பொதுமக்களையும் வணிகர்களையும் பாதிக்கக்கூடிய கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக்கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பொதுமக்களையும் வணிகர்களையும் பாதிக்கக்கூடிய கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக்கூடாது என்கிற கருத்து சரியா?'

தேவையற்றவை
அரசியல் கட்சிகள் எந்தவொரு போராட்டம் நடத்தினாலும் மக்களை பாதிக்காமல் நடத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் உழைக்கக் கூடிய கட்டாயத்தில் இருப்பவர்களை கடையடைப்பு மிகவும் பாதிக்கும். அரசியல் கட்சிகளின் அறிவிப்பால் பலர் வேலை இழந்து ஊதியமும் இழக்கின்றனர். மிகவும் வேதனை தரும் விஷயம் இது. எனவே கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்றவை நமது நாட்டுக்குத் தேவையற்றவை. இதற்குப் பதிலாக, அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம், மெளன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றைச் செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

பாதிப்பு
இந்தக் கருத்து மிகவும் சரி. அடாவடித்தனமாக வணிகர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் வசூல் ùய்யும் ஒரு சில அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு கடையடைப்பு நடத்துகின்றனர். இது பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போன்றது. இதுபோன்ற செயல்களுக்கு இனியாவது அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக் கூடாது எனும் கருத்து சரியே.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

அன்பான அழைப்பு
பொதுமக்களையும், வணிகர்களையும் பாதிக்கக்கூடிய கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக் கூடாது என்ற கருத்து சரியல்ல. அரசியல் கட்சிகள் அழைப்பு விடுப்பது ஒரு பொது தர்மம்தான். இந்த அன்பான அழைப்பைக் கொச்சைப்படுத்துவது சரியல்ல. வணிகர்கள் இரண்டு, மூன்று பிரிவாக இல்லாமல் ஒன்றிணைந்து ஒரே நாளில் கடையடைப்பு நடத்தினால் பொதுமக்களையும், வணிகர்களையும் பாதிக்காது. இதில் கிடைக்கும் வெற்றி பொது வெற்றிதான்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

இடையூறு கூடாது
முன்பெல்லாம் முக்கியமான பிரச்னைக்காக மட்டுமே எப்போதாவது கடையடைப்பு நடைபெற்றது. அதற்கு பொதுமக்களின் ஆதரவும் இருந்தது. தற்போது எதற்கெடுத்தாலும் கடையடைப்பு என்று ஆகிவிட்டது. அரசியல் கட்சிகளும் கடையடைப்பு நடத்துகின்றன. வணிகர்களும் நடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் இத்தகைய கடையடைப்புகளை நடத்தக் கூடாது. அரசியல் கட்சிகளால் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது.
அ.கருப்பையா, பொன்னமராவதி.

கவலை இல்லை
சில அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி என்று தாங்களே ஒரு தேதியை நிர்ணயித்து பொதுமக்களின் இயல்பு வாழ்வை நிலைகுலைய வைக்கிறார்கள். இதனால் தனி மனிதர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது. தினசரி வருவாயை நம்பியிருக்கும் மக்களின் குடும்பங்களைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே கவலை இல்லை. இதனால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக் கூடாது.
ந.சந்திரமெளலி, ஊத்துக்குளி.

விருப்பம் இல்லை
கடையடைப்பு, பேருந்து மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நேரடியாக மக்களைப் பாதிக்கும் செயல்கள். இவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பால், காய்கறி, மருந்துப் பொருட்கள் கிடைக்காது மக்கள் படும் பாட்டை அரசியல்வாதிகள் உணர வேண்டும். கடையடைப்பு மற்றும் பேருந்து மறியல் போன்ற போராட்டங்களை மக்கள் விரும்புவதில்லை. அச்சுறுத்தல் போன்ற காரணங்களால்தான் கடையடைப்புகள் வெற்றி பெறுகின்றன. நியாயமான போராட்டங்கள் தேவைதான். ஆனால், மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் போராட்டங்கள் தேவையில்லை.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

