காவிரி பிரச்னை உள்ளிட்ட போராட்டங்களில் தீய சக்திகள் ஊடுருவல் இருக்கிறது என்ற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காவிரி பிரச்னை உள்ளிட்ட போராட்டங்களில் தீய சக்திகள் ஊடுருவல் இருக்கிறது என்ற கருத்து சரியா?

போராட்டத்தை மழுங்கடிக்க...
தீய சக்தி என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது. காவிரி பிரச்னைக்குத் தீவிரமாகப் போராடினால் அதை மழுங்கடிக்க தீய சக்தி புகுந்துவிட்டது என்பர். பெருங்கூட்டத்தில் சில தவறுகளும் நடக்கலாம். முழுவதும் உண்மை என்றோ முழுவதும் பொய் என்றோ கூற இயலாது.
சித்தாய்மூர் இரா. இராசேந்திரன், 
மேல ஓடுதுறை

ஊடுருவல் இல்லை
காவிரி நீர் உரிமைப் போராட்டத்தில் சிறிது கூட தமிழ்நாட்டில் தீய சக்திகளின் ஊடுருவல் இல்லை. உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு குமரி முதல் சென்னை வரை காவிரித் தாயின் உரிமை கோரி ஓங்கி ஒலித்த ஒட்டுமொத்த உணர்வைக் காண முடிந்தது. ஆனால் வேறு சில சமூக, சாதீய அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் தீய சக்தகளின் ஊடுருவலைக் காண முடிகிறது.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்

எதிர்சக்தி
அனைத்துப் போராட்டங்களிலும் நல்ல சக்திகள் இருப்பது போலவே, சில தீய சக்திகள் இருக்கத்தான் செய்யும். நூறு சதவீதம் நல்ல சக்தி மட்டுமே இருக்கும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. எப்பொழுது ஒரு கருத்திற்கு எதிர் கருத்து இருக்கிறதோ, அப்போதே எதிர் சக்தி உருவாகத்தான் செய்யும். காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடக மாநிலத்தின் எதிர்மறை அரசியலுக்கு ஆதரவாக சில தீய சக்திகள் இருக்கத்தான் செய்யும். இதைத் தவிர, காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டில் போராடும் சக்திகளுக்கு நல்ல பெயர் கிடைக்காத வகையில் எதிர்ப்பு வேலைகளை சில சக்திகள் செய்திருக்கக் கூடும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்

நாட்டு நலனுக்கு எதிராக...
மக்கள் நலன் மற்றும் நாட்டின் நலனுக்கு எதிராக இருப்பவர்களையே தீய சக்தி என்று சொல்லலாம். சட்டம், ஒழுங்கைக் காக்கும் காவலர்களையே தாக்க முயற்சிப்பது தீயச் செயல்தான். அந்நிய சக்திகளிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டு, நாட்டின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுவோர், மீடியா வெளிச்சம் தன் மீது படுவதற்காக முறையற்ற போராட்டங்களை நடத்தும் இவர்களைத் தீய சக்திகள் என்று சொல்வது சரிதான்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

சமூக விரோத சக்திகள்
எந்தப் போராட்டம் எனினும் தீய சக்திகள் அல்லது சமூக விரோதிகள் ஊடுருவல் இருக்கத்தான் செய்யும். ஜல்லிக்கட்டு போராட்டம் இறுதிக் கட்டத்தை நோக்கிப் போகையில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் மூலம் எதிர்ப்புக் குரல் வெளியாவது சகஜமே. தீய சக்திகளை இனங்கண்டு அப்புறப்படுத்த திறமையான காவல் துறையினரால் மட்டுமே முடியும்.
கி.சந்தானம், மதுரை

வாழ்வியல் போராட்டம்
கருத்து ஏற்புடையது அல்ல. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் காவிரி போராட்டம். சிலர் தங்கள் நலனுக்கான போராட்டமாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருசில சம்பவங்களை வைத்து தீய சக்திகள் ஊடுருவல் என்று முடிவு செய்வது ஏற்புடையது அல்ல.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி

வாய்ப்பில்லை
கருத்து தவறு. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள சில அரசியல் கட்சிகள் ஓரிரு அசம்பாவிதங்களை ஏற்படுத்தியிருக்கலாமே தவிர, தீய சக்திகள் ஊடுருவ வாய்ப்பே இல்லை. உணர்வுபூர்வமான காவிரிப் பிரச்னையில போராட்ட நடைமுறைகள் வெவ்வேறாக இருக்கலாமே தவிர, தீய சக்திகள் இருக்க வாய்ப்பில்லை.
உ. இராஜமாணிக்கம், கடலூர்

