'பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது சரியா?'

கண்டிக்கத்தக்கது
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் இதனால் பொய்த்துப் போய்விடும். எந்தெந்தப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனரோ, அந்தந்தப் பகுதிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் சென்று அங்குள்ள பெற்றோர்களிடம் பேசி, அவர்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும். எந்தவொரு பள்ளியையும் மூடக்கூடாது.
என்.காளிதாஸ், சிதம்பரம்.

அரசின் கடமை
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அப்பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது. தனியார் பள்ளிகளில் சேர முடியாத ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வியறிவைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அரசு அதிகாரிகள், கல்வி அறிஞர்களைக் கலந்து பேசி அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகர், ஆலப்பாக்கம்.

சரியான முடிவு
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளை மூடுவது சரியே. மிகக் குறைவான குழந்தைகளை ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் வைத்துக்கொண்டு, ஓரே ஒரு ஆசிரியர் ஐந்து வகுப்புப் பாடங்களையும் கற்பிக்க வேண்டியிருக்கிறது. இதனால் கல்வியின் தரம் குறைகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு அதற்குப் பதிலாக, அருகிலுள்ள பெரிய பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும்.
க.வெ.சுப்பிரமணியன், வலையபாளையம்.

வரலாற்றுப் பிழை
கல்விப்பணி என்பது லாப நட்டம் பார்க்கக்கூடிய தொழில் அல்ல. அது ஒரு சேவை. ஏழைகளுக்கும், எழுத்தறிவு எட்ட வேண்டும் என்று எண்ணி ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து கல்விக்கண் திறந்த காமராஜர் வாழ்ந்த மண்ணில் 890 கல்விக்கூடங்கள் மூடப்படவுள்ளது என்பது வரலாற்று பிழையாக அமைந்து விடக்கூடும். ஆகையால் பள்ளிகள் மூடப்படுவது என்பது சரியான செயல் அல்ல. அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும்.
கே.பி.அருணாச்சலம், எலவமலை.

நல்ல முடிவு
பத்துக்கும் குறைவான மாணவர்கள் வரும் பள்ளியைப் பராமரிக்க ஆகும் செலவு, ஆசிரியர் சம்பளம் மற்றும் இதர செலவுகளையும் பார்த்தால் நிச்சயம் லாபகரமானதாக இல்லை. குறைந்த மாணவர்கள் வரும் பள்ளியை மூடிவிட்டு அதில் ஏற்கெனவே வேலை செய்து வரும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் ஆசிரியர் பற்றாக்குறையும் தீரும். மூட முடிவு செய்த பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகள் இருந்தால், அதில் பயிலும் குழந்தைகள் வேறு பள்ளிக்குச் செல்ல சிரமப்படுவர் என்பது உண்மையே. எப்படியிருந்தாலும் குறைந்த மாணவர்களை வைத்து நடக்கும் பள்ளியை மூடுவது நல்லதுதான்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தரமான கல்வி
அரசின் முடிவு சரியல்ல. கல்விக்கூடங்களை அரசு வணிக நோக்குடன் பார்க்கக் கூடாது. பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கிறார்கள் எனில் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருக்கும்; ஒழுங்காக பாடம் சொல்லி கொடுக்காத ஆசிரியர்கள் இருப்பார்கள்; மாணவர்கள் கற்கும் சுற்றுச்சூழல் சரியாக இருக்காது. எனவே, குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளைக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட வேண்டும். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
என்.சண்முகம், திருவண்ணாமலை.

