மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஏற்புடையதா?'

ஏற்புடையதே
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஏற்புடையதே. இதனால் பெரிய அளவில் பணம் மிச்சமாகும். அந்தப் பணத்தை மக்கள்நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். அரசியல் கட்சிகளும் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தேர்தலை சந்தித்து விட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தலாம். எனினும், ஒரே நேரத்தில் தேர்தல் முடிந்த பிறகு சில சட்டப்பேரவைகளில் சில காரணங்களால் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் அங்கு தேர்தலை நடத்த வேண்டுமே. இது குறித்தும் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.
என்.எஸ்.முத்துகிருஷ்ண ராஜா, 
ராஜபாளையம்.

செலவு மிச்சம்
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை வரவேற்கலாம். இந்த முறையால், தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தலாம். கால விரயத்தையும், வீணான சிரமங்களையும் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் சுயநலம் கருதாமல் நாட்டுநலன் கருதி இவ்வித முறையை வரவேற்று, ஒத்துழைப்புத் தருவதே சிறந்த நடைமுறையாகும். 
வை.பாவாடை, புதுச்சேரி.

பதவிக்காலம் மாறும்
மத்திய அரசின் பதவிக்காலமும் மாநிலங்களில் ஆளும் அரசுகளின் பதவிக்காலமும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்தால்தான் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பதவிக்காலம் முழுமையும் பதவியில் இருக்க வேண்டும். மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவடைவது நிச்சயம் மாறுபட்டிருக்கும். இப்படிப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியல்ல.
கி.பாஷ்யம், சலுப்பை.

அமைதியான ஆட்சி
இக்கருத்து ஏற்புடையதே. இதனால் தேர்தல் செலவினங்கள் நிச்சயம் குறையும். மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சிந்தித்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு நாடு முழுதும் அமைதியான ஆட்சி அமையும். கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். வாக்காளர்களுக்கும் இரண்டு முறை வாக்களிக்கும் வேலை இல்லை. அரசியல் கட்சிகளுக்கும் செலவு குறையும். தேர்தல் பிரசாரத்தின் வேகம் கட்டுப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் என்ற இம்முடிவு வரவேற்கத்தக்கது.
என்.சண்முகம், திருவண்ணாமலை.

தேவையற்றது
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது. அதிகமான வாக்காளர்களைக் கொண்டது நம் நாடு. மாநிலங்களுக்குள்ளேயே சில நேரங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், தேர்தல் சமயங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தேர்தல் நடக்கும்பொழுது பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேவையற்றது.
த.யாபேத்தாசன், பேய்க்குளம்.

குழப்பம் வராது
ஏற்புடையதுதான். பணச் செலவு, காவல்துறையின் உழைப்பு, பொதுமக்களின் நேரம் எல்லாம் மிச்சம். தேர்தல் முடிந்த பின், ஐந்து ஆண்டுகளுக்கு பொதுமக்கள் தங்கள் வேலையைப் பார்க்கலாம். மக்கள் இப்போதெல்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். மத்தியில் யார் இருக்க வேண்டும், மாநிலத்தில் யார் இருக்க வேண்டும், உள்ளாட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்தே வாக்களிக்கிறார்கள். எனவே, குழப்பம் எதுவும் வராது.
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

சர்வாதிகாரம்
இது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. தேர்தல் செலவைக் குறைக்கலாம் என்பதைத் தவிர வேறு பயன் ஏதுமில்லை. மேலும், இந்தியா போன்று நூறு சதம் கல்வி பெறாத ஒரு நாட்டில் வாக்காளர்கள் இரண்டு முறை வாக்களிப்பதுதான் சரி. நாடாளுமன்றத் தலைமை, சட்டமன்றத் தலைமை என இரு மாறுபட்ட காட்சிகள் இந்தியாவில் உள்ளன. மாநில சட்டமன்றங்கள் திடீரென்று கலைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியிருக்கும். சர்வாதிகார ஆட்சிமுறையை நோக்கி நகரும் விதமாகத் தான் இது அமையும்.
ஆறு.கணேசன், திருச்செந்தூர்.

