"வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழ் நாட்டில் அகம்-புறம் வாழ்க்கையையொட்டி சமூகம் அமைந்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி என்றும் இருந்து வருகிறது. சமூகத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இருதரப்பும் மணம் முடிக்காமல் சூழ்நிலை

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

தமிழ் நாட்டில் அகம்-புறம் வாழ்க்கையையொட்டி சமூகம் அமைந்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி என்றும் இருந்து வருகிறது. சமூகத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இருதரப்பும் மணம் முடிக்காமல் சூழ்நிலை காரணமாக சேர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் குழந்தைகள் பெரியவர்களானதும் திருமணம் பேசும்போது பெற்றோரின் முந்தைய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கின்றனர். ஆனால், திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாம் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது சரியே.

தேவசகாயம், ஈங்கூர்.

மாற்றத்தை ஏற்போம்

காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு காட்டுகிறது. பெண் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடந்த காலம் மாறி, கல்வி கற்று, வேலைவாய்ப்பு பெற்று ஆணுடன் சரிநிகர் சமமாக உள்ள காலத்தில், திருமணம் என்பது வெறும் சடங்காகிவிட்டது. ஆகையால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வியப்பை அளிக்கவில்லை. மதம், சாதி மாறிய திருமணத்தை ஒப்புக்கொண்டு, ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்ட நாம், திருமணம் செய்து கொள்ளாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோமா? மாற்றம் வரும்போது அதை ஏற்றுக் கொள்வதுதான் சரியானது.

பி.கே.ஜீவன், கும்பகோணம்.

தீர்ப்பை வரவேற்போம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறை காண்பது தவறு. எனினும் வயது வந்த -மனதளவில் பக்குவம் அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் கலாசாரச் சீரழிவு நிகழ வாய்ப்பில்லை. வயது வந்தவர்கள், முதியோர் இரு பாலரும் துணையை இழந்த உடன்பிறந்தவர்கள் (அண்ணன்-தங்கை) சேர்ந்தே ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வதில் தவறில்லை. கால மாற்றத்திற்கேற்ப மதம் சார்ந்தவர்கள் மதக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விதிவிலக்கு அளிக்கலாம். பெரும்பாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபெற யோசித்த பிறகே வழங்கப்படுகின்றன. நவீன வாழ்வின் மாற்றங்களையொட்டி வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை வரவேற்கலாம்.

ச.கந்தசாமி, சித்தலக்கரை.


ஏற்புடையதே!

வயது வந்த ஆணும் பெண்ணும் பால் இனக் கவர்ச்சியால் காதல் செய்து, கற்பு நெறிமுறையோடு, கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது சுதந்திரமான இல்லறத்தின் மாண்புணர்ந்த கற்பு நெறி மணவாழ்வாகும். இதுவே உலகின் நாகரிகம் தொடங்கி மனித இனம் பெருக வாழ்ந்த தொடக்க காலத்தின் பண்பாடாகும். களவு நெறியே கற்பு நெறியான காதற் பண்புகளால் இணைந்த இணையர் நல்லறமாக வாழ்வதற்குத் திருமணம் என்னும் விழாவும், பதிவும் தேவையில்லை என்பதை ஆழமாக உணர்ந்ததாலேயே, உச்சநீதி மன்றம் இப்படி தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு சரியானதேயாகும்.

மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.


தீர்ப்பு சரியே

விருப்பமில்லா இணையருடன் திருமணப் பந்தத்தால் கட்டுபட்டு வாழ்ந்து வதைபடுவோர்களுக்கு மத்தியில், வயது வந்த ஆணும் பெண்ணும் விரும்பியவருடன் இணைந்து, புரிந்து இசைபட வாழும் இல்லற நல்லுறவு ஏற்புடையதே. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே.

ஆ.முத்துக்கிருட்டினன், மதுரை.


சரியானதுதான்

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சேர்ந்து, பிரியாத நிலையில் வாழ வேண்டும் என்கிற நிலையில் "விவாகரத்து' கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இது சரியானதுதான். திருமணத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் சேர்ந்து வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் தீர்ப்பு! இதனை வரவேற்பதே சரி!

டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.


தீர்ப்பு ஏற்புடையதுதான்

ஓர் இயற்கை உணர்வுதான் ஆண்-பெண் சேர்க்கை. இதற்கு விளம்பரம் தேவையில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்ற தீர்ப்பு ஏற்புடையதுதான். ஓர் அறிவு முதல் ஐந்தறி வரை படைத்த உயிரினங்கள் திருமணம் செய்து கொண்டுதான் வாழ்கின்றனவா? எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பு சரியானதுதான்.

