மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலும் தடை செய்வது சாத்தியமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலும் தடை செய்வது சாத்தியமா?' 


கடும் தண்டனை
மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலும் தடை செய்தது சாத்தியமே. பிளாஸ்டிக் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்கிற தனது முடிவிலிருந்து அரசு மாறிவிடக் கூடாது. அரசின் சட்டத்தை மீறுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். போதைப் பொருள்களைத் தயாரித்தால் எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறதோ, அவ்வாறே பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும் தண்டனை வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கானவை. எனவே தடை தேவை. அது சாத்தியமே. 
டி.ஆர்.ராஜேந்திரன், திருநாகேஸ்வரம்.

விளம்பரம் செய்வோம்
சாத்தியமே. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, பற்பல நோய்களுக்கும் காரணமாகும் மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டைத் நிச்சயம் தடை செய்ய வேண்டும். பொதுமக்களிடையேயும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை. குறும்படம், குறுந்தகடு, குறுந்தகவல் மூலம் விளம்பரம் செய்யலாம். பிளாஸ்டிக்கின் தீங்கு குறித்துப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைத்து போதனை செய்யலாம். இம்முடிவை நடைமுறைப்படுத்த நேர்மையான அதிகாரிகள் தேவை. மக்காத பிளாஸ்டிக்கை தடை செய்வோம்; நிம்மதியாக வாழ்வோம்.
ஏ.டி.ஸுந்தரம், சென்னிமலை.

சாத்தியமல்ல
இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வது என்பது சாத்தியமற்றது. வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் வரை அனைத்துப் பொருள்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. காரணம், குறைந்த விலை மற்றும் பல வண்ணங்களில், பல வடிவமைப்புகளில் கிடைப்பதே. அதனால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலவகை பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்தால் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.
ப.சுவாமிநாதன், சென்னை.

நிதர்சனம்
சாத்தியமே. எவ்வித பாரபட்சமுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை மூடி முத்திரையிட வேண்டும். அப்படி சட்டத்தை மீறி யாரேனும் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்து பிடிபட்டால் கடுமையான தண்டனைகளை வழங்கினால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முறையாய், முழுவதுமாய் ஒழித்து விடலாம். அதற்கு முன்பு, லஞ்ச லாவண்யம் இல்லாமல் ஆக்க வேண்டும். அது இருக்கும் வரை பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கைகள் சாத்தியமற்றதாகி விடும் என்பதே நிதர்சனம்.
க.சுல்தான் ஸலாஹுத்தீன், காயல்பட்டினம்.

விழிப்புணர்வு தேவை
மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் தடை தேவையானதுதான். முதலாவதாக தடை செய்வதன் மூலம் மட்டுமே பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும். பைகள் மட்டுமல்லாது அனைத்து வகையான பொருள்களையும் தடை செய்வதே நலம். பைகளும் பாட்டில்களும் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். நாட்டு நலம், சமுதாய நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு நாம் சிலவற்றை பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

வெற்றி நிச்சயம்
சாத்தியமே. பெரும்பாலான பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தே வருகின்றனர். அரசு போதிய கால அவகாசம் அளித்துள்ளதால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே. உதாரணமாக, புகை பிடித்தல் தடை நடவடிக்கை காரணமாக இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று அதிக அளவில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் துணிக்கடைகளில் அதனைத் தடை செய்தாலே பிளாஸ்டிக் தடைக்கு வெற்றி நிச்சயம்.
கோ.ஹரிஹர சுப்பிரமணியன், திருநெல்வேலி.

வரவேற்கத்தக்கது
மக்கள் நீண்ட காலமாக மக்காத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி வந்துள்ளமையால், திடீரென அதை நிறுத்துவது என்பது நடக்காத ஒன்று. எங்கு சென்றாலும் மக்கள் கைவீசிக் கொண்டு, எவ்வளவு பெரிய பொருள் ஆனாலும் அதை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிக் கொண்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது அரசு, மக்காத பிளாஸ்டிக் தயாரிப்புகளைத் தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவது அரசின் கையில் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நம் கையிலும் உள்ளது.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

பேரங்கள் கூடாது
மக்காத பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தடை செய்வது சாத்தியமே. நீலகிரி போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது சாத்தியப்படுத்தும்போது, மற்ற மாநிலங்களில் முடியாதா என்ன? நிச்சயம் முடியும். நிபுணர் குழு கொண்டு ஆராய்ந்து அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடனும், வேறு எந்த விதமான பேரங்களுக்கு இடம் கொடுக்காமலும் இருந்தால் இது நடைமுறையில் சாத்தியமே. தடை வந்தால் எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல சுற்றுச்சூழல் கிடைக்கும்.
கி.சந்தானம், மதுரை.

அரசின் கடமை
மக்காத பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது சாத்தியமே. பிளாஸ்டிக் பொருள்களின் தயாரிப்பைத் தடை செய்தாலே அவற்றின் விற்பனையும், பயன்பாடும் இல்லாமல் போகும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நாட்டின் நலன் கருதியே பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படுகிறது என்ற விழிப்புணர்வு அவர்களிடையே வர வேண்டும். அதற்கான போதிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே உண்டாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

இயற்கை பாதிப்பு
உலோகம் கனமானது; பிளாஸ்டிக் எளிதானது' என்ற பிரசாரத்துடன்தான் பிளாஸ்டிக் பயன்பாடு ஆரம்பித்தது. பின்னர் அது மெல்ல மெல்ல அதிகரித்தது. ஆனால் அதன் மக்காத தன்மையினால் இயற்கைக்கு பாதிப்பு என்பது தெரிய வந்த பின்பு நாம் அதை தடை செய்தே தீர வேண்டும். பிளாஸ்டிக் கண்டுபிடிக்கும் முன் பயன்படுத்திய பொருள்களையே மீண்டும் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பிளாஸ்டிக்கின் பயன்பாடு நிச்சயம் குறையும். இதற்கான முயற்சியை அனைவரும் இன்றே தொடங்கினால் விரைவில் தடை சாத்தியமே!
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

உறுதியான நிலைப்பாடு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வது சாத்தியமே. தீர்க்கமான முடிவும், எடுத்த முடிவில் உறுதியான நிலைப்பாடும், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயகரமான பின்விளைவுகளைப் பற்றி மக்களிடம் விளம்பரங்கள் செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டால், மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முற்றிலும் தடை செய்வது சாத்தியமே.
ஆர்.அகல்யா, சிக்கத்தம்பூர் பாளையம்.

படிப்படியாகக் குறைக்கலாம்
மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்வது சாத்தியமே! பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகள், நோய்கள் பற்றிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் அபாயம் பற்றிய உணர்வைத் தெளிவு படுத்த வேண்டும். படிப்படியாக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட வேண்டும். அத்தியாவசியமான இடங்களில் மட்டுமே பிளாஸ்டிக் பயன்படுத்தலாம். விரைவில் முழுவதுமாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவது மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
எழில்சோம. பொன்னுசாமி, ஆவடி.

பூமியைக் காப்போம்
சாத்தியமான செயல்தான். இதனால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பொறுத்துக் கொள்ள வேண்டும். காகிதப்பை, துணிப்பை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மண்ணில் வாழும் பல்லுயிர்களுக்கும் பிளாஸ்டிக் எதிரியாகவும், நச்சுத்தன்மையை விதைப்பதாகவும் உள்ளது. கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை இறக்குமதி செய்வதையும் தடை செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பூமியைக் காக்க புதுச் சட்டங்கள் தேவைதான்.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com