'கல்வியை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதற்கு மாணவர்களுக்கு மன ரீதியிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'கல்வியை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதற்கு மாணவர்களுக்கு மன ரீதியிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியா?

சுமையைக் குறைக்கவும்
மாணவர்களுக்கு மன ரீதியான பயிற்சி தேவையில்லை. புத்தகச் சுமையைக் குறைத்து, பள்ளி செல்வதற்குரிய போக்குவரத்தை மேம்படுத்தி, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழியிலேயே எல்லாப் பாடங்களையும் கற்பித்து, நீதி போதனைகள் வகுப்புகளை நடத்தி, விளையாடுவதற்குப் பள்ளியில் போதிய நேரத்தை ஒதுக்கி பயிற்சியளித்தாலே போதும். மாணவர்கள் கல்வியை மகிழ்ச்சிகரமாக அனுபவிப்பார்கள்.
டி.கே. கங்காராம், கோயம்புத்தூர்.

மனவளப் பயிற்சி
கல்வி கற்றல் துன்பமாகத் தோன்றக் காரணமே, அவர்களது அறியாமை, அலட்சியம் மற்றும் தற்காலச் சூழ்நிலை போன்றவை காரணம். கல்விக் கூடங்களை வெறுக்கும் மாணவர்களுக்கு, கிரகிக்கும் திறன், நினைவாற்றல், கற்றவற்றை வெளிப்படுத்தும் வல்லமை போன்றவை பெருக, மனத்தை வளப்படுத்தும் பயிற்சி முறை அவசியம் தேவையாகும்.
த. நாகராஜன், சிவகாசி.

இணக்கம் தேவை
கல்வியை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற மாணவர்களுக்கு மனரீதியான பயிற்சி அவசியமில்லை. பள்ளியில் கற்பித்தல் நேரம், புத்தகச் சுமை, வீட்டுப் பாடச் சுமை, இவைகளைக் குறைத்தாலே போதுமானது. விரும்பும் பாடத்தை மட்டும் கற்க மாணவர்களுக்குச் சுதந்திரம், ஆசிரியர்-மாணவர்களிடையே இதமான இணக்கம் இருந்தால் கல்வி கற்றல் மகிழ்ச்சிகரமான சூழலாக அமையும்.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

அன்புடன்...
கல்வியை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதற்கு மனரீதியிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியானதே. வழக்கமான பாடங்களுடன், ஒழுக்கம், பண்பாடு, அறநெறி, மானுட நேயம் இவையெல்லாம் அன்புடன் போதிக்கப்பட வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

அறிவு புகட்ட...
ஒரு தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது வகுப்பறைகளாக இருப்பதால், மாணவர்கள் கல்வி பயிற்றுவிக்கும் முறை மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது. பயிற்று முறை என்பது வெறும் பயிற்று மொழியும் பாடத் திட்டங்கள் மட்டுமல்ல. மாணவர்களை எவ்வாறு நடத்துகிறோம், பாடங்களைக் கற்றே ஆக வேண்டும் என்ற நோக்குடன் பாடங்கள் நடத்தப்படுகின்றனவா, அல்லது அவர்களுக்கு அறிவைப் புகட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவா என்பது முக்கியம். புற அழுத்தங்கள் அதிகமாகிவிட்ட இக்காலகட்டத்தில், வழக்கமான பாடத் திட்டங்களுடன் மன ரீதியிலான பயிற்சிகளை அளிப்பது இன்றைய சமூகத்தின் முக்கியத் தேவையாகவே உள்ளது.
கே.வி.விஜயலக்ஷ்மி, சென்னை.

மகிழ்வூட்டும் புத்தகங்கள்
நான்கு சுவர்களுக்குள் இருந்து பெறும் வகுப்பறைக் கல்வி மகிழ்வூட்ட வகுப்பறையின் உள்கட்டமைப்பும், கற்பிக்கப்படும் பாடங்கள், படிக்கும் புத்தகங்கள் மகிழ்வூட்டும் விதமாக அமைதல் வேண்டும். சில ஆசிரியர்கள் வகுப்பறையைப் புலிக்குகையாக மாற்றுவதால்தான் சில மாணவர்கள் கல்வி மீது எரிச்சலும் கோபமும் கொள்கின்றனர். மாணவர்களுக்கு மன ரீதியிலான பயிற்சி அளிக்கப்படுமெனில் கல்வி மகிழ்வு தரும் அனுபவமாகும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தவிப்பு
கல்வி கற்றல் மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற மன ரீதியான பயிற்சி அளிக்க வேண்டும் என்பது சரியான கருத்தே. மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், மேல் படிப்பிற்காக கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்விக்கு மாறும்போது, பாடங்களின் சுமை கண்டு தவிக்கிறார்கள்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

