"அமெரிக்க வால்மார்ட நிறுவனம் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவது தடைசெய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

போட்டி இருந்தால்தான் வணிகம் செழிக்கும். தான் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், போட்டிக்கு யாரும் வரக்கூடாது என்பது சரியல்ல.

தடை வேண்டாம்

போட்டி இருந்தால்தான் வணிகம் செழிக்கும். தான் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், போட்டிக்கு யாரும் வரக்கூடாது என்பது சரியல்ல. இப்பொழுது அமேசான் வியாபாரம் ஆன் லைனில் நடந்து வருகிறது. இதனால் யாரும் பாதிப்படையவில்லை. மேலும், மக்களில் ஒரு சிறிய அளவில் உள்ளவர்களே ஆன் லைன் வியாபாரத்தில் பொருள்கள் வாங்குகின்றனர். வால்மார்ட் ஆன் லைன் வியாபாரத்தில் ஈடுபட்டாலும் அனைவரும் அங்கே சென்று வாங்க மாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் மக்களுக்கு நியாயமான விலையில் பொருள்கள் கிடைக்கும். பெரிய வியாபார நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வரும்போது அதனுடன் போட்டி போடும் அளவுக்கு நம்முடைய திறமையையும் தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களுக்கு பயந்து அவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று கூறக்கூடாது.

- மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி


அனுமதிக்கலாம்

இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரம், வானிலை, விளைபொருட்களின் உற்பத்தி, நீராதாரம், மழை, மக்கள் தொகை, நாட்டின் பாதுகாப்பு முதலிய காரணங்களால் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சர்வதேச மதிப்பீட்டில் நம் நாடு கிட்டத்தட்ட ஒரு வல்லரசாகும். அமெரிக்க வால்மார்ட் வணிக நிறுவனம், சில்லறை வணிகம் செய்ய இந்தியாவுக்கு வருவதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் அமெரிக்க டாலர் மதிப்பில் கிடைக்கும் என்ற பொருளாதாரப் பரிந்துரைப்படியே அதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மலிவு விலையில் தரமான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அரசுக்கு வணிக வரி வருவாயும் கிட்டும். தடை வேண்டியதில்லை. அனுமதிக்கலாம்.

- மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்


ஐஸ்கட்டி மழை

அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவது விவரம் புரியாதவர்களுக்கு வேண்டுமானால் கசப்பாக இருக்கும். ஆனால், அமெரிக்கா சென்று வால்மார்ட்டில் கால் வைத்தவர்களுக்கு அதன் நன்மைகள் தெரியும். வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி வணிகம் மேற்கொள்கிறது வால்மார்ட். இங்குள்ள இடைத்தரகர்கள் விவசாயிகளின் உற்பத்தி விலையை விட பலமடங்கு கூடுதலாக லாபம் பார்க்கின்றார்கள். அவர்கள் போடும் கூப்பாடு தான் "வால்மார்ட் சில்லறை வணிகத்தில் கால்பதிக்கலாமா' என்பது. விவசாயிகள் உற்பத்திக்கான விலை அடிமாட்டு நிலைக்குத் தள்ளப்படாமல் இருக்க வால்மார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் தேவையே. இதுஅமில மழையல்ல; ஐஸ்கட்டி மழை.

-இரா. தளவாய் நாராயணசாமி, ஒக்கூர்


தவறான கருத்து

வர்த்தகம் இன்று வணிகமயமாகிவிட்டது. இதனைத் தடை செய்வது மக்களை ஏமாற்றுவதற்குச் சமம். எந்த வணிக நிறுவனமாக இருந்தாலும் தரமான பொருள்களை, தரமான விலையில் விற்க உரிமை உண்டு. மக்கள் வாங்குவதற்கு எந்த நிலையிலும் தடை இருத்தல் கூடாது. ஜனநாயகத்தில் எங்கும் எதிலும் தடை போடக் கூடாது.

- நா.முத்துக்கருப்பன், காரைக்குடி


ஆபத்தானது

அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைய கண்டிப்பாகத் தடை விதிக்க வேண்டும். இங்குள்ள பல சிறுதொழில் வணிகங்கள் இதனால் அழிந்து போகும். முதலில் ஆன்லைன் வணிகத்திற்கு வரும் இவர்கள் பிறகு நம் உள்நாட்டு சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். சில்லறை வணிகம் என்பது ஏழை எளிய மக்களுக்கானது. அதை வால்மார்ட் போன்ற பண முதலைகளிடம் தாரை வார்ப்பது மிகவும் ஆபத்தானது.

- எஸ்.வி.ராஜசேகர், ஆலப்பாக்கம்


மாயத்தோற்றம்

ஆன்லைன் வணிகம் என்பது நிச்சயமாக சில்லறை வணிகத்தை பெருமளவு பாதிக்கும். இதனால் நுகர்வோர் பலன் பெறுவார்கள். பொருட்களின் விலை குறைவாக இருக்கும் என்பதெல்லாம் மாயத்தோற்றம். கடல்வழி வந்து வாணிபம் செய்து நூற்றாண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய அந்நியரை நாம் மறந்து விடக்கூடாது. அன்று அறியாமை; இன்று அதிமேதாவித்தனம். நமக்கு ஆன்லைன் வர்த்தகம் வேண்டவே வேண்டாம்.

