'ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது சரியா?' 

வேதனைக்குரியது
பிரதமர் கூறியிருப்பது சரியே. காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தில் லிங்காயத்துகள் தனிப் பிரிவு கோருவது சற்றும் ஏற்க இயலாதது. பசவர் என்னும் மகான் நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமென்று பாடுபட்டவர். அவ்வளவு உயர்ந்த மகானை கர்நாடக காங்கிரஸார் ஜாதிச் சிமிழுக்குள் அமுக்கி, அவரது பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய நிகழ்வாகும்.
என்.ஜகந்நாதன், சென்னை

கைவந்த கலை
ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்துவது என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கைவந்த கலை. பதவி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் முதல் ஆயுதமே ஜாதிதான். தேசிய கட்சிகளிலிருந்து மாநிலக் கட்சிகள் வரை ஜாதி, மதம் பார்த்துதான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றன. பிறகு இவர்களுக்கு எங்கிருந்து சமூகத்தைப் பற்றிய கவலை, அக்கறை வரப்போகிறது? மோடி சொல்வது நிஜம் என்றாலும், அவர் பயணிக்கும் பாதையும் அதுவேதான் என்பதும் உண்மையே.
பி.கே.ஜீவன், கும்பகோணம்

வெறும் அரசியல்
பிரதமர் நரேந்திர மோடி எதன் அடிப்படையில் ஜாதி ரீதியாக, காங்கிரஸ் சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது என்று தெளிவுபடுத்தவில்லை. வெறும் காங்கிரஸ் எதிர்ப்பாளராகத்தான் அவர் இதைக் கூறியிருக்கிறார் என்றுதான் கருத வேண்டியுள்ளது. பன்னெடுங்காலமாகவே இந்தியா ஜாதி ரீதியாகப் பிரிந்து கிடப்பதும், அதனை சுயநலம் மிகுந்த தலைமைகள் கலவரம் ஏற்படுத்த பயன்படுத்திக் கொண்டன என்பதே உண்மை. காங்கிரஸை மட்டும் குறை கூறுவது வெறும் அரசியலே.
கி.சந்தானம், மதுரை

உயர்ந்த நோக்கம் இல்லை
காங்கிரஸ் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் குடியரசுத் தலைவராகவும், ஆளுநர்களாகவும் மத்திய அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். ஜாதியின் பின்தங்கியவர்களை அதிகாரத்தில் அமர வைத்து, ஏற்றத் தாழ்வுகளைக் களைய காங்கிரஸ் முயற்சித்தது. பிராந்திய அளவில் இயங்கும் ஜாதிக் கட்சிகளோடும் கூட்டணி அமைத்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் ஆர்வம் காட்டுவதும் காங்கிரஸ் கட்சியே. இதுபோன்ற உயர்ந்த நோக்கம் பாஜகவில் இல்லையென்பதால், கருத்து சரியல்ல.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி

அரசியல் பேச்சு
மக்கள் அனைவரும் ஜாதி அபிமானத்தோடுதான் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் அதற்காக பிளவுபட்டு நிற்கவில்லை. மேலும் எல்லா கட்சிகளும் எந்தத் தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகம் வசிக்கின்றனர் என்பதை அறிந்து, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே தங்கள் வேட்பாளராகத் தெரிவு செய்கின்றன. எனவே, காங்கிரஸ் மட்டுமே மக்களை ஜாதி ரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு வெறும் அரசியல் பேச்சுதான்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

சரியான கருத்து
கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்குகளே தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பது வெள்ளிடைமலை. லிங்காயத் பிரிவினரை ஜாதி ரீதியாகப் பிரித்து, வாக்கு வேட்டையாட எண்ணுகிறார் முதல்வர் சித்தராமையா. இதனால் பாஜக பலவீனப்படக் கூடும். இதை எண்ணியே ஜாதிரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இது சரியே.
கே.கோவிந்தராஜன், அல்லூர்

உணராதது ஏனோ?
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பாஜக மத ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த முயல்வது நாடறியும். நாட்டிலுள்ள மற்ற உணர்வுபூர்வமான பிரச்னைகளைப் பேசாமல், தேர்தலுக்காக, அரசியல் ஆதாயத்திற்காகப் பேசப்படும் மேடைப் பேச்சையும், ஊடகப் பேட்டிகளையும் மக்கள் புறந்தள்ளுவார்கள் என பிரதமர் மோடி உணராதது ஏனோ?
உ.இராஜமாணிக்கம், கடலூர்

