ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறைக்கும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை சாத்தியமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில..

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறைக்கும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை சாத்தியமா?'

தேர்வு முறை நல்லது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை கண்டிப்பாக சாத்தியமே. அரசுப் பணியாளர்கள் தேர்வு, நீட் தேர்வு போன்று ஏராளமான தேர்வு வந்துவிட்ட நிலையில், நீதித் துறையிலும் தேர்வு முறையை அறிமுகப்படுத்தலாம். மேலும், எல்லா துறைகளிலும் தேர்வு எழுதினால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடிகிறது. ஆனால் நீதிபதிக்கான தனித்துவம் கொண்ட தேர்வு என்பதைக் கொண்டு வருவது நல்லது.
ஜெ.கஜேந்திரன், மணிமங்கலம்.

சாத்தியமே
இந்திய நீதிப் பணி என்ற தேர்வு அவசியமான ஒன்றே. தற்போது நடைபெறும் நீட் தேர்வு போல இருத்தல் மிக நல்லது. அது சாத்தியமே.
சி.ஸ்டீபன்ராஜ், பொம்மிடி.

ஏட்டறிவு போதாது

இந்திய நீதிப் பணி முறை தேவையற்றது. நீதித் துறை முழுக்க முழுக்க அனுபவத்தால் செயல்படுவது. பட்டறிவு மிகவும் அவசியம். ஏட்டறிவு மட்டும் போதாது. பல சிக்கல்களையும், நுணுக்கங்களையும் குறித்த ஆழ்ந்த புலமை கொண்ட தொழிலாகும். முறைகேடு, லஞ்சம், ஊழல் போன்றவை இன்று நீதித் துறையிலும் புகுந்துள்ளது சாபக்கேடு.
பைரவி, புதுச்சேரி.

அனுபவம் பெற்றவர்களே...
பல வழக்குகளை சந்தித்து, வாதாடி அனுபவம் பெற்றவர்களே நீதிபதிகளாக வர வேண்டும். வெறுமனே 'நீதிப் பணி' தேர்வை மட்டும் எழுதி வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு வந்தால் நீதி பரிபாலனத்தை எப்படி எதிர்பார்க்க இயலும்? வாதங்களை அறிந்து கொள்ளும் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் வழங்கப்படும் நீதி மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையினை அளிக்கும்.
ஆறு. கணேசன், திருச்செந்தூர்.

நீதி தாமதமாகாது...
மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை இன்றைய நிலவரப்படி தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் ஏராளம். நீதிமன்றங்களில் போதுமான அளவில் நீதிபதிகள் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறையை உருவாக்கினால் நீதிபதிகளை அதிக அளவில் பணியமர்த்தலாம். மக்களுக்கு நீதி தாமதிக்காமல் கிடைக்கும்.
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தேவையற்றது 
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு எழுதி அரசு வேலை பெறுவதைப் போன்றதல்ல நீதிபதியின் கடமை. நன்றாகச் சட்டப் புலமை பெற்று, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் வக்கீல் தொழில் செய்து, அதில் சிறந்து விளங்கும் தன்னலமற்றவரே நீதிபதி பதவி பெறத் தகுதியுடையவர் ஆவார். எனவே, நீதிப் பணி என்ற தேர்வு மூலம் நீதிபதியை நியமனம் செய்வது, அந்தப் பதவியின் புனிதத்தன்மைக்கு ஏற்புடையதல்ல. இந்திய நீதிப் பணி முறை தேவையற்றது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மாண்பு குறையக் கூடாது
மக்களாட்சி மகத்துவத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான நீதித் துறையில் தேர்வு என்பது அத்துறையில் மிகச் சிறந்த வல்லுநர்களின் அனுபவத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். மற்ற துறைகள் போல நீதித் துறை கிடையாது. அதன் மாண்பினைத் தேர்வு என்ற பெயரில் குறைத்துவிடக் கூடாது.
கே.அசோகன், மேட்டுப்பாளையம்.

