'அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சியினரின் மூன்றாவது அணி வியூகம் மக்கள் வரவேற்பைப் பெறுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சியினரின் மூன்றாவது அணி வியூகம் மக்கள் வரவேற்பைப் பெறுமா?

பதவி மோகம்
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இல்லாத மூன்றாவது அணி என்பது புதுக்கனவு, பதவி மோகம். குற்றச்சாட்டுகளே இல்லாத பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராகத் தோன்றும் மூன்றாவது அணி மக்களின் வரவேற்பைப் பெறாமல் போகும். இளைஞர்களின் எழுச்சியுடன், மோடியின் ஊழலற்ற அரசை மக்கள் மீண்டும் அமைப்பார்கள்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்

செல்வாக்கு குறையவில்லை
இன்றைய நிலையில் மூன்றாவது அணியை பலர் எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் அல்லாத அணி மக்களிடையே செல்வாக்கு பெற வாய்ப்பு இல்லை. மோடியின் செல்வாக்கு தற்சமயம் குறைய வாய்ப்பு இல்லை. எனவே பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி உருவாக்கம் பெற்றால், நிச்சயம் மக்கள் வரவேற்பார்கள்.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி

ஆற்றலுள்ள தலைவர்கள் இல்லை
மூன்றாவது அணி தேவையற்றது. மூன்றாவது அணி என்பது மக்களிடையே வரவேற்பைப் பெறாது என்பதே உண்மையாகும். பாரதிய ஜனதாவிற்கும், காங்கிரஸுக்கும்தான் போட்டியே தவிர, பிற இயக்கங்கள் வலுப்பெறவில்லை. மூன்றாவது அணியைத் திறம்பட அமைக்கும் ஆற்றலுள்ள தலைவர்கள் தற்போது இல்லை. 
குலசை கேம்சன், திருச்செந்தூர்

வழக்கமானது
இது தேர்தலின்போது வரும் வழக்கமாக வருவது. மக்கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மூன்றாவது அணி எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறது என்பது தேர்தல் சமயத்தில்தான் கூற முடியும்.
எம்.சம்பத்குமார், திண்டல்

ஒருமித்த கருத்தில்லை
ஏற்கெனவே தமிழ்நாட்டில் அமைந்த மூன்றாவது அணி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள்தான் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அவற்றுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம். காங்கிரஸ் பலவீனமான நிலையில் இருக்கும் சூழலில் மூன்றாம் அணிதான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில்லை. மேலும், பாஜக ஆட்சியொன்றும் மோசமான நிலையில் இல்லை. எனவே தேசி அளவில் மக்களவைத் தேர்தலில் மூன்றாம் அணி மக்களின் வரவேற்பைப் பெற வாய்ப்பில்லை.
மா. தங்கமாரியப்பன்,கோவில்பட்டி.

தியாக உணர்வுடன்...
சரியாக வியூகம் வகுத்து ஊழலில் சிக்காத தலைவர்கள் வழி நடத்த, மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்ற தியாக உணர்வுடன் மூன்றாவது அணி ஒற்றுமையாகச் செயல்பட்டால் தேர்தலில் மக்களின் வரவேற்பைப் பெறும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி

சந்தேகமே!
தாங்கள் குவித்த கோடானு கோடிகளை வைத்து இலவசங்கள், பிரியாணி இவைகளைக் கொண்டு பலரை மயக்கி வைத்திருப்போர் முன், மூன்றாவது அணி வியூகம் வரவேற்பைப் பெறுவது சந்தேகமே.
கோ. ராஜேஷ் கோபால்,அரவங்காடு

எடுபடாது!
அடுத்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி வியூகம் மக்கள் வரவேற்பை நிச்சயம் பெறாது. தமிழகத்தில் 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஐம்பதாண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. மீண்டும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் தலை தூக்க முடியவில்லை. இதே நிலைதான் தேசிய அளவிலும் நநடக்கும். மக்களைத் தேர்தல் என்றால் இரு தேசிய கட்சிகளைத்தான் மக்கள் நம்புகிறார்கள். இவற்றில் ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் மூன்றாவது வியூகம் என்பது மக்கள் மத்தியில் எடுபடாது.
இரா. துரைமுருகன்,தியாகதுருகம்

