'பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியிருப்பது சாத்தியமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியிருப்பது சாத்தியமா?'

சாத்தியமே!
பிரகாஷ் காரத் கூறுவது போல பாஜவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் சேர்வது சாத்தியம்தான். மதச்சார்பின்மை இந்தியாவை மதச்சார்பு இந்தியாவாக மாற்றுவதற்கு பாஜக முயல்கிறது. இந்தியாவிலிருந்து பிரிந்துபோன பாகிஸ்தான் மதச்சார்வு நாடாக இருப்பதில் என்ன சுகத்தினைக் கண்டது? இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'ஹிந்துஸ்தான்' என்ற மதச்சார்பு இந்தியாவாக மலர்ந்திருந்தால் பாகிஸ்தானின் அலங்கோலங்கள் இங்கும் நடந்து கொண்டிருக்கும். இதனை தகுந்த பிரசாரத்தின் மலம் மக்களுக்கு உணர்த்தினால், காரத் கூறுவது சாத்தியமே!
அ. அமீர் பாட்சா, அறந்தாங்கி.

எடுபடாது!
அயல்நாடுகளுடன் சுமுக உறவு கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியைத் தரும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை உலகமே திரும்பிப் பார்க்கிறது. இதைப் பொறுக்காத மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மதம் சார்ந்த கட்சி என பாஜகவை அழைத்து அதன் தலைமையிலான ஆட்சியை வீழ்த்த விரும்புகிறார். அது எடுபடாது.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

மனிதம் தழைக்க...
காரத் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இந்தியா பன்முகத் தன்மையின் வடிவம் பெற்ற நாடு. வளரும் வல்லரசு. பாஜகவை வீழ்த்த மட்டுமல்ல, இந்த பாரத மண்ணில் மனிதம் தழைக்க வேண்டும் என்றால் அனைத்துக் கட்சிகளும் ஓர் அணியில் நின்று தியாகப் பயணம் செய்ய வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சிக்கித் தவிக்கின்றன!
காங்கிரஸ் உள்பட எந்தக் கட்சியும் பாஜகவுக்கு ùதிரான அரசியலை இன்னமும் தொடங்கவில்லை. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எந்த ஆட்சியிலும் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. சமாஜ்வாதி, ஜனதளங்கள் பூசலில் சிக்கித் தவிக்கின்றன. ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பில்லை.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

இதுவும் சாத்தியமே
எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்தியாவில் எதிர்ப்பதற்கு யாருமே இல்லை என்னும் நிலையில், மிகவும் சக்தி வாய்ந்த தலைவியாக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்துப் பல கட்சியினர் ஒன்றிணைந்து ஜனதா கட்சியைத் தொடங்கி வெற்றி பெறவில்லையா? அதுபோ இதுவும் சாத்தியமே.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு

வேடிக்கையானது!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் காரத் சொல்வது போல, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்ப்பது சாத்தியமே. ஆனால் முதலில் கம்யூனிஸ்டுகள் இணையட்டும். அதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கட்டும். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா என்ற விவகாரத்தில் அவரது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இரண்டு அணிகளாகப் பிளந்துள்ள நேரத்தில் அவரது கருத்து வேடிக்கையானது.
அ.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்.

நியாயமற்றது!
பாஜக எந்த மதத்திற்கும் விரோதமாக நடந்து கொள்வதுமில்லை; பிற மதத்தினரின் நலனைப் புறந்தள்ளுவதுமில்லை. அவரவர் கொள்கை வழி நடப்பதற்கு முழுச் சுதந்திரம் பெற்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியிருப்பது சாத்தியமற்றது; தார்மிக ரீதியில் அந்த அறைகூவல் நியாயமற்றதும் கூட!
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

கனவில் கூட நடக்காது
பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற பிரகாஷ் காரத்தின் கூற்று நடைமுறை சாத்தியமற்றது. உதாரணமாக, தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக ஓரணியில் திரள்வது கனவில் கூட நடக்காது. மேலும், மதவாதம் என்பதை மட்டுமே பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டாக மற்ற கட்சிகள் கூறி வருகின்றன. வேறு பலமான குற்றச்சாட்டுகள், குறைபாடுகள் இல்லை.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மூன்று முடிச்சு!
கடவுள், மதம், சாதி ஆகியவை பிரிக்க முடியாத மூன்று முடிச்சுகளாக உள்ளன. மதச்சார்பற்ற கட்சிகள் ஒரு மாயை. செயற்கையான ஒற்றுமை அரசியலுக்காக எதையும் விட்டுக் கொடுக்காது. எனவே, பிரகாஷ் காரத் கூறிய கருத்து சாத்தியமில்லை.
உ. இராசாமணி, மானாமதுரை.

ஒன்றுபட வேண்டும்
காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில மதச்சார்பற்ற கட்சிகள் மாநிலவாரியான, கொள்கைவாரியான பிரச்னைகளில் உடன்பாடு கொண்டு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் கொள்கைப் பிடிவாதங்களை, உயர்வான ஜனநாயக குறிக்கோளுக்கு ஏற்றபடி தளர்த்திக் கொண்டு ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையைப் பிடிக்க முடியும். தற்போதைய மதமாத சக்தியை வீழ்த்த இதுபோன்ற யுக்திகளை எடுப்பதே விவேகமான செயலாகும்.
அ. அப்துல் ரஹீம், அழகன்குளம்.

பெரியண்ணன் குணம்!
காரத் கூறியிருப்பது தற்பொழுது சாத்தியமல்ல. அவருடைய கட்சிக்குள்ளேயே இந்திய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதில் முரண்பாடுள்ளது. முதலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் பெரியண்ணன் குணத்தைக் கைவிட வேண்டும். மற்ற கட்சிகளுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். 
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

காழ்ப்புணர்ச்சி!
சிறிதளவும் கொள்கை ரீதியில் ஒத்துப்போகாத தேசிய எதிர்க்கட்சிகளால் ஒன்றுமே செய்ய இயலாத நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. நிலையான ஆட்சியையும், ஊழலற்ற ஆட்சியையும் மோடியால் தர முடிகிறது என்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இதுபோன்ற அறைகூவல்கள். பாஜகவுக்கு மதச்சாயம் பூசுவதே தவறு.
சி. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

சுயநலம்
சுயநலத்தோடும், தங்கள் கட்சிக்கு என்ன கிடைக்கும் என்ற நிலைப்பாட்டுடனும் இருக்கும் அகில இந்திய கட்சிகள் இணைவது சாத்தியமில்லை. முலாயம், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத், மாயாவாதி, மம்தா போன்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பது சாத்தியமே இல்லை.
மீரா ராஜன், சென்னை.

வளர்ச்சிக்கு வழியாகாது
மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். மக்கள் நலன் நாடுவதில் பாஜகவை முந்துவதுதான் சரியான பாதையாக அமையுமே அல்லாமல், வீழ்த்த நினைப்பது வளர்ச்சிக்கு வழியாகாது. கெடுபவர்கள் இன்னும் கெட்டுப் போவதற்குத்தான் இடதுசாரித் தலைமை சிந்திக்கிறது போலும்.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

அஸ்திரம் எடுபடுமா?
மதச்சார்பற்ற கட்சிகள் எவை? இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது மதச்சார்பின்மையா? இன்னமும் மதச்சார்பு என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்து பாஜகவை வீழ்த்த முயல்வது எடுபடுமா எனத் தெரியவில்லை.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com