'விவசாயிகளின் நலன் காப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'விவசாயிகளின் நலன் காப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருப்பது சரியா?

அரசின் கைகளில்...
விவசாயிகளின் நலன் காப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்றாலும் முக்கியமான பங்கை வகிப்பது ஆளும் அரசாங்கம்தான். ஏனெனில் விவசாயிகளுக்குத் தேவையான கடன் வழங்குவது, விவசாயம் பொய்த்துப் போகும்போது கடன்களைத் தள்ளுபடி செய்வது, எல்லாம் அரசின் கைகளில்தான் உள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்கள் எல்லாவற்றையும் குறைந்த விலையில் அரசாங்கத்தால்தான் தந்துதவ முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் விளைபொருள்களுக்குச் சரியான விலை அளிப்பது குறித்து அவர்களுடன் கலந்து பேசி அரசு ஒன்றினால்தான் செய்ய முடியும்.
வளவ.துரையன், 
கடலூர். 

தார்மிகக் கடமை
வேளாண்மை விளை பொருள் உற்பத்தி பெருக நீர்வளத்திற்கான நீர்வள ஆதார அமைப்பு, நிலவளம் பெருக விவசாயத் துறை, விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட கூட்டுறவுத் துறை, வேளாண்மை விளை பொருள் விற்பனை வாரியம், மற்றும் மாநில நுகர் பொருள் வாணிபக் கழகம் போன்ற துறைகளுக்கு தார்மிகக் கடமைகள் உள்ளன என்பதையே குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளர்.
த.நாகராஜன், 
சிவகாசி

மனமுவந்து பங்களிப்போம்
விவசாயி இல்லையெனில் நாம் வாழ முடியாது. சேற்றை மிதித்த அவன் நமக்குýச் சோற்றை வழங்குகிறான். நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் நலனில் அனைவரும் முன்வந்து முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருப்பது சரியே.
சு. இலக்குமணசுவாமி, 
மதுரை.

நாட்டின் முதுகெலும்பு
விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அடுக்ககங்களாகவும், மருத்துவமனை, பேருந்து நிலையங்களாகவும், புறவழிச் சாலைகளாகவும் மாற்றப்படுகின்றன. இதனால் விளை நிலங்கள் குறையும். விவசாயிகளின் வயிறும் நிரம்ப வேண்டுமன்றோ! அவன் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலையினை அவனே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். நாட்டின் முதுகெலும்பான விவசாயியும் விவசாயமும் நிமிர்ந்து நிற்க வேண்டுமெனில் அவர்களது நலன் காப்பாற்றப்பட வேண்டுமம். இதில் அனைவரின் பங்கும் உள்ளது.
ப. தாணப்பன், 
தச்சநல்லூர்.

அரசே எதிராக...
விவசாயிகளின் நலன் காப்பதில் அரசுதான் முதலிடம் வகிக்கிறது. விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களோடு கைகோத்து, விளை நிலங்களைப் பாழடிக்கிறது. அரசே பல சமயங்களில் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது.
தொ. எழில்நிலவன், 
களமருதூர்.

உதவ முன்வருவோம்
விவசாயத்தை சார்ந்துதான் மனித இனம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் இல்லையேல் மனிதன் வாழ முடியாது. ஆகையால் விவசாயிகளின் நலனில் நம் அனைவருக்கும் கண்டிப்பாக பங்கு உள்ளது. அனைவருக்கும் இயன்ற வகையில் விவசாயிகளுக்கு உதவ முன்வருவோம்.
கா. சீனிவாசன், 
மாடரஹள்ளி. 

இயன்ற அளவு பங்களிப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்த கருத்து முற்றிலும் சரிதான். இந்தியா இன்றளவும் விவசாய நாடுதான். ராணுவ வீரர் நாட்டைப் பாதுகாப்பது போல், விவசாயிக்கும் நாட்டு நலனைக் காப்பதில் முக்கியப் பங்கு உள்ளது. உயிர்கள் வாழ விவசாயிகளிடம்தான் செல்ல வேண்டியுள்ளது. விவசாயிகளின் நலன் காப்பதில் நம்மால் இயன்ற அளவில் பங்களிக்க வேண்டும்.
உ. இராசமாணிக்கம், 
கடலூர்.

