'தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கப் போதுமானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கப் போதுமானதா?

போதுமானதே
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதாகும். கூடுதல் சட்டங்கள் மூலம் மேலும் அதிகாரத்தைச் சேர்ப்போமானால், அது அதிகார துஷ்பிரயோகத்திற்கும் ஊழல், லஞ்ச லாவண்யங்களுக்கும் வழிகோலக்கூடும்.
எம்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

பாதுகாப்பு இல்லை
தற்போதுள்ள சட்ட விதிமுறைகள் நிச்சயம் நுகர்வோர் நலனுக்குப் பாதுகாப்பானது அல்ல. முதலில், நுகர்வோர் நலன் குறித்த சட்ட விதிமுறைகள் பரவலான அளவில் மக்களைச் சென்றடைய வேண்டும். விதி மீறல்களால் நுகர்வோர் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. சட்ட விதிமுறைகள் அறிந்தவர்களே, பெரிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவது குதிரைக் கொம்பாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மக்கள் அணுகும் விதத்தில் தேவை. திரையரங்குகள், மோட்டல்கள், பெரிய 'மால்'களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. விதிமீறல்கள் அப்பட்டமாகத் தெரிந்தும், நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படவில்லை. விரைவான விசாரணை, விரைவான தீர்ப்பு வழங்கத் தற்போதைய விதிமுறைகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் தேவை.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

நுகர்வோர் மன்றங்கள் தேவை
நுகர்வோர் நலன்களுக்கு நடைமுறையில் சட்டங்கள், நுகர்வோர் நீதிமன்றம் உள்ளன என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, நுகர்வோர் நலன் காக்க, சட்ட விதிமுறைகளை எளிமையாக்கி, நுகர்வோர் மன்றங்களை வட்டம்தோறும் துவக்க வேண்டும்.
கு. செந்தில்குமார், வலங்கைமான்.

சில திருத்தங்கள் தேவை
தற்போது நடைமுறையில் உள்ள நுகர்வோர் சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதே. குறை சொல்வதற்கில்லை. சில திருத்தங்கள் செய்தே பின்பற்றலாம். 
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

ஏட்டில் மறைந்த சட்டங்கள்
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க முத்தான சட்டங்கள் நாட்டில் எத்தனையோ உள்ளன. ஆனால் அவை அனைத்தும் காட்டில் பதுங்கிய புலியாய் ஏட்டில் மறைந்து கிடக்கின்றன. ஏட்டை விட்டு வெளியேறி நாட்டில் நடை போடாமல் முடங்கிக் கிடக்கின்றன. எழுத்தளவில் உள்ள சட்ட விதிமுறைகள் 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வரவில்லை. நூறு சதவீதம் நடைமுறைக்கு வந்தால் தற்போது இயற்றப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளே நுகர்வோரைப் பாதுகாக்கப் போதுமானதாகும்.
பெ. நடேசன், எருமப்பட்டி.

விழிப்புணர்வு வேண்டும்
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதில் போதுமான பயன்களைத் தருவதாக இல்லை. சில போலியான பொருட்களும், விளம்பரங்களின் கவர்ச்சியால் அதனை வாங்குகின்ற நுகர்வோருக்குப் பெரிய நஷ்டமே ஏற்படுகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

காலத்துக்கேற்ற மாற்றங்கள்
ஆண்டுக்கு ஆண்டு சேவைகளின் தன்மை, நுகர்வோர், சேவை அளிப்போர் ஆகியவை மாறி வருகின்றனர். தற்போதுள்ள சட்ட விதிமுறைகளின் கீழ் தெளிவின்மையால், நுகர்வோருக்கு பயனளிக்க கால தாமதமும் ஏற்படுகின்றன. மின்னணு முறையிலும், டிஜிட்டல் வடிவிலும் புதிய சேவைகள் வழங்கப்படுவதால், புதிய சட்ட விதிகள் அதற்கேற்றவாறு இயற்ற வேண்டும். எனவே, தற்போது நாட்டில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதில்லை.
டி.ஆர். ராசேந்திரன், 
திருநாகேஸ்வரம்.

போதுமானதில்லை
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை. நுகர்வோர் விழிப்புணர்வு சமீப காலமாகத்தான் ஓரளவேனும் கவனத்திற்கு வந்துள்ளது.
ப. தாணப்பன், 
தச்சநல்லூர்.

எளிமையான நடைமுறைகள்
நுகர்வோர் நலனைக் காக்கும் சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன. ஆனால் நமது நலன்களுக்குப் பாதகமான செயல்பாடுகள் நடக்கும்போது அவற்றைக் குறித்த புகார்களை உரிய இடங்களில் தாக்கல் செய்து, அந்தப் புகார்களின் நிலை என்னவென்பதைக் கண்காணித்து, நமது குறைகளுக்குத் தீர்வு தேடிக் கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலானவர்களுக்கு இதுபோன்ற சட்ட விவகாரங்களை எப்படி அணுகுவது என்பது போன்ற அடிப்படை விழிப்புணர்வு இருப்பதில்லை. மேலும், தினசரி வாழ்க்கையில் சிக்கித் தவிப்போருக்கு சட்ட நடவடிக்கைகளை எடுக்க நேரம் இருப்பதில்லை. நுகர்வோர் பிரச்னைகள் குறித்துப் பொதுவான விழிப்புணர்வு தேவை. ஆனால் அன்றாட வாழ்க்கையில் நமது உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து சிந்திக்க நேரமில்லாமல், ஓடிக் கொண்டிருக்கிறோம். நுகர்வோர் நலன் பாதுகாப்பைப் பொருத்தவரையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது, மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான விதிமுறைகளை மிக மிக எளிதாக இருக்கும்படி செய்தால், நுகர்வோரின் உண்மையான புகார்கள் உடனடியாக பரிசீலனைக்கு வந்து பரிகாரங்கள் கிடைக்கும்.
கே.வி.விஜி, 
சென்னை.

சோம்பல் இல்லாமல்...
போதிய நுகர்வோர் நலச் சட்டங்கள் உள்ளன. நுகர்வோர் சோம்பல் இல்லாமல், விழிப்புணர்வோடு நீதிமன்றங்களை நாட வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.
மு.அ.ஆ. செல்வராசு, 
வல்லம்.

சட்டம் மட்டும் போதாது
தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதே. அத்தியாவசிய சட்டங்கள் பற்றிய விவரங்களை முதலில் அறிந்திருக்க வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு இல்லாதபோது எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் பலனில்லை, பயனில்லை. துணிவு இல்லாத நுகர்வோர் இருக்கும் வரை சட்டங்களால் எதுவும் செய்ய இயலாது.
சி.காந்திமதிநாதன், 
கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com