ஜனநாயக வழிமுறை
இந்தக் கருத்து சரியல்ல. பிரச்னைகளின் வீச்சு அறிந்து, அரசின் கவனத்தை அதன் பால் திருப்பி, தீர்வு காண்பதற்காகத் தான் அரசியல் கட்சிகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றன. கடையடைப்பினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது உண்மைதான். அப்போதுதான் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தீர்வு காண முனையும். கடையடைப்பு என்பது ஜனநாயக முறையிலான போராட்ட வழிமுறைதான். அதில் தவறொன்றுமில்லை.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

மிகவும் கொடுமை
மிகவும் சரியான கருத்து. எதற்கு எடுத்தாலும் போராட்டம், கடை அடைப்பு. அதிலும் வணிகர் சங்கங்கள் தனித்தனியே பிளவுபட்டு ஒரு சாரார் ஒரு நாளிலும், மற்றொரு சாரார் மற்றொரு நாளிலும் கடையடைப்பு செய்வது மிகவும் கொடுமையானது. கடையடைப்பு பொதுமக்களை மட்டுமல்ல, சிறு வணிகர்களின் வாழ்வாரத்தையும் பாதிக்கிறது. கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக் கூடாது. ஒரு நாள் முழுதும் கடைகள் மூடப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமத்தை அரசு உணர வேண்டும்.
என்.சண்முகம், திருவண்ணாமலை.

சொல்ல முடியாத வேதனை
விளம்பரத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் மட்டுமே கடையடைப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கடையடைப்பிலும் மக்களும், வணிகர்களும் பல துன்பங்களையும் இழப்புகளையும் அனுபவிக்கின்றனர். கடையடைப்புகளில் குடும்பத்தோடு சிக்கிக் கொள்ளும் வெளியூர் பயணிகள் உணவு இல்லாமல், குழந்தைகளோடு படும் வேதனை சொல்ல முடியாதது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு நொடி சிந்தித்தாலே கடையடைப்பு குறித்து யோசிக்கவே மாட்டார்கள்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

கடைசி ஆயுதம்
இது சரியல்ல. மக்களாட்சி நடைமுறையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கநஎல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிமையுண்டு. நியாயமான கோரிக்கைகளுக்கு மக்களின், வணிகர்களின் ஆதரவும் அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம் பிரச்னைகளின் முக்கியத்துவம் உணர்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் கடைசி ஆயுதமாகவே, இதனை அரசியல் கட்சிகள் பயன்படுத்த வேண்டும்.
வ.நவநீதகிருஷ்ணன், நெ.மேட்டுக்குடி.

கருப்புக்கொடி போதும்
எந்தப் போராட்டமும் அகிம்சை வழியில் நடைபெற வேண்டும். எடுத்ததற்கெல்லாம் கடையடைப்பு என்றால் வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். மக்கள் நலனுக்கான போராட்டம் என்றால் அது எந்த வகையிலும் மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. வணிகர்கள் தங்கள் கடைகளில் கருப்புக்கொடி மட்டும் ஏற்றினால் போதும். அதுவே எதிர்ப்புக்கான அடையாளமாகக் கருதப்பட வேண்டும். எனவே கடையடைப்பிற்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுப்பது கூடாது.
ப.தானப்பன், தச்சநல்லூர்.

ஏற்கத்தக்கதல்ல
அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கும் கடையடைப்புகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே. பொதுமக்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கூறும் அரசியல் கட்சிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடையடைப்புக்கு அழைப்பு விடுப்பது ஏற்கத்தக்கல்ல. மேலும் தாமாக முன்வந்து போராடுவோரைத் தவிர பொதுமக்களையும், வணிகர்களையும் கடையடைப்புக்கு கட்டாயப்படுத்துவது சரியல்ல.
எம்.ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூர்பாளையம்.

அச்சம்தான் காரணம்
முற்றிலும் சரியே. கடையடைப்பு போன்ற போராட்டங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. வணிகர்களுக்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது. அரசியல் கட்சிகளும், வணிக அமைப்புகளும் தனித்தனியே வெவ்வேறு நாள்களில் கடையடைப்புக்கு அழைப்பு விடுப்பது மக்கள் நலனுக்கு எதிரானது ஆகும். கட்சிகள் கடையடைப்பு என்று அறிவித்த நாளில் கடையைத் திறந்து வைத்தால் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து உயிருக்கே ஆபத்து வருமோ என்ற அச்சத்தில்தான் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுகின்றன.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com