சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்கிற கருத்து சரியா?'

ஓரளவு உண்மையே
இக்கருத்து ஓரளவு உண்மையே. குற்றச்செயல்கள் பெருகுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றே. சமூக விரோதிகளின் நோக்கம், அரசு நிர்வாகத்தைச் சீர்குலைய வைத்தல், மக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கி ஆதாயம் தேடுதல் ஆகியவையே. இவர்கள் ஒருசிலராகவே இருந்தாலும் இதனால் விளையும் தீமைகள் பயங்கரமாக இருக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது, வழக்கு முடிந்து தண்டனை தருவதில் காலதாமதம் ஆகியவையும் பிற காரணிகள். நல்லவர்கள் வல்லவர்களாக இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.
ச.கந்தசாமி, 
எட்டயபுரம்.

நோக்கம் தவறு
இன்றைய நவீன அறிவியல் வளர்சியின் உச்சம் என்று சமூக வலைதளங்களைக் கூறலாம். ஆனால், சமூக வலைதளங்களை நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் அதில் தவறேதும் இல்லை. ஆனால், நடைமுறை அவ்வாறு இல்லை. எனவே வலைதளங்கள் தவறாகப் பயன்படுவதாலும், வீண் வதந்திகளைப் பரப்புவதாலும் சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பது சரியே. அத்துடன் தனிமனித ஒழுக்கக்கேட்டிற்கும் சமூக வலைதளங்கள் காரணமாக உள்ளன.
கே.வேலுச்சாமி, 
தாராபுரம்.

ஏற்புடையதல்ல
சமூக வலைதளம் நமக்குக் கிடைத்த அறிவியல் கொடையாகும். நிறைய வதந்திகள் வலைதளம் மூலம் பரப்பப்படுவது உண்மையே. ஆனால் வலைதளத்தைப் பயன்படுத்தி குற்றங்கள் குறைந்த அளவில்தான் நடைபெறுகின்றன. தவறு செய்யும் எண்ணம் கொண்டவர்கள் வலைதளம் நடைமுறைக்கு வராத காலத்திலும் குற்றம் செய்து வந்தனர். வலைதளம் மூலம் நடைபெறும் குற்றங்கள் ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்தப்படுகின்றன. எனவே, வலைதளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்ற வாதம் ஏற்புடையதல்ல.
மா.தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

விழிப்புணர்வு
சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் குற்றங்கள் அதிகரிப்பது உண்மைதான். கோயில் வழிபாட்டுக்குச் சென்றவர்களை வடஇந்தியாவிலிருந்து குழந்தைகளை கடத்த வந்திருக்கிறார்கள்' என்று தவறாக செய்தி பரப்பியதால் என்னவெல்லாம் நடந்தன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மை மக்கள் இங்கே பாமரர்களே. ஒரு செய்தி காதில் விழுந்தால் அதை விசாரித்து, ஆராய்ந்து உண்மையை அறியும் எண்ணம் இல்லாதவர்களே இங்கு அதிகம். சமூக வலைதளங்கள்குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும்.
கி.சந்தானம், மதுரை.

கவனம் தேவை
இந்தக் கருத்து மிகவும் தவறானது. சமூக வலைதளங்களை பெரும்பான்மையான மக்கள் பார்ப்பதில்லை. குற்றச் செயல்கள் எப்போதும் நடைபெறுகின்றன. ஊடகங்கள் வாயிலாக யாரும் கெட்டுப் போவதில்லை. சுயமான சிந்தனையும், கட்டுப்பாடும் மானுட நேயமும் இருந்தால் வலைதளங்களால் சமூகத்திற்கு எந்த விதப் பாதிப்பும் வராது. எந்தவொரு செய்தியிலும் உண்மை இருக்கிறதா என நாம்தான் ஆராய வேண்டும். எதிலும் எப்போதும் கவனம் தேவை.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

நிதர்சனம்
சமூக வலைதளம் அறிவியல் வளர்ச்சியின் ஒரு மைல்கல். ஆனாலும்கூட அதனை சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதில் சிந்தனைத் திறனையும் செயல்திறனையும் பாதிக்கும் செய்திகளையே இளைஞர்கள் அதிகம் பார்ப்பதால், சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்ல, சமூக வலைதளங்களால் கலாசார சீரழிவும் ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.
உ.இராசமாணிக்கம், கடலூர்.

