் வணிக இடங்கள் இருப்பது, சிறிதும் தேவையற்றது. அநாவசிய இடைஞ்சலும் கூட!
க.மா.க. விவேகானந்தம், மதுரை

வந்ததது வினை!
வழிபாட்டுத் தலங்களில் வணிகப் பகுதிகள் இருக்கக் கூடாது. அனைத்து ஆலயங்களிலும் அரசு ஆலய வழிபாட்டைவிட வணிக லாபத்தைத்தான் அதிகம் எதிர்பார்த்து செயல்படுகிறது. அதனால் வந்த வினைதான் மதுரை விபத்து. அகற்ற முயல்வதில் உடனடி நடவடிக்கை நல்லது.
என். முத்துக் கருப்பன், காரைக்குடி.

புனிதம் காக்க...
அதிகாரிகள் கோயில்களை வருமானம் ஈட்டும் வியாபாரத் தலமாக மாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழகமெங்கும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் கோயில்களை மறைத்துக் கட்டப்பட்ட வியாபாரக் கடைகளை அகற்றி, கோயில்களின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழமுதன், பாப்பிரெட்டிப்பட்டி.

விழிப்புணர்வு அவசியம்
வழிபாட்டு இடங்களில் இருக்கும் புராதனச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பதிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதும், அது தொடர்பான விழிப்புணர்வும் மிகவும் அவசியமாகும். வணிக நோக்கில் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவமான நினைவுகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியமானதே.
கூத்தப்பாடி மா. பழனி, பென்னாகரம்.

உரிய பாதுகாப்பு செய்க
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வணிக இடங்களை அகற்ற வேண்டும் என்பது சரி அல்ல. மீனாட்சி அம்மன் கோயிலில் எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து, இனி அதுபோல் நடவாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
வெட்டுக்காடு கே.சிங்காரம், 
வெண்ணந்தூர்.

ஆக்கிரமிப்பு
இறையுணர்வுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றால் கருவறையைத் தவிர, ஆலய வளாகங்களில் வணிகமே ஆக்கிரமித்துள்ளது. வழிபாட்டுத்தல வளாகங்களிலிருந்து வணிக இடங்களை அகற்ற வேண்டியது அவசியம்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

பொருள் வாங்க அல்ல
நிம்மதிக்காகவே பொருள் செலவு செய்து, குடும்பத்தோடு வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் வருகிறார்கள். பொருள்கள் வாங்க அல்ல. அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என்ற கருத்து சரி.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பாதுகாப்பற்ற சூழல்
முறையான பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமை, பாதுகாப்பற்ற மின் இணைப்புகள், மக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கமான ஆக்கிரமிப்பு போன்றவை பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குபவை. உட்புறக் கடைகளில் பெரும்பாலும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கடைகள் நிம்மதி தேடி வரும் மக்களுக்கு இடையூறாகவே இருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களில் உள்ள கடைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
கவி வானவில் மூர்த்தி, சென்னை.

வழிபாட்டுக்கு மட்டும்...
காணிக்கை செலுத்த அநேக பொருட்கள் வாங்குபவர்கள் வருவார்கள். வழிபாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் இவை சம்பந்தப்பட்ட கடைகள், காணிக்கைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கடைகள் மட்டும் இருக்க வேண்டும்.
எம்.சம்பத்குமார், ஈரோடு.

ஆகம விதி மீறல்
வழிபாட்டுத்தலங்கள் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட நிலையில் அவற்றுள் வணிக இடங்களை நடத்த அனுமதி அளிப்பது ஆகம விதிகளை மீறுவதாகும். ஆகம விதி மீறப்பட்டு இறைவனைக் காண முடியாது. அதாவது அருள் பெற முடியாது.
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

அவலம்
இந்து வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மையையும் அழகையும் மறைக்கும் விதத்தில் ராஜகோபுர நுழைவாயில்களிலேயே அங்காடிகள் பெருகியுள்ளது கண்டிக்கத்தக்கது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அறநிலையத்துறையை நிர்வகிப்பதே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம். வணிக வளாகங்களை அகற்ற வேண்டும்.
ஆர்.விஸ்வநாதன், சென்னை.

கால அவகாசம் தருக
மக்கள் திரளும் இடங்களில் அத்தியாவசியம் என்று கருதும் உணவகம், மருந்தகம் போன்றவற்றைத் தவிர்த்து, கடை வீதிகளாக வழிபாட்டுத் தலங்கள் மாறுவதைத் தடுக்க வேண்டும். தற்போதுள்ள வணிகர்களுக்குப் போதுமான அவகசாமளித்து இடமாற்றம் செய்திடல் சிறப்பு. தவிர, பாதுகாப்பு அம்சங்களில் கவனம் மிகுவாக இருக்க வேண்டும்.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

வாழ்வாதாரம்
வழிபாட்டுத் தலங்களில் சிறுவணிகர்கள்தான் கடை வைத்து, குறைவான லாபத்துடன் வியாபாரம் செய்து வருகின்றனர். வணிக இடங்களை அகற்றினால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவற்றை ஒழுங்குபடுத்தலாம்; மாறாக, ஒழிக்க முயற்சிக்கக் கூடாது.
டி.மாணிக்கவேல், திருச்சி.

பூஜைப் பொருட்கள் மட்டும்
முக்கியமான திருத்தலங்களில் கோயிலைச் சுற்றி நூறு அடிக்குள் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. கோயில் நிர்வாகத்துக்குட்பட்ட இடங்களில் பூஜைப் பொருட்கள், பூக்கடைகள் தவிர்த்து அனைத்துக் கடைகளையும் அப்புறப்படுத்துவதே ஆன்மிகத் தலங்களுக்கு அழகாகும்.
குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.

இறை சிந்தனை மட்டும்...
இறை சிந்தனையோடு திருக்கோயிலுக்குள் அடியெடுத்து வைப்பவர்களை, பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர் போல கூவி அழைக்கும் வணிக இடங்கள் தேவையில்லை.
எம்.ஐயப்பன், பொன்மனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com