'கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் ஆலோசனை ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் ஆலோசனை ஏற்புடையதா?

ஏற்புடையதே
கல்வி மேம்பாட்டுக்காக 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் ஆலோசனை ஏற்புடையதே. ஆழ்ந்து சிந்தித்து மிகுந்த அக்கறையோடு பயில வேண்டும் என்ற நிலை வந்துவிடும். மேலும் கவனச்சிதறல் ஏற்படாதிருக்க இது வழி வகை செய்கிறது.
சு.இலக்குமணசுவாமி, மதுரை.

மேம்பாடு அடையும்
கல்வி மேம்பாட்டிற்கான திட்டமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது ஏற்கத்தக்கது. தேர்வு என்று சொன்னால்தான் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை படிக்கும் மனநிலை உண்டாகிறது. பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தேர்வுக்குத் தயார் படுத்திட எண்ணுகிறார்கள். இந்த ஆண்டில் தமிழக அரசு 11-ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. கல்வி மேம்பாடடையும் என்பதில் ஏதொரு ஐயமுமில்லை. 
இராம.கோவிந்தன், தென்னிலை. 

பால பருவம்
கல்வியை மேம்படுத்துவதற்கு 5 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு என்பது நடைமுறை சாத்தியமல்ல. பால பருவம் அது. ஆனால் எட்டாம் வகுப்பிற்கு அவசியமே. 60 ஆண்டுகளுக்கு முன்னர் எட்டாம் வகுப்பில் ஈ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு உயர் தொடக்கப்பள்ளியின் இறுதியாண்டில் தேர்வு பெற்ற பின்னரே உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க முடியும் என்ற நடைமுறை இருந்தது. 
த.நாகராஜன், சிவகாசி. 

பயனளிக்காது
கல்வியை மேம்படுத்த 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை ஏற்புடையதன்று. ஆசிரியர்களின் பயிற்று முறையை மாற்றாமல் பொதுத் தேர்வு முறை எவ்விதத்திலும் பயனளிக்காது. 
எழில்சோம. பொன்னுசாமி, ஆவடி. 

மனத்தூண்டல் ஏற்படும்
பொதுத்தேர்வு முறையை அமல் படுத்தினால் மாணவர்களின் கற்றல் உணர்வு மேம்படும். கல்வி நாட்டமும், கற்கும் திறனும் அதிகரிக்கும். பொதுத் தேர்வில் வெற்றி பெறாவிடில் பின்தங்கி விடுவோம் என்ற மனத் தூண்டலால் தங்களை நன்கு தயாரித்துக் கொள்வார்கள் என்பது உளவியல் உண்மையாகும். ஆனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வளர் இளம் பருவத்துச் சிறார்களுக்குத் தேர்வு முறை பொருந்தாது. தேவையில்லை. 
மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

மன உளைச்சல்
கல்வியை மேம்படுத்த பல வழிகள் இருப்பினும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை சாத்தியமில்லை. மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள். தற்போதுள்ள தொகுத்தறிதல், திறனறிதல் போன்றவைகளில் நாட்டம் குறைய வழி வகுக்கும். 
சி.ஸ்டீபன்ராஜ், பொம்மிடி. 

அநியாயம்
பயிற்சி என்றால் அதற்கு தேர்வும் வேண்டும் என்பது நியாயம்தான். பத்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு கட்டாயம் என்பதால் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு எழுதும் பழக்கம் வேண்டுமே என்று 8 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஆதரிக்கலாம். ஆனால் 5- ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது அநியாயம். 
கலைப்பித்தன், கடலூர். 

அவசியமாகும்
மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு என ஒன்று வைக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்ற நிபந்தனை இருந்தால்தான் பாடப் புத்தகங்களை அனுதினமும் அக்கறையோடு படிக்கின்ற ஆர்வமும், தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலும் மனதில் ஏற்படும். இல்லையெனில் ஒப்புக்குத்தான் வேண்டா வெறுப்பாக பள்ளிக்குச் சென்று வருவார்கள். பாடம் படிக்க மாட்டார்கள். எனவே கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவது அவசியமாகும். 
என்.பி.எஸ்.மணியன், மணவாளநகர். 

தேர்வை ஏற்போம்
இன்று பள்ளியில் ஆசிரியர்களின் கண்டிப்பு, ஒழுக்கம், விதிமுறைகள் பற்றி கண்டிப்புடன் போதிக்கக் கூடாது என்று சட்டம். இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சடங்கு, சம்பிரதாயம் போல் வருகை தருகின்றனர். செழுமையான வாசிப்புத் திறன், எழுத்துத் திறன், பேச்சுத் திறன் வேண்டுமென்றால் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஏற்போம். இல்லையேல் சான்றிதழ் பெறலாம். தரமோ, தகுதியோ இருக்காது. 
இ.ராஜு நரசிம்மன், சென்னை.