சிறக்க இயலாது...
நடைமுறை சாத்தியமில்லை. படிப்பு வேறு, தேர்வு வேறு, அனுபவம் வேறு. வெறும் தேர்வுகளால் மட்டும் குடிமைப் பணியில் சிறக்க இயலாது. ஐ.ஏ.எஸ். அதிகாரியானதும் பல்வேறு நிலைகளில், துறைகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில்தான் உயர் பதவிக்கு வருகின்றனர். இந்திய நீதிப் பணி தேர்வு தேவையற்றது.
உ. இராசமாணிக்கம், கடலூர்.
மேம்படுத்தினால் போதும்
நீதித் துறைக்கு இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை தேவையற்றது. நீதித் துறையினர், நீதி சார்ந்த கல்வியையும் அனுபவத்தையும் மேம்படுத்திக் கொண்டாலே போதுமானது.
எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

இதயம் போன்றது!
இந்திய நீதிப் பணி தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையது அல்ல. ஆட்சித் துறையும் காவல் துறையும் ஒரு நாட்டின் நல்ல நிர்வாகத்துக்குத் துணை புரியும் இரு கண்கள் போன்றவை. ஆனால் நீதித் துறை நாட்டின் இதயம் போன்றது. தவறு செய்யும் யாரையும் விசாரித்து அறத்தை நிலைநாட்டும் இந்திய நீதித் துறைக்குத் தேர்வு முறை அவசியமில்லை. பணிமூப்பு, நேர்மை இவற்றின் அடிப்படையிலேயே நீதித் துறை செயல்படுவதே சிறப்பாகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

என்ன தயக்கம்?
நிர்வாகத் துறை இந்தியா முழுமைக்கும் தகுதியான நபர்கள் வெளிப்படையான தேர்வு மூலம், மாநில பேதமின்றி, மொழி பேதமின்றித் தேர்வு செய்யப்பட்டு, அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறதோ, அவ்வாறே இந்திய நீதி நிர்வாகமும் செயல்பட எவ்விதத் தடையும் இல்லை. வெளிப்படையான தேர்வு மூலம், திறமை வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து நீதி பரிபாலனம் செய்வதில் என்ன தயக்கம்?
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

நம்பகத்தன்மை அதிகரிக்கும்
இந்திய நீதிப் பணி என்னும் தேர்வு முறை சாத்தியமானதுதான். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் ஒன்றாக நீதித் துறையும் உள்ளதை கவனத்தில் கொண்டால், இந்தக் கோரிக்கை நியாயமானதே என்பது விளங்கும். நீதிக்கான இறுதிப் புகலிடமாக விளங்கும் நீதித் துறைப் பணிக்கு, நேர்மையான தேர்வு தேவைதான். இதனால் நீதித் துறையின் நம்பகத்தன்மை இன்னும் அதிகரிக்கும்.
ச.சுப்புரத்தினம், மயிலாடுதுறை.

காலத்தின் கட்டாயம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றுக்குத் தேர்வு எழுதி அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருவதால், சிறந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியாளர்களாகவும் காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றி வரும் பலரை நாம் காண முடிகிறது. சிறந்த நீதிபதிகள் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

சாத்தியமே
தேர்வு நடைமுறை சாத்தியமே. அவசியமானதும் கூட. மத்திய அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வு முறை என்றாகிவிட்ட பிறகு இத்துறைக்கும் தேர்வின் மூலம் பணி நியமனம் அரசுக்கு சுமையல்ல. தேர்வில் தேர்ச்சி என்பதுடன், அனுபவம், பிற சிறப்புத் தகுதிகள் இவைகளைக் கருத்தில் கொண்டு பணி நியமனம் செய்யலாம்.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

வெளிப்படைத்தன்மை வேண்டும்
தேர்வு முறையை நடைமுறைப்படுத்தலாம். ஏற்கெனவே சில கீழமை நீதித் துறைப் பணிகளுக்குத் தேர்வு முறை உள்ளதாகத் தெரிகிறது. அதனை உயர்நிலை அளவுக்கும் அறிமுகம் செய்யலாம். பணியமர்த்தல், பணி மாற்றம், பதவி உயர்வு போன்றவை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தலாம். இவை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம்.
கே.வி.விஜயலக்ஷ்மி, சென்னை.

பல பயன்கள்!
இந்திய நீதிப் பணித் தேர்வு முறை தொடங்கினால், அந்தத் தேர்வுக்குத் தயார் செய்ய பல பயிற்சி மையங்கள் தேவைப்படும். அந்தப் பயிற்சி மையங்களில் வழக்குரைஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்றோர் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் நீதித் துறையில் ஈடுபட வருவோரின் தகுதியும் திறனும் மேம்படும். எனவே இந்திய நீதிப் பணி தேர்வு முறை என்பது பல வகைகளில் பயன் தரக் கூடிய ஒன்றே.
கே.சிவராம், பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com