நல்வழி காட்ட...
மாணவர்களுக்கு மன ரீதியிலான பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கருத்து மிக மிகச் சரியானனதே. வீட்டுச் சூழல், வகுப்பறைச் சூழல் நன்றாக அமைந்திருந்தால் மட்டுமே மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்பர். ஆசிரியர் பட்ட வகுப்புகளில் 'வழிகாட்டுதலும் அறிவுரை பகர்தலும்' என்ற பாடம்-தேர்வு உண்டு. அந்தப் பாடத்தை நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து, அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்தி, நல்வழி காட்டுவர்.
ம.நா. சந்தானகிருஷ்ணன், 
மிட்டா மண்டகப்பட்டு

மனவளப் பயிற்சி
இக்காலத்தில் பல மாணவர்கள் கணினி, கைபேசி முதல், பல வகையான ஊடகங்களிலும் மூழ்கி, கல்வியில் நாட்டம் குறைந்து கற்பனை உலகில் வலம் வருகின்றனர்.இவர்கள் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை குறைந்தும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உலாவுவது உண்மையே. இவ்விளைஞர்களின் நலன் காக்க மனவளக் கலைப் பயிற்சி கொடுத்து, ஆழ்மனதில் நம்பிக்கையூட்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

பெரும் ஆசைகள்...
குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் அனுபவம், வசதி இல்லாத நிலையில், மருத்துவர், பொறியாளர், மாவட்ட ஆட்சியர் போன்ற பொறுப்புகள் குறித்து மாணவர்களின் இளம் வயதில் பெரும் ஆசைகளில் திக்குமுக்காட வைப்பது கூடாது. படிக்கும் ஆற்றல், சூழல் போன்றவற்றின் பின்னணியில் மாணவர்களைப் படிக்கும்படி அறிவுரை கூற வேண்டும். எந்த வேலையானாலும் சமூகத்தில் சேவை மனப்பான்மையுடன் நேர்மையுடன் இருக்க மன ரீதியிலான போதனையைப் பள்ளி, கல்லூரிகள் அளித்தால், அதுவே அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும்.
டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

அவசியம்தான்
பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய மாணவர்கள் மதிப்பெண் இயந்திரமாக மாறுகிறார்கள். பள்ளி வயது அனுபவங்கள் அவர்கள் வாழ்க்கையை இனிப்பாக்குவதற்கு பதில், கசப்பாக்குகிறது. எனவே மன ரீதியான பயிற்சி, கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவசியம்தான்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அனுபவ ரீதியாக...
கல்வியை மகிழ்ச்சிகரமா அனுபவமாக மாற்றுவதற்கு பதிலாக, பணம் சம்பாதிப்பதற்கான கருவியாக மாற்றியுள்ளோம். இதனால் மாணவர்களுக்குத் தன்னலம் மிகுந்து, மன ரீதியாக கெட்டிருக்கும் சூழல் ஏற்பட்டு, அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்சூழலிலிருந்து அவர்கள் விடுவித்து, அவர்களாக முன்வந்து அனுபவ ரீதியாக, மகிழ்ச்சியுடன் உணர்ந்து கற்கும் வகையில், பாட முறைகளையும், பயிற்சி முறைகளையும் அறிமுகப்படுத்தி கற்பிக்க வேண்டும்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, 
வரட்டணப்பள்ளி

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
தற்காலத்தில், பெரும்பாலான கல்வி முறையில் மதிப்பெண்களுக்கு கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. இது பெற்றோரிடமும், மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ, மாணவர்கள்தான். பல தரப்புகளிலிருந்து எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது, அவற்றை எதிர்கொள்வது, சமாளிப்பது என்பது போன்றது இளம் பிஞ்சுகளுக்கு இயலாதது ஆகிறது. இதுவே இன்றைய இன்றைய மாணவர்களின் அழுத்தத்துக்குக் காரணம். இந்த நிலையை மாற்ற, மாணவர்களுக்கு மன ரீதியான பயிற்சி அளிப்பதைவிட பாடத் திட்டம், பயிற்றுவிக்கும் முறை, பரீட்சை முறைகளை மாற்றினாலே போதும். அதைத் தவிர, மாறி வரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப சிறார்களைத் தயார்படுத்த மனவளக் கலையைப் பயிற்றுவிக்க வேண்டும்.
அ.கி.மூர்த்தி, திருப்பனந்தாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com