உ.இராசாமணி, மானாமதுரை.


ஏற்புடையதல்ல

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்புடையதல்ல. இந்தியாவின் பலம், மரியாதையே அதன் கலாசாரம்தான். இந்தத் தீர்ப்பு ஒருவர் பலருடன் வாழலாம் என்ற முடிவிற்கும் வரும். மேலை நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவைப் போன்று திருமணம் செய்துகொண்டு வாழுங்கள் என வலியுறுத்தி வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு சங்கடம் அளிக்கின்றது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் திருமணம் செய்துகொண்டு வாழவே விரும்புகின்றனர்.

ஆர்.சீனிவாசன், சிதம்பரம்.


மக்களை மாக்களாக்கும்

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களை மாக்களின் நிலைக்குக் கொண்டு செல்லும் தன்மையதாகும். ஆதி மனிதர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தியிருக்கலாம். நமது முன்னோர்கள், மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். அக்கட்டுப்பாட்டின்படி வாழ்க்கை நடத்துவதுதான் சிறந்த பண்பாகும்.

வை.பாவாடை, புதுச்சேரி.

வாழ்க்கை நிஜம்

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்னும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதல்ல. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற உயரிய நம்பிக்கையினை உடையது பாரதம். சமுதாய வாழ்க்கை முறை ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பிரதிபலிப்பதாக அமையும். அவ்வகையில், திருமணமும் அதைச் சார்ந்த சடங்குகளும் சமுதாயத்தின் வலுவான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தன்மையுடையன. தொல்காப்பியக் காலந்தொட்டே "கரணம்' என்பது சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது. வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாது சேர்ந்து வாழ்ந்தால் அது பலவகை சீர்குலைவுகள் ஏற்பட வழிவகை செய்யும்.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம். 


சரிவராது

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்பது தோல்வியடைந்த மேலைநாட்டுக் கலாசாரம். இந்தியாவுக்கு சரி வராது. இதுபோன்ற தம்பதிகள் அதிகளவில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவர். இதனால், பெண்களின் உடல், மனநிலைகள் பாதிக்கப்படும். இதுபோன்ற தம்பதிகளுக்குக் குழந்தைகள் பிறந்துவிட்டால், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சட்டபூர்வமாக யார் பொறுப்பேற்பது? எதிர்காலம் என்னவாகும்? தற்போதுள்ள பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு என்ற போர்வையில், எதிர்காலத்தில் நிரந்தர அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

கலிகாலம் முற்றிவிட்டது

நமது பாரத நாட்டின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் தீர்ப்பு என்பதால் இது ஏற்புடையதல்ல. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு தந்தை பெயர் குறிப்பிடாமல் "சேர்ந்து வாழ்பவர்' எனக் குறிப்பிட்டால் அரசு ஆவணங்கள் ஏற்குமா? பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், சொத்துரிமை ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? காலம், காலமாக நம் முன்னோர்கள் கட்டிக்காத்த இல்லற மாண்பை தூள்தூளாக்கக் கூடிய இத்தீர்ப்பால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ? இத்தீர்ப்பு கலிகாலம் முற்றிவிட்டதன் அடையாளம்.

உ. இராசமாணிக்கம், கடலூர்.

தவிர்ப்பது நல்லது

குடிப்பது குற்றமல்ல. ஆனால், குடிக்காமல் இருப்பதே நல்லது. நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உண்பதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. என்றாலும், அவர்கள் இனிப்பைத் தவிர்ப்பதே நல்லது. சட்டம் அனுமதிக்கிறது என்பதற்காகவோ, சட்டம் தடுக்கவில்லை என்பதனாலோ ஒரு செயல் நல்ல செயலாக ஆகிவிடுவது இல்லை. திருமணத்தால் சில நன்மைகள் இருக்கின்றன. சில சிரமங்களைத் தவிர்க்கத் திருமணங்கள் தேவைப்படுகின்றன. திருமணம் செய்துகொள்ளாமல் வாழும்போது, திருமணத்தால் கிடைக்கும் சில நன்மைகளை இழக்க வேண்டிவரும்; சில சிரமங்களக்கு உட்பட வேண்டியும் வரும். அதனால், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை சட்டம் அனுமதித்ததில் தவறில்லை. ஆனால், அதைத் தவிர்ப்பதே நல்லது.

மு.சிதம்பர வில்வநாதன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com