சில விஷமிகள்!
எந்த ஒரு போராட்டம் நடைபெற்றாலும், அதைக் கெடுக்க விஷமிகள் கூட்டத்தில் கலகம் செய்வது சகஜமே. காவிரி பிரச்னை போன்ற போராட்டங்களில் தீய சக்திகளின் ஊடுருவல் இருக்கிறது என்னும் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு

தம்மை மறந்த தீவிரம்!
காவிரியில் நமக்குள்ள உரிமையினை மீட்கின்ற சாத்விகப் போராட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக களம் இறங்குவோர், ஆர்வக் கோளாறினால் அதீதமாகத் தம்மை மறந்து தீவிரமாக எழுச்சி கொள்கின்றாரேயன்றி, அவர்களை மீறி தீய சக்திகள் ஊடுருவல் அறவே இல்லை.
எம்.பி.எஸ்.மணியன், மணவாளநகர்

ஊரறிந்த விஷயம்
காவிரி பிரச்னை உள்ளிட்ட போராட்டடங்களில் தீய சக்திகள் ஊடுருவல் இருப்பது உண்மை. ஊரறிந்த விஷயம். ஆரவாரம் அரசியல் இல்லாமல் அமைதி வழியில் நடக்கும் அறப் போராட்டங்களில் திடீரெனச் சிறுசிறு வன்முறைகள் வெடிக்கிறதென்றால், அங்கே அரசியல்வாதிகள் மற்றும் தீய சக்திகள் ஊடுருவல், தலையீடு புகுந்துள்ளமையே காரணம்.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி


அசம்பாவிதங்கள் இல்லை
இதுநாள் வரை நடந்த காவிரிப் பிரச்னை தொடர்பான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி, ஊர்வலங்கள், உண்ணாவிரதம் முதலானவற்றில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி நடந்து முடிந்தது.
வி.சரவணன், சிவகங்கை

கெட்ட பெயர் ஏற்படுத்த...
காவிரி பிரச்னை, ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு போன்ற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களில் அரசியல் கட்சிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் ஊடுருவல் இருக்கிறது என்ற கருத்து சரியானது. உதாரணமாக, சேப்பாக்கத்தில் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் காவலரைத் 
தாக்கினர். 
எஸ். நாகராஜன், அஸ்தினாபுரம்

போராட்டம் என்ற பெயரில்
போராட்டம் என்ற பெயரில் கைகளில் மிக நீண்ட கொடிக்கம்புகளோடு ஒன்று கூடுபவர்கள் சாலை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். நெரிசலில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் நிலையோ பரிதாபம். போராட்டக்காரர்களில் யாராவது ஒருவர் சிறிது காயமடைந்தாலும்கூட, அருகிலுள்ள அரசு மருத்துவமனையை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். பெரும்பாலும் மது அருந்தாமல் யாரும் பங்கேற்பதில்லை என்ற சூழலில் போராட்டங்களில் தீய சக்திகள் ஊடுருவல் உள்ளது என்பது சரியே!
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி

ஒதுக்கிவிட முடியாது
காவிரி பிரச்னை உள்ளிட்ட போராட்டங்களில் தீய சக்திகள் ஊடுருவல் இருக்கிறது என்பதை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. களப்போராட்டங்களில் இருப்பவர்கள் இலட்சிய நோக்குடன் போராடுபவர்களாக இருந்தால், கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடன் போராட்டத்தை முடித்துக் கொள்வர். சில சமயங்களில் வன்முறைக்கு வித்திடும் சில தீய சக்திகள் ஊடுருவியிருக்கலாம். எனவே போராட்டக் களங்களில் உளவுத் துறையும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக எடுக்க வேண்டியது அவசியம்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

தன்னெழுச்சியின்போது...
காவிரி பிரச்னை உள்ளிட்ட போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக மக்கள் பொதுவெளிக்கு வந்து போராடும் பல்வேறு போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை. எனவே, இவ்விஷயத்தில் ஊடுருவல் இருக்கிறது என்ற கருத்தைப் புறந்தள்ளிப் பார்க்க முடியவில்லை.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை


ஒருமைப்பாட்டிற்கு எதிராக...
தீய சக்திகள் ஊடுருவல் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல போராட்டங்களிலும் தீய சக்திகளின் ஊடுருவல் பலமாகவே வெளிப்படுகிறது. ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆயினும் அவை தேசிய சிந்தனைக்கும் தேச வளர்ச்சிக்கும் இடையூறு விளைவிப்பதாக இருத்தல் கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமே போராட்டங்களில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தேச வளர்ச்சிக்கும் எதிரான ஒரு சிந்தனையினை விதைக்க பல வழிகளில் தீய சக்திகள் மறைமுகமாக முயல்கின்றன. இதனை முறையிலேயே தவிர்க்க வேண்டும். 
வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com