செயல்பாட்டைப் பொருத்து...
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் அமைக்கப் போகும் மூன்றாவது அணி வியூகம் மக்களின் செல்வாக்கைப் பெறுவது அவர்களின் செயல்பாட்டைப் பொருத்தது. கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கும் இவர்கள் எந்த ஒரு பொதுக் குறிக்கோளை வைத்து இணையப் போகிறார்கள் என்பது முக்கியம். எந்தெந்தக் கட்சிகளுக்கு மக்களிடையே எவ்வளவு வலுவிருக்கிறது என்பதைப் பொருத்தும் உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதோடு நில்லாமல், அதற்கு மாற்றாக வலுவான கருத்தை விதைக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை

மூன்றாம் அணி அவலம்
மூன்றாவது அணி வியூகம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கே மக்களின் வரவேற்பைப் பெறாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு விரும்பவே மாட்டார்கள்.1996-இல் மூன்றாம் அணியின் ஆட்சி அவலத்தை நாடு கண்ட முன்னுதாரணம் உண்டு. தற்போது மூன்றாம் அணியில் தேசிய அளவில் புகழ் பெற்ற தலைவர் வேறு எவரும் இல்லையே. மூன்றாம் அணியின் வியூகம் பாஜகவுக்கு நன்மையே.
இ. ராஜு நரசிம்மன்,சென்னை

புறக்கணிக்கப்படும்
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினரின் மூன்றாவது அணி வியூகம் மக்களால் நிச்சயம் புறக்கணிக்கப்படும். பாரதிய ஜனதா கட்சி அல்லாத இதர எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அணியாக நின்றால் மட்டுமே பாஜகவை வெல்ல முடியும்.
அ. சம்பத், சின்னசேலம்

கைப்பொம்மை பிரதமர்கள்!
மக்களின் வரவேற்பைப் பெற வாய்ப்பே இல்லை. கடந்த கால மூன்றாவது அணி அனுபவத்தில் ஏற்பட்ட நிலையற்ற அரசுகளின் செயல்படாத தன்மையே இதற்கு முக்கியக் காரணமாகும். புதுப் புது பிரதமர்கள் மூன்றாவது அணி மூலம் பதவியேற்று, கைப்பொம்மைகளாக செயல்பட்ட விதத்தை மக்கள் மறக்கவில்லை. பிகாரும் உத்தர பிரதேசமும் மூன்றாவது அணி எண்ணத்துக்கு சமாதி கட்டிவிட்டது. இன்றைய அரசியல் சூழலில் மோடியின் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு, அண்மைக் கால தேர்தல் முடிவுகள் சான்றாகின்றன.
சீ. காந்திமதிநாதன்,கோவில்பட்டி

பதவியே நோக்கம்!
சந்தர்ப்பவாத கூட்டணியே மூன்றாம் அணி. வெற்றி பெற்று, தங்களுக்குள்ளே கால நிர்ணயம் செய்து ஒருவர் மாறி ஒருவர் பதவியில் அமர்வது மட்டுமே நோக்கமாக இருக்கும். இவர்களின் பதவி ஆசை முடிவதற்குள் மக்களவைக் காலம் முடிந்துவிடும். இதில் எப்படி நாட்டின் வளர்ச்சி, மக்களின் மீது அக்கறை வரும்?
வி. சரவணன்,சிவசங்கை

கரைந்தே போகும்!
பல்வேறு இஸங்கள் இந்தியர்களை மூளைச் சலவை செய்து நெறி பிறழ வைத்துக் கொண்டிருக்கின்றன. தீவிரவாதமும், வன்முறையும் தான் நாட்டில் கோலோச்சி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்புடைய சித்தாந்த உணர்வோடு இங்கு இரண்டு கட்சிகள் மட்டும்தான் நிலைத்திட வேண்டுமேயன்றி, மூன்றாவது அணியின் தோற்றம் காற்றில் கலையும் மேகங்களாகக் கரைந்தேதான் போகும்.
என்.பி.எஸ். மணியன்,மணவாள நகர்

நிலைப்பதில்லை
வரவேற்பைப் பெறுவது கடினமே என கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கின்றன. மூன்றாவது அணி என ஒன்று அமைந்து அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் ஓராண்டுகூட நிலைப்பதில்லை. மக்களும் மூன்றாவது அணியை ஏற்றுக் கொள்வதில்லை.
ப. சுவாமிநாதன், சென்னை

வாடிக்கையானது
தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி பேச்சு வாடிக்கையானதுதான். இந்த அணி மாநிலக் கட்சிகளின் சங்கமம். இந்த அணியில் இருக்கும் பெரும்பாலானோர் பிரதமர் கனவில் இருப்பவர்கள்தான்.
த. யாபேத் தாசன், பேய்க்குளம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com