'அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிருப்தி காரணமாக, அரசு அதிகாரிகள் தாக்கப்படுவது நியாயமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிருப்தி காரணமாக, அரசு அதிகாரிகள் தாக்கப்படுவது நியாயமா?'

அரசையே நம்பி...
அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி கிராமப் பாமரனுக்கும் தடையின்றிச் சேர்ப்பதுதான் அதிகாரிகளின் பணி. பாமரர்களை அலைக்கழிக்கக் கூடாது. அவர்கள் அரசாங்கத்தையே நம்பியிருக்கின்றனர். பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகையோ அல்லது உரிமையோ, எதுவாகினும் முறையாக அணுகி கோரிக்கை வைப்பதுதான் சரியானது. அதிகாரிகளைத் தாக்குவது, தவறாகப் பேசுவது ஏற்புடையதல்ல.
ஜெ. கஜேந்திரன், மணிமங்கலம்.

வன்முறையின் வெளிப்பாடு
நியாயமே இல்லை. அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மீது புகார் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதை விடுத்து அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுஅராஜகப் போக்கு மட்டுமல்ல, வன்முறையின் வெளிப்பாடு. அதிகார மமதையில் ஆளும் வர்க்கம் இவ்வாறு நடந்து கொள்வது 'தாதா'க்களின் வழிமுறையே.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

பயிற்சி தேவை
சிலர் தமது காரியம் நினைத்தவுடன் கைகூடவில்லையே என ஆதங்கப்படுவது இயற்கையே. அரசின் நடைமுறை, சட்ட திட்டங்களை சுமுகமாக எடுத்துரைக்கும் பக்குவத்தைப் பெற, அதிகாரிகளுக்கு டி. கல்லுப்பட்டி காந்தி கிராமம் போன்ற கிராமிய பயிற்சி நிலையங்களில் காந்திய சிந்தனைகள் அடிப்படையாகக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.
எம். மணி, மதுரை.

சட்டப்பூர்வ வழிமுறைகள்
வன்முறை எந்தக் காலத்திலும் யாருக்குமே நன்மை தராது. அரசு அதிகாரிகளின் வேலையில் ஆட்சியாளர்களுக்குத் திருப்தி இல்லையென்றால் இடமாற்றம் செய்தல், பணியிறக்கம் செய்தல், காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பது, பணி இடைநீக்கம் செய்தல் போன்ற சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றியே நடவடிக்கை இருக்க வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சுய சிந்தனையுடன்...
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தேக்க நிலை உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மக்களின் சேவையில் அரசு அதிகாரிகள் விரைவாகச் செயல்பட வேண்டும். அதிகாரிகள் சுய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். கால தாமதம் பல பிரச்னைகளை உருவாக்குகின்றது. ஆனால் அதிகாரிகள் தாக்கப்படுவது ஏற்க முடியாதது. அரசை இயக்குவது அரசியல்வாதிகளாக இருந்தாலும், முழுமையாக வெற்றி பெறச் செய்வது அதிகாரிகள்தான் என்பதில் ஐயம் இல்லை.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

திசை திருப்பும் முயற்சி
அரசின் திட்டம் செயல்படுத்துவதில் அதிருப்தி காரணமாக அரசு அதிகாரியைத் தாக்க முற்படுவது பிரச்னைய திசை திருப்பும் முயற்சியே. திட்டச் செயல்பாட்டில் உள்ள குறைபாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசு அதிகாரியைத் தாக்கியதுதான் பிரதானமாகப் பேசப்படும். திட்டம் செயல்படுவதில் அதிருப்தி ஏற்பட அதிகாரிகள் மட்டும் காரணமல்ல; அவர்கள் பின்னாலிருந்து ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகளும்தான்.
அ. சம்பத், திருவரங்கம்.

மூளையும் கரங்களும்
அரசு என்றால் அதில் அதிகாரிகளும் அடங்குவர். அரசு மூளை என்றால், அதிகாரிகள் திட்டங்களைச் செயல்படுத்தும் கரங்கள். அரசின் திட்டப்படி செயல்படாத அதிகாரிகளை தண்டனைக்குட்படுத்துவது அரசின் கடமை. ஆனால் அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ அதிகாரிகளைத் தாக்குவது தவறாகும்.
கிழவை சத்யன், நெல்லை.

இழிவான போக்கு
அரசின் திட்டத்தை வேண்டுமென்றே அமல்படுத்தத் தவறும் அதிகாரிகளைத் தாக்குவதில் எவ்வித நியாயமும் கிடையாது. சட்டத்தைத் தானே கையில் எடுத்துக் கொள்ள எவருக்கும் உரிமையில்லை. அரசு அதிகாரிகளைத் தாக்குவது இழிவான போக்கு. பண்பாடற்ற செயல்.
வீ. தர்மதாஸ், 
திருவாரூர்.