- ப.சரவணன், சிவகங்கை


அரசின் கடமை

சில்லறை வணிகத்தில் அமெரிக்க வால்மார்ட் நுழைவதை தடை செய்ய வேண்டும். நமது நாட்டிலுள்ள உள்நாட்டுச் சந்தை வியாபாரிகளும், தெருவோர சிறுவணிகர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உள்நாட்டு விவசாயிகள், சிறுவணிகர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு மத்திய-மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். வால்மார்ட் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள் நம் நாட்டில் நுழைந்து சில்லறை வணிகத்தில் ஈடுபட்டால், நமது சொந்த நாட்டிலேயே நாம் அகதியாக மாறும் நிலை வரலாம். அந்நிய வணிக நிறுவனங்களின் வருகையை தடை செய்ய வேண்டியது அரசின் கடமை.

-வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்


நினைவிருக்கட்டும்

வால்மார்ட்டால் நமது சில்லறை வணிகம் சிதையும். வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகும். அந்நியர்கள் ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு விற்று நுகர்வு கலாசாரத்தை விரிவுபடுத்துவார்கள். பின்பு சில்லறை வணிகர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட பிறகு தங்களின் பொருள்களின் விலைகளை பன்மடங்கு உயர்த்தி லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். நஷ்டம் ஏற்பட்டால் திடீரென மூடுவிழாவும் நடத்துவார்கள். அன்று ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் நமது நாட்டை நாம் இழந்தது நினைவிருக்கட்டும்.

-பைரவி, புதுச்சேரி

போட்டியிட முடியாது

ஏற்கெனவே கிழக்கிந்திய கம்பெனியிடம் படித்த பாடம் நமக்கு மறக்காமல் இருக்கிறது. வணிகக் கடலில் உள்ள பெரிய பெரிய திமிங்கலங்களிடம் சாதாரண மீன்கள் போட்டியிட முடியாது. ஆரம்பத்தில் நுகர்வோருக்கு வால்மார்ட்டால் நன்மை கிடைத்தாலும், இறுதியில் தீமைதான் விளையும். நாளைய உலகில் ஆன்லைன் வணிகமே நமது பொருளாதாரத்தின் உயிராக மாறலாம். ஆனால், அதற்காக இன்று அந்த உயிர் போக வேண்டுமா?

- பேரா. த.வேலவன், திருக்கோவிலூர்


அபாயம் உள்ளது

இந்தியாவில் பெருவணிகம் செய்யும் மக்களை விட சில்லறை வணிகம் செய்பவர்களே அதிகம். அதிலும், ஏழை மக்களுக்கான சில்லறை வணிகர்கள் நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் பெருவாரியாக கடைகள் வைத்துள்ளனர். வால்மார்ட் ஆன்லைனில் நுழைவதால் சில்லறை வணிகர்களின் வியாபாரம் குறையும். ஆன்லைனில் வழங்கும் பொருள்கள் ரசாயனக் கலப்பு மிகுந்து இருக்கும். பழங்கள், காய்கறிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவை மக்களுக்கு ஊறு விளைவிப்பதுடன் உயிரையே பறிக்கும் அபாயம் உள்ளதையும் உணர வேண்டும். எனவே ஆன்லைன் வணிகம் உறுதியாக தடை செய்யப்பட வேண்டும்.

-எழில்சோம.பொன்னுசாமி, ஆவடி


கொள்ளை லாபம்

அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் இந்தியாவைக் குறிவைத்து சில்லறை வணிகத்தில் தடம் பதிக்க நினைக்கிறது. அதை அனுமதித்தால் இங்குள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களும், அவற்றின் பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். பொருள்களை சிறு விவசாயிகளிடமிருந்தும், சில்லறை வியாபாரிகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் வைத்து நுகர்வோரையும் பாதிக்க வைப்பர். இதனால் ஏழை எளிய வியாரிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

- உ.இராசமாணிக்கம், கடலூர்


பாதிப்புகள்

வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகத்தில் இந்தியாவில் செயல்படத் தொடங்கினால், சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படும். அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நிறுவனமான வால்மார்ட், சீனப் பொருள்களை இந்தியாவில் நுழைய விடும். ஏற்கெனவே சீனாவின் ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், செல்லிடப்பேசிகள், பட்டாசுகள் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், வால்மார்ட் மூலம் அதிக அளவிலான உற்பத்தி இந்தியத் தயாரிப்புகளை கடுமையாகப் பாதிக்கும். எனவே, தடை செய்வதே சரி.

-பி.கே.ஜீவன், கும்பக்கோணம்


கேள்விக்குறி

ஏற்கெனவே ஆன்லைன் வர்தத்கத்தால் நடுத்தர, சிறு, குறு வணிகர்கள் நசிந்து விட்ட நிலையில், சில்லறை வணிகத்திலும் வால்மார்ட் நிறுவனம் நுழைந்துவிட்டால் உள்ளூர் ஏழை, எளிய கிராமப்புற விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அது மட்டுமல்ல. ஆன்லைன் வர்த்தகம் என்ற போர்வையில் அமெரிக்கர்களால் புறக்கணிக்கப்பட்ட, தரமற்ற பொருள்கள்கூட இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது. அதனால், தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து சரியே!

-அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி


கண்ணை விற்று சித்திரம்

சிறு வணிகர்கள் நம் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது. வால்மார்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால் விலை குறைவாக பொருட்களைத் தர முடியும், இதனால் ஆன்லைன் வர்த்தகம் சிறந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய நிறுவனங்களின் நலன்களுக்காக சிறியவர்கள் பாதிப்படையக்கூடாது. சிறுவணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. இது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாகிவிடும்.

- ந.யாபேத்தாசன், பேய்க்குளம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com