தீமையே அதிகம்
இக்கருத்து சரியே. விபத்து, அவசரகால மருத்துவ உதவி போன்றவற்றிற்கு வலைதளத் தொடர்புகள் பயன்படுகின்றன என்றாலும், பொதுவான நோக்கில் அவற்றால் நன்மையை விட தீமையே பெரிதும் விளைகிறது. சில நேரங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி, வன்முறைக்கு வழிகோலுகின்றன. இதனால் சில மனித உயிர்கள் பலியான சம்பவங்களும் சமீபத்தில் அரங்கேறின. சமூக வலைதளங்களுக்குக் கட்டுப்பாடு தேவை!
தமிழ்க்குழவி, நாகர்கோவில்.

தவறான கண்ணோட்டம்
சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால்தான் சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்பது தவறான கண்ணோட்டம். குற்றங்கள் எப்போதும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. பெரிய அளவிலான ஊழல்களையும், பெரிய மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களையும் சமூக வலைதளங்களே உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதனால் குற்றங்களைத் தடுக்கவும் தவறுகளைக் குறைக்கவும் சமூக வலைதளங்கள் உதவியுள்ளன. எனவே, குற்றங்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் என்பது சரியல்ல. 
செ.அ.ராகுல், பாளையங்கோட்டை.

சமூக விரோதிகள்
சமூக வலைதளங்கள் விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளம். சில சமூக விரோதிகள், சமூக வலைதளங்களில் வதந்தியை பரவச் செய்து ஆங்காங்கே கலவரங்கள், வன்முறைகள், உயிர்ப்பலிகள் என சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களால் சில நன்மைகள் இருந்தபோலும் தீமைகளே அதிகம் என்பதால் சமூக வலைதளங்களால் சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்பது முற்றிலும் உண்மையே.
என்.பி.எஸ்.மணியன், மணவாள நகர்.

நம்பக்கூடாது
ஒரு மனிதன் நற்குணங்களின் மொத்த உருவாய் திகழ்வதற்கு பயபக்தி முக்கிய மூலப்பொருளாகும். அந்த பயபக்தி இக்காலத்தில் அரிதாகி போனதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலில் நாம் எதைப் பார்த்தாலும், கேட்டாலும் நம்பும் பழக்கத்தை கைவிடுவோமேயானால் சமூக வலைதளங்களால் ஏற்படும் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும்.
க.சுல்தான் ஸலாஹீத்தீன், 
காயல்பட்டினம்.

எச்சரிக்கை
இந்தக் கருத்து சரியல்ல. சமூக வலைதளங்களில் தாங்கள் செய்யும் தவறுகள் வெளிவந்துவிடுமே என அஞ்சி இப்போது அரசியல்வாதிகளும், பிரபலங்களும், அரசு ஊழியர்களும் பயந்து செயல்படுகின்றனர் என்பதே உண்மை. சமூக வலைதளங்களில் பதியப்படுகின்ற சமூக குற்றச்செயல்களைப் பார்த்து எச்சரிக்கையுடன் செயல்படுபவர்களே அதிகம். சமூக வலைதளங்களால் சமூக குற்றச்செயல்கள் குறைந்து வருகின்றன என்பதே இன்றைய நிலை.
என்.சண்முகம், திருவண்ணாமலை.

தவறான தகவல்
கடந்த காலங்களில் திரைப்படங்கள் சமூகத்தின கெடுத்து வந்தன. பிறகு தொலைக்காட்சி நாடகங்கள். இன்று சமூக வலைதளங்கள் கெடுத்து வருகின்றன. ஓர் ஊருக்குள் யாராவது புதிய நபர் ஒருவர் வந்தால் அவரைப் பற்றி ஏதும் தெரியாமலே தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதன் விளைவாக அந்த நபரை சிலர் சேர்ந்து தாக்குகின்றனர். சில நேரங்களில் உயிர்ப்பலிவரை சென்றுவிடுகிறது. எனவே, சமூக வலைதளங்கள் குற்றச்செயல்களுக்கு காரணமாகி விடுகின்றன என்பது சரியே.
சு.ஆறுமுகம், கழுகுமலை.

முற்றிலும் தவறு
ஒரு சில நிகழ்வுகளால் சமூக வலைதளம் மனிதர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்று கணிப்பது முற்றிலும் தவறு. சமூக வலைதளங்கள் இன்று மிக மிக அரிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன. சிந்தனை வளர்ச்சிக்கும், தெளிவான தேடலுக்கும் இன்று சமூக வலைதளங்கள் துணை நிற்கின்றன. நாம்தான் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு எதிர்மறையான பதிவுகளைப் புறக்கணிக்க வேண்டும். 
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com