மமதையுடன்...
மத வெறித் தாக்குதல், ஒருதலைக் காதல் தாக்குதல், அரசியல் வெறித் தாக்குதல், ஜாதி வெறித் தாக்குதல், கோரிக்கைகளுக்காகப் பொதுச் சொத்து மீது தாக்குதல் என தாக்குதல்கள் அதிகமாகும் காலமாக உள்ளது. அரசு அலுவலர்களில் பலர் ஊதியமும் லஞ்சமும் மட்டுமே குறியாக இருப்பதுடன், மமதையுடனும் உள்ளனர்.
சித்தாய்மூர் இரா. இராசேந்திரன், 
காரைக்கால்.

விரோதிகள் அல்ல
அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிருப்தி காரணமாக அரசு அதிகாரிகள் தாக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் தாமதப்பட்டால், அதிகாரிகளைத் தங்கள் விரோதிகளாக அரசியல்வாதிகள் எண்ணிவிடக் கூடாது. தில்லி தலைமைச் செயலரை ஆளும்கட்சி உறுப்பினர்கள் தாக்கியதாகக் கூறப்படுவது கண்டிக்கத்தக்கது.
கே.வி. விஜயலக்ஷ்மி, சென்னை

தட்டிக் கேட்டால்...
அரசு பல்வேறு திட்டங்களை, நலப் பணிகளைக் கொண்டு வருகிறது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலம் அரசு அதிகாரிகள். இவற்றினை வழங்குவதில் தாமதிக்கும் பட்சத்தில் அதிகாரிகளைத் தட்டிக் கேட்பது என்பது தாக்குதலாகிவிடக் கூடாது. தாக்குதல் முறையல்ல. கண்டிக்கத் தக்கது. தெளிவான விளக்கம் அளிக்க வேண்டியது அதிகாரிகள் கடமையே.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

நாடு தாங்காது!
அதிருப்தி அடைபவர்களெல்லாம் அடிக்க ஆரம்பித்தால் நாடு தாங்காது. தனக்கு கிடைக்க வேண்டிய ஒன்றினைக் கிடைக்கச் செய்யாமையாலும், அல்லது தடுக்கப்படுவதாலுமே அதிருப்தி உண்டாகிறது. அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு, விதிமுறைகளின்படி பணி செய்ய வேண்டியவர்கள். அரசு அதிகாரிகளைத் தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கூத்தப்பாடி மா. பழனி, பென்னாகரம்.

எக்காரணம் கொண்டும்...
ஏதேனும் சில காரணங்களால் அரசுப் பணிகளில் கால தாமதம் ஏற்படலாம். இதற்காக அதிகாரிகளைத் தாக்கப்படுவதை எக்காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள இயலாது.
கே. வேலுச்சாமி, தாராபுரம்

அரசியல் சாசனத்துக்கு சவால்
அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிருப்தி காரணமாக மட்டும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதில்லை. அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியின் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் அதிகாரத்தில் இருப்பவர்களும், ஆளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் கூட எண்ணி விடுகிறார்கள். இதுதான் இன்றைய இந்தியாவில் பல முறைகேடுகளுக்கும் கூட காரணமாக இருக்கிறது. சமூகத்தில் அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக கடமைகளும் வரையறைகளும் உள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தரப்பில் சுணக்கம் இருப்பதாக எழும் புகார் வரக்கூடியதுதான். ஆனால் அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எல்லா நிகழ்வுகளுக்கும் அதிகாரிகள் மீது உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை. அதிகாரிகள் துரோகம் செய்ததாகக் கருதி தாக்கப்படுவது சரியல்ல. அதிருப்தி அடையும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அத்துமீறுவதும், தங்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளதாக நினைத்துவிடுவதும் அரசியல் சாசனத்துக்கே விடுக்கும் சவாலாகும். 
ஏ. கிருஷ்ணமூர்த்தி, 
கும்பகோணம்.

அநாகரிகம்
அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வின்றி முனைப்போடு உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். தவறினால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும், பணி இடை நீக்கம் போன்ற தண்டனையையும் சந்திக்க நேரிடும் என்ற தார்மிக அச்சம் அதிகாரிகளுக்குள் எப்போதும் இருக்க வேண்டும். தாமதமே ஊழலுக்கு வழிகோலும். அதிருப்தி காரணமாக அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினரால் தாக்கப்படுவது அநாகரிகமாகும்.
என்.பி.எஸ். மணியன், 
மணவாள நகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com