சிக்கல்கள் அதிகம்
தேசம் முழுவதும் சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வரவேற்கக்கூடியதே. ஆனால், கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். பாதுகாப்புப் பணிக்காக காவலர்களும், வாக்குச்சாவடி பணியாளர்களும் கூடுதலாகத் தேவைப்படுவார்கள். மேலும், இந்த முடிவுக்கு அனைத்து மாநிலங்களும் சம்மதிக்க வேண்டும். இவ்வாறு பல சிக்கல்கள் இருந்தாலும், நடைமுறைப்படுத்திவிட்டால் சிக்கல்கள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

மத்தியில் கூட்டாட்சி
அக்காலத்தில் தேசிய அளவில் இரண்டு கட்சிகள் தான் இருந்தன. நாளடைவில், மாநிலப் பிரச்னைகளை முன்வைத்து மாநிலக் கட்சிகள் உருவாயின. மத்திய அரசு, மாநிலங்களின் உள் விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுவதால்தான் பிரச்னை உண்டாகிறது. எந்த மாநிலத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடியும் முன்பே பதவி விலக மாட்டார்கள். மத்திய அரசிடம் மாநில சட்டமன்றங்களைக் கலைக்கும் அதிகாரம் இருப்பதால் தான் இத்தகைய பிரச்னைகள் எழுகின்றன. மத்தியில் கூட்டாட்சி உள்ள நடைமுறையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது.
டி.வி.சங்கரன், தருமபுரி.

நிம்மதி கிடைக்கும்
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே சிறந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் பணி போன்ற பெரும் சுமைகள் குறையும். அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இருமுறை தேர்தல் நடப்பதால் மக்களுக்கு வரக்கூடிய தேர்தல் தலைவலியிலிருந்து விடுதலை கிடைக்கும். முக்கியமாக, தொலைக்காட்சி ஊடகங்களின் கருத்துக்கணிப்பு போட்டா போட்டிகளில் இருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும். எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஏற்புடையதே!
கே.கோவிந்தராஜன், அல்லூர்.

ஜனநாயக விரோதம்
இது ஏற்புடையது அல்ல. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப மாறி மாறி வாக்களிக்க வேண்டிய நிலை இந்தியாவில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகளின் பதவிக்காலம் ஒரே நேரத்தில் முடிவடைவதில்லை. மேலும், நாடு முழுதும் நடக்கும் தேர்தல் மோசடிகளைக் கண்டறிவதும் மிகவும் சிரமம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதும் ஜனநாயக விரோத செயலாகும். எனவே, வேண்டாம் இந்த புது முயற்சி.
என். காளிதாஸ், சிதம்பரம்.

சட்டத்திருத்தம்
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது முற்றிலும் சரியே. 1967 வரை அப்படித்தான் இருந்தது. தற்போது மக்களும் முன்பை விட படிப்பறிவு, பட்டறிவு காரணமாக அரசியல் முதிர்ச்சி அடைந்து விட்டனர். இது தொடர்பாக எதிர்ப்பாளர்கள் கூறும் காரணங்களைக் கேட்டு தேவையான சட்டத்திருத்தம் செய்து கொள்வதில் தவறில்லை. மக்களின் வரிப்பணத்தையும் வீணடிக்கத் தேவையில்லை. அரசு அலுவலர்கள் குறைந்து வரும் சூழலில் அவர்களது வழக்கமான பணியும், நீதிமன்றத்தின் அலுவலும் பாதிப்படையாது. எனவே, இம்முடிவு சரியே.
வரதன், திருவாரூர்.

சாத்தியமல்ல
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியமல்ல. உதாரணமாக, ஐந்து ஆண்டுகளில் பாதியைக் கூட நிறைவு செய்யாத மாநிலங்கள் சட்டப்பேரவைகளைக் கலைக்க சம்மதிக்காது. மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? எல்லாவற்றையும் விட நாடாளுமன்றத்திலேயே யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், யாருமே ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவைகளின் நிலை என்ன?
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com