துயரைத் துடைக்க...
இந்தியா மிகப் பெரிய விவசாய நாடு. அழிந்து வரும் விவசாயத் தொழில்களை மேம்படுத்த வேண்டும். 'உறுபசி' இல்லாத நாட்டைக் காண உழைக்கும் விவசாயிகளின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நாட்டின் முதல் குடிமகன், நமது குடியரசுத் தலைவரின் கருத்து முற்றிலும் ஏற்புடையது. அரசு மட்டுமே விவசாயிகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதில்லை. தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் இணைந்து விவசாயிகளின் துயரைத் துடைக்க முடியும்.
க. கிருஷ்ணமூர்த்தி, 
பழனி.

தக்க விலை கிடைக்க...
இன்றைய காலகட்டத்தில் விவசாயிக்கு உதவுவதில் அரசுக்குதான் பெரும் பங்கு உள்ளது. நீர் ஆதாரம் பொய்த்துப் போன நிலையில், அரசு மற்ற மாநிலங்களிலிருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உள்ள நீரைத் தடுப்பணைகள் போன்றவற்றால் முறையாகத் தேக்கி வைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது பணியில் தொய்வின்றிச் செயல்பட்டு வருகிறார்கள். விளைபொருள்களுக்கு இடைத் தரகர்களை அறவே நீக்கி, விவசாயிக்குத் தக்க விலை கிடைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.
ஆ. கணபதி, மேலணிக்குழி.

உலகுக்கே உணவளிப்பவன்
விவசாயிகளின் நலன் காப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியிருப்பது மிகவும் சரியானது. விவசாயி உலகத்துக்கே உணவளிப்பவன் என்பதால், முதலில் அவன் நலமாக இருப்பது மிகவும் முக்கியம். அவர்களின் விளை பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி செய்வதுடன், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் தடையின்றிக் கிடைக்க உதவ வேண்டும். இடைத்தரகர்களும் வியாபாரிகளும் கொள்ளை லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தைவிட்டுவிட்டு, விவசாயிக்கும் சரியான பலன் கிடைத்து, அவன் வறுமையின்றி வாழ உதவ வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

பல அம்சங்கள்
விவசாயிகளின் நலனில் மிகவும் முக்கியமானது தண்ணீர். இந்த விஷயத்தில் சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை நம்பி இருக்கின்றன. தமிழ்நாடு காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நீராதாரத்தை நம்பி இருக்கிறது. கூட்டுறவுக் கடன் வசதி, உர மானியம், விவசாய வேலை செய்ய ஆட்கள், மின்சாரம், விவசாயப் பொருள்களுக்கு சரியான விலை போன்ற பல அம்சங்கள் விவசாயத் தொழிலில் உள்ளன. எனவே விவசாயிகளின் நலனில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பது முற்றிலும் சரியே.
ரகுராம் ராஜாமணி, சென்னை.

யதார்த்தமான உண்மை
குடியரசுத்தலைவர் தெரிவித்திருப்பது யதார்த்தமான உண்மை. உலகமே உழவிற்குப் பின் உள்ளது. உழவனே உலகத்தாருக்கு ஆணிவேர் போன்றவன் என்றார் வள்ளுவர். விவசாயி சேற்றிலே கை வைத்தால்தான், நாம் சோற்றிலே கை வைக்க முடியும். உழவனின் நலனைக் காப்பதில் அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு.
எம்.எஸ். இப்ராகிம், 
சென்னை.

விவசாயி கண்ணீர் சிந்தினால்...
விவசாயி கண்ணீர் சிந்தினால் நாம் அழிய நேரிடும். விவசாயிகளின் நலனைக் காக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் உண்டு என்ற கருத்து சரியே.
கோ. ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

அரசுக்கே...
விவசாயிகளின் நலன் காப்பதில் மக்களைவிட அரசுக்கே முக்கியப் பங்கு உள்ளது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, விவசாயத்தை ஊக்குவிக்காமல் தொழிலுக்கே முக்கிய கவனம் செலுத்தினார்கள். அதன் விளைவு விவசாயம் சுருங்கிவிட்டது. விவசாய முக்கியத் தேவையான தண்ணீர் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வைத்தனவா? விவசாயிக்கு விலை சொல்லும் உரிமை இல்லை. இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தைரியத்துடன் வட இந்திய, தென்னிந்திய நதிகளை இணைத்து, எல்லோருக்கும் எல்லா காலத்திலும் தண்ணீர் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மகிழ்நன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com