தகுதி, திறன் வெளிப்படும்
கல்வி மேம்பாடு வேண்டுமெனில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை மிகமிக அவசியமானதாகும். தேர்வு முறை அமல் படுத்தினால்தான் மாணவர்களின் திறன், தகுதி, தரம் ஆகியவை தெரிய வரும். சிலர் பின் தங்குவது இயல்பே. ஆனால் அவர்களுக்கும் இடமளிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தி சிறப்புப் பயிற்சி அளித்து இக்குறைகளை நீக்கலாம். உலக அளவில் தொழில் நுட்பமும் திறன் மேம்பாடும் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில், பல நிலைகளிலும் பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தி கல்வி மேம்பாடு காண முயற்சி தேவை.
வி.எஸ்.கணேசன், சென்னை.

அச்சுறுத்தக் கூடாது
வெளிநாடுகளில் 7 வயதில்தான் பள்ளி செல்லத் தொடங்குகின்றனர். நம் நாட்டில் தற்காலத்தில் 2 வயது முடிந்ததும் விளையாட்டுப் பள்ளி, பின்னர் 3 வயது முதல் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி எனத் தொடர்வதால் முதிர்ச்சி, மனப்பக்குவம் அடையுமுன்பே கல்வி திணிக்கப்படுகின்றது. பொதுத் தேர்வினை அறிவித்து, சில ஆண்டுகள் கழித்து செயல்படுத்த வேண்டும். தேர்வே வேண்டாம் என்ற அறிஞர்கள் உண்டு. பொதுத்தேர்வு என்று கூறி சிறுவர்களை அச்சுறுத்தக்கூடாது. 
ம.நா.சந்தானகிருஷ்ணன், 
மிட்டாமண்டகப்பட்டு. 

பயமின்றி கற்க...
ஐந்தாம் வகுப்பு, 8- ஆம் வகுப்பு என்பது விளையாட்டுடன் கூடிய கல்வி கற்று முன்னேறக் கூடிய பசுமரத்தாணிப் பருவம். இதில் பொதுத்தேர்வு மூலம் 'தேர்ச்சி' என்ற பயத்தைப் புகுத்தி மாணவர்கள் படிப்பின் மீது ஈடுபாடும், முக்கியமும் இல்லாமல் திசை மாறி விடக்கூடும். பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் ஒருங்கிணைந்து மாணவர்கள் பயமின்றி கல்வி கற்க முயற்சி செய்திட வேண்டும். 
வி.சரவணன், சிவகங்கை. 

இடைநிற்றல் அதிகரிக்கும்
கல்வியை மேம்படுத்துதல் எனக்கூறி 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்தி வடிகட்ட நினைத்தால் படிப்பை இடையில் விட்டுச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகவே வாய்ப்பு உள்ளது. இதனால் அனைவர்க்கும் கல்வி என்பது வெற்றுச் சொல்லாகிப் போகும். எனவே பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த நினைக்கும் ஆலோசனையை கைவிடுவதே மேல். 
எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கம். 

கூடுதல் சுமை
ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கொண்டு வர சிந்திப்பது சற்றும் தேவையில்லாததே ஆகும். ஏனெனில் மேற்கூறிய இரு வகுப்புகள் உள்பட பத்தாம் வகுப்பு வரையிலுமே கூட கற்றல் திறன்களை - பேசுதல்-படித்தல்-எழுதுதல்-அறிதல் ஆகியவற்றை வளர்க்கின்ற காலம். இக்காலகட்டத்தில் பொதுத் தேர்வினை ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்துகின்ற யோசனை அவ்வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் சுமையையும் பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். 
வெ.பாண்டுரங்கன், திருநின்றவூர். 

ஏற்புடையதே
ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள பாடத்தை படிக்கத் திணறுவதை பார்க்கும்போது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் ஏற்படுகிறது. கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றால் பொதுத்தேர்வு முறையை அமல் படுத்தும் ஆலோசனை ஏற்புடையதே.
என்.வி.சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர். 

வன்முறைத் திணிப்பு
கல்வியின் முக்கியக் கூறான கற்றலும் கற்பித்தலும் முழுமையடைய ஆசிரியர் -மாணவர் உறவே முக்கியக் காரணமாக உள்ளது. ஆசிரியர் -மாணவர் உறவு மேம்பட நம்முடைய அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். கற்பித்தலில் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்ற மனநிலையிலும் மாற்றம் வேண்டும். இந்நிலையில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தினால் மட்டுமே கல்வியை மேம்படுத்திவிட முடியாது. மேலும் ஆரம்பக்கல்வியில் பொதுத்தேர்வு முறை என்பது குழந்தைகளின் மீது திணிக்கப்படும் வன்முறையே ஆகும். 
மா.பால்ராஜ், தேவதானப்பட்டி. 

சரியான பாடத் திட்டம்
தேர்வே இல்லாமல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களைக் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும் ஒவ்வொரு வகுப்பிலும் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வை நடத்தி, உரிய மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை மட்டுமே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும். இந்த முறையைச் சரியான முறையில் கடைப்பிடித்தால், ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கல்வியை மேம்படுத்துவதற்கு வேண்டிய சரியான பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். 
வை.பாவாடை, புதுச்சேரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com