மறுக்க முடியாத உண்மை
ஜாதிய அமைப்புகளைத் தவிர்த்து எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்தியாவில் ஜாதிய அமைப்புகளைத் தடை செய்யவும் முடியாது. மதம் சார்ந்த சிந்தனையைவிட மோசமான சிந்தனை ஜாதிய சிந்தனை. காங்கிரஸ், பாஜக இரண்டும் ஜாதியவாதத்தையும் மதவாதத்தையும் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகின்றன என்பது முற்றிலும் உண்மையே.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி

தவறான குற்றச்சாட்டு
எல்லா அரசியல் கட்சிகளுமே ஜாதி ரீதியாகத்தான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. ஜாதி அமைப்புகளை ஊக்கப்படுத்தி, தமக்கு வலுவான பின்புலத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆட்சியில் இருந்தால், தம் ஜாதியினருக்கு முறைகேடாக சலுகைகள் அளிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் மட்டுமே முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு தவறானது.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்

தேர்தல் உத்தி
ஜாதி, மதம், இனம், மொழி யாவற்றையும் கடந்து நாடு சுதந்திரம் பெற துணை நின்றது காங்கிரஸ். நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருக்குமே ஜாதியில் பற்றில்லை என்பது கண்கூடாகத் தெரிந்த உண்மை. எப்பொழுதுமே காங்கிரஸ் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சித்ததில்லை. இந்நிலையில், ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்கிற பிரதமரின் கூற்று அரசியல் காரணத்திற்கான உத்தி. சரியான கருத்தல்ல.
மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்

முறையன்று
ஜாதித் தீயை மற்ற காலங்களில் சாதாரணமாகவும் தேர்தல் காலங்களில் தீவிரமாகவும் மக்களிடையே வளர்ப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதற்கும் வேறுபாடு இல்லை. மக்களின் உணர்வுகளைச் சுலபமாகத் தூண்டிவிட அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று ஜாதி. ஆனால் காங்கிரஸ்சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கிறது என்று பிரதமர் பேசுவது முறையன்று. இப்பொழுது உள்ள மத்திய அரசும், மதம், மொழி சார்ந்த பிரச்னைகளை அப்படித்தான் கையாள்கிறது.
அ. கருப்பையா, பொன்னமராவதி

உண்மை இல்லை
சமூக மற்றும் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது காங்கிரஸ் மட்டுமல்ல. எல்லா கட்சிகளும்தான்! அதற்குக் காரணம், வாக்கு வங்கி அரசியல் மற்றும் அதிகார ஆசை. மதச் சார்பற்ற கட்சி என்ற முத்திரை குத்தப்பட்ட கட்சிகளும் மதம் மற்றும் ஜாதி அரசியலைத்தான் செய்கின்றன. வெற்று விளம்பரம் செய்து எப்படியாவது நம் இனத்து வாக்குகளைக் கணிசமாகப் பெற்றுவிட வேண்டும் என்பதே அவற்றின் நோக்கம். எனவே, பிரதமர் கருத்தில் உண்மை இல்லை.
மகிழ்நன், சென்னை

சரியான கூற்று
அரசியல் கட்சிகளுக்கு ஜாதி என்பது தேர்தல் வெற்றிக்குத் துணை புரிகிறது. ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவு படுத்தி வைப்பதைத்தான் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியானது ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவு படுத்துவது அதிகம். அவ்வகையில் தற்போதைய சூழலில் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்ற பிரதமரின் கூற்று சரியாகவே உள்ளது.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்

மாற்றம் தேவை
பிரதமரின் கூற்று ஓரளவு சரியே. அரசியல் கட்சிகள் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பேசிக்கொண்டு ஜாதி ரீதியாக சமூகத்தில் பிரச்னைகளை உருவாக்கி வாக்கு வங்கிக்காக செயல்படுகின்றன. அரசியல் கட்சிகள் மதசார்பின்மைக் கட்சி என்றும் மதவாதக் கட்சி என்றும் கூறிக் கொண்டு ஜாதி அடிப்படையில் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
பி.துரை, கல்புதூர்

எல்லாம் ஒரே மாதிரிதான்
ஏற்கெனவே நமது நாடு ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டுக் கிடக்கின்றது. இனிமேல் பிளவுபடுத்த ஒன்றுமில்லை. இந்தப் பிளவை அனைத்துக் கட்சிகளுமே தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி வருகின்றன. இதில் காங்கிரஸை மட்டும் தனிமைப்படுத்தி குறை கூற முயற்சிப்பது தவறு. இந்த விஷயத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரிதான்.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com