வேறு வழியில்லை
கட்டடப் பராமரிப்பு, மதிய உணவு, ஊதியம் என்று ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் ரூபாயை அரசு செலவிடுகிறது. இந்நிலையில், பத்துக்கும் குறைவான மாணவர்களே இருந்தால் அப்பள்ளிகளை எப்படி நடத்த முடியும்? பள்ளியை மூடுவது தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற பள்ளிகளுக்கு வீணாக செலவிடும் தொகையை, அடிப்படை வசதிகளின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல பள்ளிகளுக்குச் செலவிட்டு அவற்றை மேம்படுத்தினால், மாணவச் சமுதாயம் பயன்பெறும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

மனமாற்றம்
இது மிகவும் மோசமான முடிவு. அரசுப் பள்ளிகளில் நடப்பது என்ன? குறைவான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை. அதனை கவனிக்க வேண்டிய உயர் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. விளைவு? அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால் சேர்க்கையும் குறைந்து விடுகிறது. இதுபோன்ற நிலை இனி உருவாகாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை மூடுவதைவிட ஆசிரியர்கள் மனநிலையில் மாற்றம் வேண்டும். 
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

எதற்காக?
அரசு அதிகாரிகளே தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அருகிவிட்டது. ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரித்துவிட்ட நிலையில், 890 அரசுப் பள்ளிகளை நடத்துவது வீண் செலவு என்று அவற்றை மூடுவது என அரசு முடிவெடுத்திருப்பது சரியே. அரசுப்பணி வேண்டும்; அரசு ஊதியம் வேண்டும்; ஆனால் அரசுப் பள்ளி தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாமென ஆசிரியர் பணியிலுள்ளவர்களே நினைக்கும்போது அரசுப் பள்ளி எதற்கு?
உ.இராசமாணிக்கம், கடலூர்.

மறுபரிசீலனை தேவை
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது சரியல்ல. அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாணவர்களின் வருகைக் குறைவுக்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகலில் எவ்வளவு மாணவர்களின் வருகை குறைந்துள்ளது என்பதை ஆய்வுக்குழுவின் மூலம் அறிய வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் இணைந்து பேசி மீண்டும் பள்ளிகளை இயக்குவதுதான் சரியாகும். மூடுவது தவறான முடிவு.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

அடிப்படை வசதி
மாணவர்கள் குறைவு என்பதால் அரசுப் பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளின் வணிக நோக்கம் வெற்றி பெற்றதாக அர்த்தமாகிவிடும். தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளைச் சீரமைக்க அரசு முன்வர வேண்டும். குடிநீர், கழிப்பறை, நூலகம், போக்குவரத்து வசதிகள் இல்லாத பள்ளிகள் இங்கு இன்னும் உள்ளன. 890 பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து, அப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் அறிவுத் திருகோயிலாகத் திகழ வேண்டும். 
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

பணம் காய்க்கும் மரம்
பத்துக்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவது என்ற முடிவு சரியே! ஆனால் பள்ளிகளை மூடுவதற்கு முன்பு அரசானது அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், இதுபோன்ற பள்ளிகளில் எண்ணிக்கை ஏன் குறைந்து கொண்டு வருகிறது என்று ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். இல்லையேல் தனியார் கல்வி நிலையங்கள் பணம் காய்க்கும் மரமாக மாறிவிடும்.
சாமி.செல்லதுரை, பருத்திக்கோட்டை.

அவமானம்
மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை அரசு மூடுவது சரியே. அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் திறன் முன்புபோல் இல்லை. மிகவும் குறைந்து விட்டது. நல்ல அரசுப் பள்ளிகளை மூடுவதைத் தவிர்த்து, கற்பிக்கும் கட்டாயத்தை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கல்வி தரக்கூடிய பள்ளிகளை மூடுவது என்பது மாணவர்களின் கண்களைக் குருடாக்குவதற்குச் சமம். பள்ளிகளை அரசு மூட நினைப்பது அரசுக்கு பெருத்த அவமானம்.
தா. முருகானந்தம், தாழக்குடி.

அறப்பணி
தமிழக அரசு முடிவெடுத்திருப்பது சரியே. அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்பது ஊரறிந்த ரகசியம். காரணம், ஆசிரியர்களின் மெத்தனம். அவர்கள் மாணவர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி இருக்கின்றனர். பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை. வந்தாலும் ஒழுங்காகப் பாடம் கற்பிப்பதில்லை. ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் நிலைமை மாறும். 
ஏ.டி.சுந்தரம், சென்னிமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com